நகராத பொம்மை.. சிடி ரவிக்கு சீட்! எடியூரப்பா இடத்தில் மகன் -கர்நாடக பாஜகவின் ஸ்டார் வேட்பாளர் லிஸ்ட்
பெங்களூரு: கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும்
189 பேர் கொண்ட பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சித் தலைமை வெளியிட்டு இருக்கும் நிலையில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மாநில அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளை சற்று பார்ப்போம்.
கர்நாடக தேர்தல்: பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக பாஜக அரசிம் பதவிக்காலம் நிறைவடைய இருக்கும் நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அம்மாநில சட்டசபைத் தேர்தலை அறிவித்தது. கர்நாடக மாநில தேர்தல் வாக்குப்பதிவு மே மாதம் 10 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவித்த தேர்தல் ஆணையம், மே 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக கூறியது.

இதில் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைக்க முயன்ற பாஜக, ஒரு பக்கம் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் மறுபக்கம் வேட்பாளர் தேர்விலும் கூடுதல் கவனம் செலுத்தியது. அதன்படி, பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகு பாஜகவும் இன்று முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. 189 தொகுதிகளை கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 52 புதிய வேட்பாளர்கள்.
ஸ்டார் வேட்பாளர்கள்: கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஷிகாவ்ன் தொகுதியில் போட்டியிட இருக்கிறார். கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா 1983 ஆம் ஆண்டு முதல் போட்டியிட்டு 7 முறை வெற்றிபெற்ற ஷிகாரிபுரா தொகுதியில் அவரது மகன் பிஒய் விஜயேந்திரா பாஜகவால் நிறுத்தப்பட்டு இருக்கிறார். பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு பாஜக பொறுப்பாளராகவும் இருந்த சிடி ரவி சிக்மகளூரு தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார்.
கர்நாடக மாநில அமைச்சர் வி சோமன்னா 2 தொகுதிகளில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். தான் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் சாம்ராஜ்நகர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதுடன், வருணா தொகுதியிலும் அவரை பாஜக தலைமை நிறுத்தி உள்ளது. கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையாவை எதிர்த்து அவர் வருணா தொகுதியில் போட்டியிடுகிறார்.
உற்று நோக்க வைத்த நகர்வு: அதேபோல் கர்நாடக அமைச்சரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஆர்.அசோகும் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். வழக்கமான தான் போட்டியிடும் பத்மநாபநகர் தொகுதியோடு சேர்த்து கனகபுரா தொகுதியிலும் அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் மாநில தலைவர் டிகே சிவக்குமாரை எதிர்த்து அவர் களம் காண்கிறார். கர்நாடக அமைச்சர் பி ஸ்ரீராமுலு பெல்லாரி புறநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அதேபோல் பாஜக மூத்த தலைவர்களான ரமேஷ் ஜார்கிஹோ கோகாக் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார். முதோல் தொகுதியில் பாஜக வேட்பாளராக கோவிந்த் எம் கர்ஜோல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அதானி தொகுதியில் பாஜக வேட்பாளராக மகேஷ் குமதாஹல்லியை நிறுத்தி இருப்பது இதில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. காரணம், அம்மாநில முன்னாள் துணை முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான லக்ஷ்மன் சவாடி மகேஷுக்கு சீட் கொடுத்தால் அந்த தொகுதியில் பாஜக வெற்றிபெறாது என்று எச்சரித்து இருந்தார். ஆனால், அதையும் மீறி அவருக்கு தலைமை வாய்ப்பு அளித்து உள்ளது.












Click it and Unblock the Notifications