வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதா? பெங்களூர் வீட்டில் திடீரென வெடித்த மர்மபொருள்.. 2 பேர் காயம்
பெங்களூர்: பெங்களூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் திடீரென்று மர்மபொருள் வெடித்தது. இதில் செக்யூரிட்டி உள்பட 2 பேர் காயமடைந்த நிலையில் சம்பவ இடத்தில் இருந்து பேட்டரி, வயர்கள் கைப்பற்றப்ப்பட்டது சந்தேகத்தை கிளப்பி உள்ளது. வெடிகுண்டு ஏதேனும் தயாரிக்கப்பட்டதா? என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெங்களூர் புலிகேசி நகரில் உள்ள ஜார்மியா ரோட்டில் புதிதாக அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டத்தின் 5வது மாடியில் திடீரென்று மர்மபொருள் வெடித்தது. இதுபற்றி அறிந்தவுடன் அந்த கட்டத்தில் இருந்தவர்கள் உடனடியாக விரைந்து சென்று பார்த்தனர்.
அப்போது கட்டட தொழிலாளி ஒருவரும், செக்யூரிட்டி ஒருவரும் காயமடைந்து இருந்தனர். இருவரும் முகம் மற்றும் தலையில் காயமடைந்து இருந்தனர். உடனடியாக இருவரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் போலீசார், பயங்கரவாத ஒழிப்பு படையினர் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் விரைந்து சென்று சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.
அந்த இடத்தில் பேட்டரிகள், வயர்கள் கிடந்தன. அதனை கைப்பற்றிய அதிகாரிகள் பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு எடுத்து சென்றனர். இதுபற்றி பெங்களூர் போலீஸ் தரப்பில் கேட்டபோது, ''ஐஇடி வரை வெடிகுண்டு வெடித்தது என்று இப்போது சொல்வது சரியாக இருக்காது. முழு விசாரணைக்கு பிறகு தான் என்ன நடந்தது? என்பது தெரியவரும்'' என்றார்.
இந்த சம்பவம் பெங்களூர் மாநகர காவல் ஆணையர் சீமந்த் குமார் கூறுகையில், ''காயமடைந்த 2 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் இருந்து தான் எங்களுக்கு தகவல் கிடைத்தது. வெடிப்பு சம்பவம் நடந்த கட்டடத்தின் ஒருபகுதியில் பணிகள் முடிந்து மக்கள் குடியேறி உள்ளனர். இன்னொரு பகுதி தான் கட்டப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பற்றி விசாரிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் காயமடைந்த 2 பேரும் பெங்களூரை சேர்ந்தவர்கள் இல்லை. இருவரும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள். அவர்களிடம் விசாரித்து வருகிறோம். அவர்களின் சொந்த மாநிலம் மற்றும் கட்டட உரிமையாளர்களிடம் விசாரணை நடத்த உள்ளோம். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம். பெங்களூர் நகர் மக்கள் யாரும் பயப்பட வேண்டாம். '' என்றார்.
இதுபற்றி கர்நாடக உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கூறுகையில், ''கட்டத்தில் மர்மபொருள் வெடித்தது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. அங்கு ஒரு பொருள் வெடித்துள்ளது. 2 பேர் காயமடைந்துள்ளனர். அதனை மட்டும் தான் இப்போது சொல்ல முடியும். அங்கு கைப்பற்றப்பட்ட பொருட்கள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்தபிறகு தான் பிற விஷயங்களை தெரிவிக்க முடியும். ஏதேனும் ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டதா? இல்லாவிட்டால் வெடிப்பொருட்கள் ஏதேனம் வெடித்ததா? என்பது 'லேப்' ஆய்வுக்கு பிறகு தான் தெரியவரும்'' என்றார்.


Click it and Unblock the Notifications
