கல்லூரி மாணவி டூ கர்ப்பிணி.. 8 மாதமாக மிஸ்ஸான பெண்ணை ஆதார் வைத்து கண்டுபிடித்த போலீஸ்.. எப்படி?
பெங்களூர்: பெங்களூரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது பெற்றோர் மீதான கோபத்தில் வீட்டை விட்டு தோழியுடன் வெளியே சென்றார். 8 மாதங்களாக அவர் பற்றிய துப்பு எதுவும் கிடைக்காமல் போலீசார் திணறிய நிலையில் ஆதார் கார்டு வைத்து இப்போது அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். விசாரணையில் அவர் காதல் திருமணம் செய்து கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது. என்ன நடந்தது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
பெங்களூர் வித்யாரண்யபுராவை சேர்ந்தவர் 18 வயது மாணவி. இவர் 2ம் ஆண்டு பியூசி படித்து வருகிறார். அதேபோல் இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த மைனர் பெண் ஒருவர் முதலாம் ஆண்டு பியூசி படித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் தோழிகள். இருவரும் ஒன்றாக கல்லூரி சென்று வவருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி இருமாணவிகளும் தங்களின் பெற்றோர்களிடம் கல்லூரி சென்று வருவதாக கூறிவிட்டு சென்றனர். அப்போது அவர்கள் 2 பேரும் செல்போன், ஏடிஎம் கார்டு உள்பட பிற பொருட்களை எடுத்து செல்லவில்லை. கல்லூரி பேக் மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை மட்டுமே எடுத்து சென்றார்.
ஆனால் அன்று இரவு நீண்ட நேரம் ஆகியும் இருமாணவிகளும் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் சந்தேகம் அடைந்தனர். கல்லூரி உள்பட தோழிகளிடம் அவர்களை பற்றி விசாரித்தனர். பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. தோழிகளிடம் விசாரித்தபோது தான் மாணவிகள் 2 பேரும் சாம்ராஜ்நகர் மாவட்டம் மலை மாதேஸ்வரன் கோவிலுக்கு சென்றதும், அங்கிருந்து அவர்கள் வீடு திரும்பாதததும் தெரியவந்தது.
இதனால் மாணவிகளின் பெற்றோர்கள் உடனடியாக பெங்களூர் வித்யாரண்யபுரா போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் மாணவிகள் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் தேடும் பணி தீவிரமாக்கப்பட்டது. மொத்தம் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. மும்பை, சென்னை, கோவை, டெல்லி, வாரணாசி, கேரளா, சாம்ராஜ்நகர், மைசூர் உள்பட 100க்கும் அதிகமான இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை.
மாணவிகள் எங்கு உள்ளனர்? அவர்களின் நிலை என்ன? என்பது பற்றி எதுவும் தெரியவில்லை. இதனால் தனிஷ்கா மற்றும் அவரது தோழியின் பெற்றோர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். தங்களின் மகள்களை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர். இந்த மனு மீது விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை சிஐடி வசம் ஒப்படைத்தது. இதற்கான உத்தரவு கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து சிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இருமாணவிகளிடமும் செல்போன் இல்லாததால் அவர்களை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு கடும் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் 2ம் ஆண்டு பியூசி படிக்கும் மாணவியிடம் ஆதார் அட்டை இருப்பதை சிஐடி போலீசார் அறிந்து அதன் வழியாக துப்பு துலக்க முயன்று வந்தனர். இந்நிலையில் தான் சமீபத்தில் 2ம் ஆண்டு மாணவி தனது ஆதார் கார்டு விவரங்களை வழங்கி அரசு சுகாதார திட்டத்தில் உதவித்தொகைக்கு விண்ணப்பம் செய்திருந்ததும், அப்போது அவரது கணவரின் செல்போன் எண்ணை கொடுத்து ஓடிபி பெற்றிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சிஐடி போலீசார் அந்த செல்போன் எண்ணை கண்டுபிடித்து அந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது தான் 2ம் ஆண்டு மாணவியை அந்த இளைஞர் காதலித்து திருமணம் செய்து கர்ப்பமாக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவியை போலீசார் மீட்டனர்.அதேவேளையில் அவரது தோழியான இன்னொரு மாணவியின் நிலை என்ன? அவர் எங்கிருக்கிறார்? என்பது தெரியவில்லை. அவரை தேடிக்கண்டுபிடிக்கும் பணியில் சிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதுபற்றி சிஐடி போலீசார் கூறுகையில், ''2ம் ஆண்டு பியூசி மாணவியை அடிக்கடி அவரது பெற்றோர் திட்டி வந்துள்ளனர். அதேபோல் அவரது தோழியான முதலாம் ஆண்டு மாணவியின் வீட்டில் ஆண் குழந்தை இல்லை. ஆண் வாரிசு இல்லை என்பதால் அவரது பெற்றோர் முதலாம் ஆண்டு மாணவியை ஒதுக்குவதாக நினைத்துள்ளார்.
இதனால் இருவரும் விரக்தியடைந்துள்ளனர். மாணவிகள் இருவரும் வாழ்க்கையை வெறுத்தனர். தங்களின் குடும்பத்தினர் தங்களை புறக்கணிப்பதாக நினைத்து வீட்டை விட்டு வெளியேறினர். கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி பெங்களூரில் இருந்து முதலில் மைசூர், பிறகு சாம்ராஜ்நகர் சென்றுள்ளனர். அங்கு தற்கொலை செய்ய முடிவெடுத்தனர்.
இந்த சமயத்தில் தான் மாணவிகள் இருவரும் 2 இளைஞர்களை சந்தித்துள்ளனர். அவர்கள் 4 பேரும் எதார்த்தமாக பேசினர். அப்போது மாணவிகள் தங்களுக்கு பெற்றோர் யாரும் இல்லை. இருவரும் அக்காள், தங்கை என்று கூறியுள்ளனர். அப்போது ஒரு இளைஞர் 2 பேரையும் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த இளைஞர் 2ம் ஆண்டு பியூசி மாணவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மாணவி கர்ப்பமானார். கர்ப்பிணியாக கனகபுரா தாலுகாவில் உள்ள கிராமத்தில் வசித்து வந்தார். அங்கு அவரை மீட்டுள்ளோம். இருப்பினும் அவரது தோழியான பியூசி முதலாம் ஆண்டு பியூசி மாணவி எங்கு என்று தெரியவில்லை. அவரை தேடி வருகிறோம்'' என்றனர்.


Click it and Unblock the Notifications
