தலை விரித்தாடிய ஊழல்? 12 வருடத்தில் பெங்களூரின் முக்கிய மேம்பாலத்தில் பெரிய ஓட்டை.. மக்கள் அச்சம்
பெங்களூர்: பெங்களூரில் உள்ள முக்கிய மேம்பாலங்களில் ஒன்றான சுமனஹள்ளி மேம்பாலத்தில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
பெங்களூர்... சிலிக்கான் சிட்டி, பூங்கா நகரம் எனும் புனைப்பெயருடன் இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற நகரங்களில் ஒன்றாக உள்ளது. இங்குள்ள ஐடி நிறுவனங்களால் ஆண்டுதோறும் பெங்களூர் நகரை நோக்கி செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
தற்போதைய சூழலில் பெங்களூர் நகரின் மக்கள் தொகை என்பது ஒரு கோடியை தாண்டியுள்ளது. சாலைகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்படுகின்றன. இதன் காரணமாக பெங்களூரில் தீர்க்க முடியாத பிரச்சனையாக போக்குவரத்து நெரிசல் உள்ளது.

12 ஆண்டு மேம்பாலம்
இருப்பினும் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக பல இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நாகரபாவி - டாக்டர் ராஜ்குமார் சமாதியை இணைக்கும் மாகடி ரோட்டில் அவுட்டர் வெளிவட்ட சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கோரகுண்டேபாளையா-நாயண்டஹள்ளியை இணைக்கும் வகையில் இந்த பாலம் 4 வழிச்சாலை போல் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் கட்டி 12 ஆண்டுகள் ஆகிறது. இந்த மேம்பாலத்தை பிடிஏ எனும் பெங்களூர் வளர்ச்சி குழுமம் மேற்கொண்டது. இதன்மூலம் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது.

பாலத்தில் விழுந்த பெரிய ஓட்டை
இந்நிலையில் தான் கோரகுண்டேபாளையா-நாயண்டஹள்ளி பாலத்தில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது. சுமனஹள்ளி அவுட்டர் ரிங் ரோட்டுக்கு மேல் செல்லும் பாலத்தில் கம்பிகள் வெளியே தெரியும் வகையில் ஓட்டை விழுந்துள்ளது. இதனால் பாலத்தின் பாதுகாப்பு, உறுதிதன்மை என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இதுபற்றி அறிந்த அதிகாரிகள் பாலத்தில் ஓட்டை விழுந்த பகுதியை சுற்றி இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்துள்ளனர். அதோடு நாயண்டஹள்ளியில் இருந்து லக்கேரே நோக்கி செல்லும் வாகனங்கள் மெதுவாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2வது முறையாக விழுந்த ஓட்டை
இந்த பாலத்தில் ஓட்டை விழுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 2019 நவம்பர் மாதம் ஒரு முறை பாலத்தின் இன்னொரு இடத்தில் ஓட்டை விழுந்தது. இதுபற்றி பெங்களூர் மாநகராட்சியின் சாலை உள்கட்டமைப்பு பிரிவி்ன தலைமை என்ஜினீயர் பிஎஸ் பிரகலாத் கூறுகையில், ‛‛பாலத்தில் ஓட்டை விழுந்துள்ளதை சீரமைக்கும் பணியை துவங்க உள்ளோம்'' என கூறியள்ளார். அதன்படி இந்த பாலத்தின் சீரமைப்பு பணி நாளை துவங்கி நடைபெற உள்ளது.

பெங்களூர் மாநகராட்சி
முன்னதாக கடந்த 2006ம் ஆண்டில் பெங்களூர் வளர்ச்சி குழுமம் (பிடிஏ) சார்பில் பாலம் கட்டும் பணி துவங்கியது. அந்த சமயத்தில் பாலம் கட்டும் நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் பாலம் கட்டும் நிறுவனம் மாற்றம் செய்யப்பட்டது. 4 ஆண்டுக்கு பிறகு 2010ல் பாலம் கட்டும் பணி முழுவதும் முடிந்தது. அதன்பிறகு பாலம் கடந்த 2016ல் பெங்களூர் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது பாலத்தை பெங்களூர் மாநகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது.

ஊழல் குற்றச்சாட்டு
இந்நிலையில் தான் ‛‛பாலத்தை தரமற்ற முறையில் போட்டதே இதற்கு காரணம். இதில் ஊழல் நடந்துள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும், பாலத்தை உடனடியாக சரிசெய்து பாதுாப்பு, உறுதித்தன்மையை உறுதி செய்ய வேண்டும். அதோடு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications