அது என்ன இறைச்சினு தெரிஞ்சுடுச்சு.. பெங்களூர் நாய் கறி சர்ச்சைக்கு அதிகாரிகள் விளக்கம்.. அதிர்ச்சி
பெங்களூர்: பெங்களூரில் நாய்க் கறி என்று பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில் அது உண்மையில் என்ன இறைச்சி என்று அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
கர்நாடக மாநில தலைநகரம் பெங்களூரில் நாய் இறைச்சியை விற்பதாக தகவல் வந்தது. ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறை நடத்திய சோதனையில் 150 பெட்டிகளில் சுமார் 1,500 கிலோ இறைச்சி இருப்பது தெரியவந்தது. உணவுப் பிரிவு அதிகாரிகளின் அந்த இறைச்சியின் மாதிரியை எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பினார்கள்.

இந்நிலையில், சில வியாபாரிகள், "பெங்களூரில் ஒரு கிலோ மட்டன் சராசரியாக ரூ.750 - 800க்கு விற்பனையாகிறது. ஆனால் கடந்த 6 மாதங்களாக சிலர் மட்டன் இறைச்சி என்று ஒரு கிலோ ரூ. 550 - 600க்கு விற்பனை செய்தனர். ராஜஸ்தானில் இருந்து நாய் இறைச்சியை வாங்கி வந்து விற்பனை செய்கிறார்கள். இதுகுறித்து கர்நாடக முதலமைச்சர், உணவுத்துறை, காவல்துறை ஆகியோருக்கு ஏராளமான புகார்கள் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை." என்று கூறியது பரபரப்பை கிளப்பியது.
பசுக்களின் காவலர் என்ற அடையாளத்துடன் வலம்வரும் புனித் கிரேஹல்லி என்பவர்தான் இந்தப் புகாரை எழுப்பியிருந்தார். அவர் கொலை வழக்கில் சிறை சென்று வந்தவர். நாய் கறி தகவல் வந்தவுடன் இந்து அமைப்பினர் ரயில்நிலையத்தில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்த புகாரில் புனித் மற்றும் இந்து அமைப்பினர் மீது காவல்துறை வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
மேலும், நாய் இறைச்சி கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் காவல்துறை மற்றொரு வழக்குப் பதிவு செய்தும் விசாரித்து வருகின்றனர். இந்த இறைச்சியை ராஜஸ்தானில் இருந்து எடுத்து வந்த அப்துல் ரசாக் என்ற வியாபாரி "நாங்கள் முறையாக தொழில் நடத்தி வருகிறோம். எங்களுக்கு ஜெய்பூரில் இறைச்சிக் கூடம் உள்ளது. இது ஆட்டு இறைச்சி தான். நாய் இல்லை. இதுதொடர்பான அனைத்து ஆவணங்களையும் அதிகாரிகளிடம் விரைவில் சமர்பிப்பேன்." என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், கர்நாடகா உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் ஶ்ரீனிவாஸ் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டிருப்பது நாய் இறைச்சி இல்லை. இது குஜராத் மற்றும் ராஜஸ்தானில் அதிகம் வளர்க்கப்படும் சிரோஹி என்ற சிறப்பு ரக ஆட்டின் இறைச்சி. அதன் வால் பகுதி சற்று நீளமானதாகவும், உடலில் ஆங்காங்கே புள்ளிகளும் காணப்படும். இதனால் மக்கள் அது நாய் என்று குழம்பிவிடுகிறார்கள். இதில் நாய் இறைச்சி இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. பெங்களூரில் மட்டன் சப்ளை குறைவாக இருப்பதால், சில வியாபாரிகள் வெளி மாநிலங்களில் இருந்து இந்த ஆட்டு இறைச்சியை வாங்கி அவர்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் விற்கிறார்கள். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்." என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், "கர்நாடக மாநிலத்தில் சிறப்பு ரக ஆடுகள் இல்லை. இதன் காரணமாக பெங்களூரு உள்பட கர்நாடகம் முழுவதும் ஆட்டு இறைச்சியில் 25 முதல் 30 சதவீதம் தட்டுப்பாடு நிலவுகிறது. மறுபக்கம் அதிகளவு இறைச்சி பயன்படுத்தும் மாநிலமாகவும் கர்நாடகா உள்ளது. இந்த இடைவெளியை நிரப்புவதற்காக சில வியாபாரிகள் வெளியில் இருந்து விலை குறைவான ஆட்டு இறைச்சிகளை வாங்கி விற்கிறார்கள்." என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications