ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள்! ஆனா, இந்து பண்டிகைகளில் மட்டும்.. பாஜக தேர்தல் அறிக்கையில் பாரபட்சம்?
பெங்களூர் : கர்நாடகா சட்டமன்றத் தேர்தலையொட்டி பாஜக தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. பல்வேறு இலவச வாக்குறுதிகளோடு, பண்டிகை நாட்களில் ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச சிலிண்டர் வழங்கப்படும் பண்டிகை நாட்களில் மற்ற மத பண்டிகைகள் சேர்க்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு வரும் 10-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு, பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்காக இலவச வாக்குறுதிகளை வாரி வழங்கியுள்ளது பாஜக.

பாஜக தேர்தல் வாக்குறுதிகள் : அந்தவகையில், கர்நாடகாவில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர் வழங்கப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. பாஜக வென்றால் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு உகாதி, விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி பண்டிகை என ஆண்டுதோறும் 3 நாட்களில் இலவச சிலிண்டர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகள் அன்று மட்டும் இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கர்நாடகாவில் பாஜக மீது முஸ்லிம், கிறிஸ்தவர் உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
முஸ்லீம்கள் அதிருப்தி : கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், முஸ்லிம்களுக்கான நான்கு சதவீத ஓபிசி இடஒதுக்கீட்டை கர்நாடக அரசு ரத்து செய்து, லிங்காயத் மற்றும் வொக்கலிகாக்களுக்கு இட ஒதுக்கீட்டை பகிர்ந்து அளித்தது. ஓபிசி முஸ்லீம்களை 10 சதவீத EWS பிரிவுக்கு மாற்றவும் முடிவு செய்தது. இதனால் முஸ்லீம் வாக்காளர்கள் கடுமையாக அதிருப்தி அடைந்தனர்.
இதேபோல, பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பாவின் பேச்சும் இஸ்லாமியர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. "ஷிவமொக்காவில் 50 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் இருப்பதால் முஸ்லிம்களுக்கு ஆதரவாகப் பேச வேண்டும் என பாஜகவினர் யோசனை கூறுகின்றனர். நான் அவர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்கிறேன். எங்களுக்கு ஒரு முஸ்லீம் ஓட்டு கூட தேவை இல்லை.

இந்துக்கள் பண்டிகைக்கு மட்டும்? : தேசப்பற்று மிக்க முஸ்லிம்களும் கர்நாடகாவில் இருக்கிறார்கள். இஸ்லாமியர்களின் உடல்நலம் மற்றும் கல்வி சார்ந்த பிரச்சனைகளுக்கு நாம் ஏராளமான உதவிகளை செய்திருக்கிறோம். அந்த முஸ்லீம்கள் பாஜகவுக்கு ஓட்டு போடுவார்கள். இந்து மக்கள் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். கர்நாடகாவில் பாஜகவை தவிர வேறு எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் இந்துக்களுக்கு பாதுகாப்பு இருக்காது" எனப் பேசியிருந்தார் ஈஸ்வரப்பா.
இதனால், பாஜகவினர் வெளிப்படையாகவே முஸ்லீம்களுக்கு எதிராகச் செயல்படுவதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், தேர்தல் அறிக்கையில் பல்வேறு இலவச வாக்குறுதிகளை அளித்துள்ள பாஜக, இலவச சிலிண்டர்கள், இந்து பண்டிகைகளில் வழங்கப்படும் என தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications