கையில் சிகரெட் + மதுபானம்.. திறமையை விட ஹிந்தி முக்கியம்.. ‛கார்ப்பரேட் கல்சரால்’ குமுறும் Techie
பெங்களூர்: திறமையை விட ஹிந்தி தெரிந்திருந்தால் தான் பிழைக்க முடியுமா? சிகரெட் + மதுபான குவளையை கையில் வைத்திருந்தால் தான் நல்லவர் என்ற மனநிலைக்கு தள்ளும் எழுதப்படாத கார்ப்பரேட் நிறுவனங்களின் விதிகளை குறிப்பிட்டு சாப்ட்வேர் இன்ஜினியர் தனது மனக்குமுறலை கொட்டி தீர்த்துள்ள பதிவு இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கார்ப்பரேட் நிறுவனங்கள்.. அதிக சம்பளத்தை அள்ளி கொடுப்பதாக அடையாளம் காட்டப்படுகிறது. இதனால் தான் பலரும் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணி செய்ய ஆசைப்படுகின்றனர். மேலும் தற்போதைய இளைஞர்களுக்கு ஐடி உள்பட எந்த துறையை எடுத்தாலும் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் பணி செய்வது தான் கனவாகவே இருந்து வருகிறது.

இந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் ‛வொர்க் கல்சர்' என்பது முற்றிலும் வித்தியாசமானது. கிராமப்புறங்களில் இருந்து வெளியுலகம் தெரியாத ஒருவர் திடீரென்று ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் நுழைந்தால் முதலில் அங்கு பணி செய்பவர்களை பிரமிப்பாக பார்ப்பார். அவர்களின் பேச்சு, நடை, உடை, பாவனைகளை பார்த்து சற்று மிரண்டு கூட போவார்.
அதேபோல் தன்னை விட வயது அதிகமானவர்களை பெயர் சொல்லி அழைப்பது. ஆண், பெண் பாகுபாடு இன்றி பழகுவது உள்ளிட்டவை அந்த நபருக்கு சற்று புதிதாக தான் இருக்கும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக கார்ப்பரேட் நிறுவனங்களில் பணி செய்தால் இன்னும் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதை தான் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் மனக்குமுறலாக வெளிப்படுத்தி உள்ளார். மாறிவரும் கார்ப்பரேட் நிறுவனங்களில் இருக்கும் எழுதப்படாத விதிகளை பற்றி அந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் தனது ரெடிட் (Reddit) வலைதள பக்கத்தில் எழுதி உள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛நான்கு ஆண்டுகள்.. 3 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்.. பல நகரங்களில் பணி.. ஆனால் இன்று அலுவலக மேஜையில் அமரும்போதெல்லாம் ஒரு கேள்வி எழுகிறது. ஏதோ குழப்பமான மனநிலையில் தான் பயணிக்கிறேன். இந்த குழப்பமான மனநிலை பற்றி யோசித்து கொண்டிருக்கிறேன். என்னை விட்டு விடுங்கள்.. நான் தனி ஆள் இல்லை என்று சொல்ல தோன்றுகிறது. இதற்கு முக்கிய காரணம் சொல்லப்படாத சில விதிகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் பின்பற்றுவது தான். நான் சொல்வதை கற்பனை செய்து பாருங்க.
அலுவலகத்தில் மீட்டிங்கிற்கு செல்கிறோம். மீட்டிங் அனைவருக்கும் பொதுவான ஆங்கில மொழியில் How's Your Day என்பதில் தொடங்குகிறது. அதன்பிறகு படிப்படியாக அடுத்த 30 நிமிடத்தில் மொத்தமாக மாறிவிடுகிறது. ஹிந்தி மொழிக்கான ரேபிட் ஃபயர் போட்டி போல் மொத்த மீட்டிங்கையும் ஹிந்தி மொழி ஆக்கிரமித்து விடுகிறது. கேலி, கிண்டல்கள் செய்கின்றனர். ஐடியாக்கள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் ஹிந்தி தெரியாத நாம் ஜஸ்ட் மண்டையை மட்டுமே அசைக்க வேண்டி உள்ளது'' என்று ஹிந்தி மொழி அலுவலகத்தை மொத்தமாக ஆக்கிரமித்து விடுகிறது. இதனால் ஹிந்தி தெரியாமல் இருப்போர் கஷ்டத்தை எதிர்கொள்கின்றனர் என்று புலம்பி உள்ளார்.
மேலும் அவர் தனது பதவில், ‛‛இன்னெரு விஷயத்தையும் சொல்கிறேன். இதுவும் அலுவலகத்தின் ரூல் புக்கில் இல்லாதது தான். smoke breaks = networking gold. ஒவ்வொரு மணிநேரத்திலும் அலுவலக பால்கனி என்பது புகை மண்டலமாக மாறிவிடுகிறது. இந்த வேளையில் புராஜெக்ட் பற்றி விவாதிக்கின்றனர். மேனேஜர்களை பற்றி புறம் பேசுகின்றனர். வேறு சில விஷயங்களை பார்க்கின்றனர். புகைப்பழக்கம் இல்லாத என்னிடம், நீங்கள் சிகரெட் புகைப்பது இல்லையா? ஆரோக்கியமான நுரையீரலுக்கு வாழ்த்து என்று சொல்லி பால்கனிக்கு செல்கின்றனர். நான் எனது கம்ப்யூட்டரின் ஸ்கிரீனை பார்த்து வேலை செய்வதோடு, அங்கு நடக்கும் முக்கிய விவாதத்தில் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது.
அதேபோல் அலுவலக பார்ட்டிகளில் மதுபானம் குடிக்கும் பழக்கம் உள்ளது. ஒருவேளை மதுபானம் அருந்தும் பழக்கம் இல்லாவிட்டால் ‛போர் அடிக்கும் நபர்' என்று முத்திரை குத்தப்படுகிறீர்கள். மதுபான கோப்பைகளை வைத்து Cheers செய்யாவிட்டால் நீங்கள் பேயாக கருதப்படுகின்றனர். ஏன் நீங்கள் மதுபானம் குடிப்பது இல்லை? என்ற கேள்விகள் வருகின்றன. அவர்களை விட்டு வரும்போது தனித்து விடப்படுகிறீர்கள். அதோடு இரவு முழுவதும் நாம் ஏன் மதுபானம் குடிப்பது இல்லை என்ற கேள்விகள் கேட்டு கொண்டே இருக்கும் நிலை வருகிறது.
ஆனால் எனது கேரியர் க்ரோத் என்பது எனது திறமையை சார்ந்து மட்டுமே இருக்கும். வெறுமனே சிகரெட் புகைப்பது, ஹிந்தியில் ஜோக் அடிப்பதன் அடிப்படையில் தான் அமைகிறதா நான் யாருடைய விருப்பத்தையும் கேள்வி கேட்க விரும்பவில்லை. ஆனால் இதுபோன்ற செயல்கள் எனக்கு சலிப்பை தருகிறது. மீட்டிங்கில் வெறுமனே அமைதியாக மட்டுமே இருக்க கட்டாயப்படுத்துகிறது. அனைவரும் சிரிக்கும்போது சிரிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மட்டுமே தருகிறது. இது "snowflake syndrome'' இல்லை. மாறாக இந்த இடங்களிலும் உங்களின் திறமை என்பது உங்களின் திறமையை சார்ந்து மட்டுமே இல்லை'' என்று குமுறி உள்ளார்.
இந்த பதிவு தற்போது வைரலாகி உள்ளது. பலரும் இந்த பதிவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ஒருவர், ‛‛நான் உங்களுடன் உடன்படுகிறேன். கன்னட மொழி பேசும் மக்கள் மத்தியில் ஹிந்தி பேசும் ஒருவர் இத்தகைய சூழலில் இருந்தால் அவர் அதனை அவமானமாக நினைப்பது இல்லை. அதோடு நான் பலமுறை கவனித்துள்ளேன். கன்னட மொழி பேசுவோர் அந்த மொழி தெரியாத ஹிந்தி மக்களிடம் ஹிந்தியில் பேசுகின்றனர். இதன்மூலம் ஹிந்தி மொழி பேசுவோரை மகிழ்ச்சியாக வைத்து கொள்க முயல்கின்றனர்'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் அவருக்கு நேர்ந்த கதியை ஹிந்தி மொழி பேசுவோர் மீது யாரும் திணிப்பது இல்லை என்று அந்த நபர் தெரிவித்துள்ளார்.
இன்னொருவர், ‛‛நானும் பல இடங்களில் கவனித்துள்ளேன். இது ரொம்ப கொடுமையானது. உயர்மட்ட அளவில் நமக்கு பிரச்சனை வரும்போது அதனை மாற்றம் செய்ய நானும் முயற்சி செய்துள்ளேன். சிகரெட் புகைப்பது, மதுபானம் குடிப்பது என்பது இப்போது கல்சராக மாறிவிட்டது. அதோடு இது பிரச்சனைக்குரிய ஒன்று என்பதை உண்மையாகவே ஒப்புக்கொள்ள வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
அதேபோல் மற்றொருவர், ‛‛இதுவும் பணியிடங்களில் நடக்கும் ஒருவகையான அரசியல் தான். நம்மிடம் உள்ள டெக்னிக்கல் ரீதியிலான திறமையை விட மற்றவர்களிடம் பழகும் விதம் என்பது அதிக வெயிட்டேஜாக உள்ளது. நானும் எனது தொடக்க காலத்தில் இதுபோன்ற பிரச்சனையை சந்தித்து இருக்கிறேன். ஆனால் நான் வடஇந்தியர்களுடன் சேர்ந்து ஹிந்தி கற்றுக்கொண்டேன். தெலுங்கு, தமிழ் மொழியையும் கற்று கொண்டேன். கன்னடா என்பது எனது தாய்மொழி'' என்று கூறி அனைத்து மொழிகளையும் கற்று கொள்ளும்படி கூறியுள்ளார்.
இன்னொருவர், ‛‛என்னால் மொத்தமாக புரிந்து கொள்ள முடிகிறது. நான் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவர். எனக்கும் முழுமையான ஹிந்தி என்பது சேலஞ்ச்சாக தான் இருக்கிறது. பல நேரங்களில் ஹிந்தி மொழி பேசினால் அதன் அர்த்தங்களை புரிந்து கொள்ள சிரமப்படுகிறேன். உங்களுக்கு ஸ்மோக்கிங் பழக்கம் இல்லாவிட்டாலும் கூட அவர்களுடன் நீங்கள் உரையாடுவதற்காக வெளியே செல்லலாம்'' என்று கூறியுள்ளார்.
இந்த ரெடிட் வலைதள பக்கம் சமீபகாலமாக ஒவ்வொருவரும் தங்களின் பணி அனுபவம், அலுவலகத்தில் இருக்கும் கட்டுப்பாடுகள், அதனால் ஏற்படும் மன உளைச்சல்கள் குறித்த கருத்துகளை பதிவிட்டு ஊழியர்கள் மனக்குமுறலை கொட்டி தீர்க்கும் இடமாக மாறி உள்ளது. அந்த வகையில் சாப்ட்வேர் இன்ஜினியரின் இந்த பதிவு தற்போது வலைதள பக்கங்களில் வெளியாகி பரவி வருகிறது.
சரி இது இருக்கட்டும். உங்களின் கார்ப்பரேட் நிறுவன வாழ்க்கையில் என்ன நடக்கிறது? என்பதை கமெண்ட்டில் ஒற்றை வரியில் சொல்லிவிட்டு செல்லுங்கள். இந்த கார்ப்பரேட் உலகம் இப்போது எப்படி இருக்கிறது? என்பதை மற்றவர்களும் அறிந்து கொள்ளட்டும்.












Click it and Unblock the Notifications