ஆக்சிஜன் இல்லை... கர்நாடக அரசு மருத்துவமனையில் மூச்சு திணறி.. அடுத்தடுத்து 8 நோயாளிகள் பலியான சோகம்
பெங்களூரு: கர்நாடகாவின் கோலாரில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக எட்டு கொரோனா நோயாளிகள் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போலவே கர்நாடகாவிலும் கொரோனா பரவலின் 2ஆம் அலை தீவிரமாக உள்ளது. அங்கு தினமும் புதிதாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்படுகிறது.

தற்போது கர்நாடகாவில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பத் தொடங்கிவிட்டன. மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறையும் பெரும் பிரச்சினையாகக் கர்நாடகாவில் உருவெடுக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவின் கோலாரில் உள்ள எஸ்.என்.ஆர் அரசு மருத்துவமனையில் 20 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், ஆக்சிஜன் சரியா கிடைக்காததால் 26ஆம் தேதி நள்ளிரவு கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். எட்டு நோயாளிகள் இப்படி ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த கர்நாடக சுகாதார துறை அமைச்சர் கே சுதாகார், மருத்துவமனையில் ஆய்வு நடத்தினார். கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, கைவசம் உள்ள வென்டிலேட்டர்கள் குறித்து அங்கிருந்த மருத்துவர்களிடம் அவர் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினார். இருப்பினும் அவர்கள் அளித்த பதிலில் அமைச்சர் திருப்தியடையவில்லை.
இதையடுத்து மாவட்ட அறுவை சிகிச்சை நிபுணர், ஆக்சிஜன் இணைப்பு பிரிவு அதிகாரி உள்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். கர்நாடகாவில் திங்கள்கிழமை மட்டும் புதிதாக 31,830 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. மேலும், சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 180 பேர் பலியாகியனர்.












Click it and Unblock the Notifications