பிறந்தது சென்னை தான்.. ஆனா கன்னடா தெரியுமா? பிரசாரத்தில் தமிழர்களிடம் சிவராஜ் குமார் திடீர் கேள்வி
பெங்களூர்: கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் நடிகர் சிவராஜ் குமார் காங்கிரஸ் வேட்பாளரான மனைவி கீதாவை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது தமிழ் மக்களிடம் தமிழில் பேசிய அவர், ‛‛நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை தான்'' என கூறியபோது திடீரென்று ‛‛உங்களுக்கு எல்லாம் கன்னடம் தெரியுமா'' என கேள்வி கேட்டார்.
கர்நாடகாவில் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. அங்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நாளை முதற்கட்டமாக பெங்களூரில் உள்ள 3 தொகுதி உள்பட 14 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அதன்பிறகு மே மாதம் 7 ம் தேதி வடகர்நாடகா மாவட்டங்களில் உள்ள மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மருமகளான கீதா போட்டியிடுகிறார். இந்த கீதா யார் என்றால் ராஜ்குமாரின் மூத்த மகனான நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி தான். கீதா காங்கிரஸ் சார்பில் சிவமொக்கா தொகுதியில் போட்டியிடுகிறார். சிவமொக்கா என்பது கீதாவின் சொந்த மாவட்டமாகும். இங்கு தான் கீதாவின் தந்தையும், முன்னாள் முதல்வருமான பங்காரப்பாவின் சொந்த ஊர் உள்ளது.
சிவமொக்கா தொகுதிக்கு மே மாதம் 7 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் சிட்டிங் எம்பியாக பாஜகவின் மூத்த தலைவர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவை எதிர்த்து கீதா போட்டியிட்டுள்ளார். இதனால் சிவமொக்கா தொகுதியில் கடும் போட்டி நிலவ உள்ளது. இந்நிலையில் தான் மனைவி கீதாவை ஆதரித்து நடிகர் சிவராஜ் குமார் சிவமொக்காவில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். சிவமொக்கா தொகுதியை பொறுத்தமட்டில் பத்ராவதி தாலுகாவில் அதிகளவில் தமிழர்கள் உள்ளனர். அதேபோல் சிவமொக்கா நகரிலும் தமிழர்கள் வசிக்கின்றனர்.
இந்நிலையில் தான் சிவமொக்கா லோக்சபா தொகுதியில் பிரசாரம் செய்த சிவராஜ் குமார் தமிழில் பேசினார். மேலும் அவர் தனது குடும்பத்துக்கும், சென்னைக்கும் இடையேயான பந்தத்தை நினைவு கூர்ந்தார். அதாவது மேடையில் கன்னட மொழியில் பேசிய சிவராஜ் குமார், ‛‛இங்கு தமிழ் மக்கள் ஜாஸ்தி உள்ளனர் தானே?'' என நிர்வாகிகளிடம் கேட்டார். அதற்கு அவர்கள், ‛ஆமா.. தமிழ் மக்கள் இந்த பக்கம் உள்ளனர்'' என்று சைகை காட்டினர்.
இதையடுத்து சிவராஜ் குமார் தமிழில் பேச தொடங்கினார். அப்போது அவர், ‛‛எல்லாருக்கும் வணக்கம்..ஜெயிலர் படம் பார்த்தீங்களா.. பிடிச்சதா.. கேப்டன் மில்லர் பார்த்தீங்களா.. பிடிச்சதா'' என கேள்வி கேட்டார். அதற்கு அங்கிருந்த தமிழர்கள் உற்சாகமாக கையை தட்டி படம் பார்த்தோம் சூப்பர் என பதிலளித்தனர். இதையடுத்து சிவராஜ் குமார், ‛‛தேங்க் யூ'' என கூறினார். மேலும் அவர் தொடர்ந்து பேசினார்.
அப்போது, ‛‛நான் கூட சென்னையில் தான் வளர்ந்தேன். அங்கு தான் நான் பிறந்தேன். அங்கு தான் படித்தேன். ராஜ்குமார் (சிவராஜ்குமார் தந்தை நடிகர் ராஜ்குமார்) பசங்க எல்லாருமே சென்னையில் தான் பிறந்தோம். நான், எனது 2 தம்பிகள் ராகவேந்திரா, புனித், லட்சுமி, பூர்ணிமா என எல்லாருமே சென்னையில் தான் பிறந்தோம். சென்னையில் எங்களுக்கு வீடு இருந்தது'' என்றார்.
இந்த வேளையில் திடீரென்று, ‛‛கன்னடா பேசுவீங்களா எல்லாருமே?'' என கேள்வி கேட்டார். அதற்கு அங்கிருந்தவர்கள் ஆமாம் என பதிலளித்தனர். இதை கேட்ட சிவராஜ்குமார் மீண்டும் கன்னடத்தில் பேச தொடங்கினார். அப்போது ‛‛நாங்கள் அங்கு இருந்தேபோது தமிழில் பேசினோம். நீங்கள் இங்கு இருக்கும்போது கன்னடத்தில் பேசுகிறீர்கள் அல்லவா?. இது தான் நல்ல குணம். மாநிலம் விட்டு மாநிலம் சென்றாலும் கூட ஒரு சம்பந்தம் இருக்க வேண்டும். நாம் எங்கு சென்றாலும் கூட அங்குள்ள மொழியை கற்க வேண்டும்.
ஏனென்றால் இங்கு (கர்நாடகா) சாப்பிட வேண்டும் என்றால் நாம் இங்குள்ள மொழிக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அதேபோல் நாங்கள் அங்கு (தமிழ்நாடு) உணவு சாப்பிட்டபோது அங்குள்ள மொழிக்கு மரியாதை கொடுத்தோம். அதோடு நாம் அனைவரும் அண்ணன்-தம்பிகள் தான். பிரச்சனைகள் வந்தால் அதனை தீர்த்து கொள்ள வேண்டும். பிரச்சனைகளை தீர்த்து கொள்ள அரசு உள்ளது. அந்த விஷயத்தில் நாம யாரு?'' என கேள்வி எழுப்பினார்.
அதன்பிறகு மீண்டும் தமிழில் பேசிய அவர், ‛‛இனி திரும்ப வரும்போது இன்னும் ஜாஸ்தி பேசுகிறேன். இப்போது இது போதும்'' எனக்கூறி உரையை முடித்தார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications