அக்காவை பிரிந்ததால் கோபம்! அத்தான் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! ‛நம்பியார்’ கால டெக்னிக்கால் கைது
பெங்களூர்: அக்காவை விவாகரத்து செய்த அத்தானை போலீசில் சிக்க வைக்கும் நோக்கத்தில் ‛நம்பியார்' காலத்து ‛டெக்னிக்'கை பயன்படுத்தி பெங்களூர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு தினமும் உள்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான விமானங்கள் வந்து செல்கின்றன.
இதனால் எப்போதும் விமான நிலையம் கூட்டம் நிறைந்து காணப்படும். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்... புரளி கிளப்பிய நபர் கைது

வெடிகுண்டு மிரட்டல்
இந்நிலையில் நேற்று அதிகாலை 3.50 மணியளவில் விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், அது வெடித்து சிதற உள்ளதாகவும் கூறி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் பேசினார். அப்போது அந்த நபர் தனது பெயரை தீபக் எனக் கூறினார். அதன்பின் உடனடியாக இணைப்பை துண்டித்துவிட்டார். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் விமான நிலையம் முழுவதுமாக தீவிரமாக சோதனையிட்டனர்.

‛புரளி’ என உறுதி
விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் காலை 7 மணி வரை தேடியபோதும் வெடிகுண்டு உள்ளிட்ட எந்த பொருளும் கிடைக்கவில்லை. இதன்மூலம் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரிக்க துவங்கினர். இதில் முக்கிய தகவல்கள் கிடைத்தன.

கைது
அதனடிப்படையில் பெங்களூர் வில்சன் கார்டனில் உள்ள விடுதியில் வசித்த சுபாசிஷ் குப்தா என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வெடிகுண்டு மிரட்டலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்தனர்.

அத்தானை பழிவாங்க...
இந்த விசாரணையின்போது அவரது அக்காவை தீபக் என்பவர் திருமணம் செய்தார். சமீபத்தில் அக்காவை தீபக் விவாகரத்து செய்தார். இதனால் அத்தானான தீபக்கை பழிவாங்க சுபாசிஷ் குப்தா முடிவு செய்தார். இதனால் தீபக் பெயரில் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. மேலும் கைதான நபர் சிறிதுகாலம் பெங்களூர் விமான நிலையத்தில் பணி செய்ததாக தெரிவித்த போலீசார் அவர் தனது சொந்த செல்போன் எண்ணில் இருந்து பேசிவிட்டு வெறும் பெயரை மட்டும் மாற்றி கூறி மிரட்டல் விடுத்ததால் எளிமையாக பிடித்துவிட்டோம் என்றனர்.