மீண்டும் ‘நித்தியானந்தா’- கைலாசாவில் இருந்து கூண்டோடு தூக்கும் சர்வதேச போலீஸ்- கர்நாடகாவுடன் ஆலோசனை!
பெங்களூர்: பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்படும் குற்றவாளியான நாட்டை விட்டு தப்பி ஓடிய போலி சாமியார் நித்தியானந்தா குறித்து கர்நாடகா போலீசாரிடம் சர்வதேச போலீஸ் தரப்பில் கூடுதல் விவரங்கள் கேட்டிருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டின் திருவண்ணாமலை எனும் திருவிடத்திலே பிறந்து.. பஞ்சை பராரியாக அலைந்து... மெல்ல மெல்ல குட்டி சாமியாராக வலம் வந்து.. ஒரு கட்டத்தில் ஆசீர்வதிக்கும் சாமியாராக உருவெடுத்து.. பின்னர் கதவை திற காற்று வரட்டும் தொடர் மூலம் தமிழ் கூறும் ஒட்டுமொத்த நல்லுலகத்துக்கு அறிமுகமானவ நபர்தான் சுவாமிஜி நித்தியானந்தா.

ஒருகட்டத்தில் நித்தியானந்தா சுவாமிகள் புகழ் கொடி கட்டிப் பறந்தது.. திருவண்ணாமலை தொடங்கி தமிழ்நாடு மட்டுமல்ல.. நாட்டின் பல பகுதிகளிலும் மூலை முடுக்குகளிலும் எத்தனை ஆசிரமங்கள் அமைக்க முடியுமோ அத்தனையும் அமைத்தார்... நித்தியானந்தா சுவாமிகள் ஆசிரமங்களைத் தேடி அலை அலையாக இளம் பெண்கள், பிஞ்சு சிறுவர்கள் படையெடுத்தனரோ அல்லது அழைத்துச் செல்லப்பட்டனரோ தெரியாது.. ஆனால் பிஞ்சு பிள்ளைகள் கூட்டம் கூட்டமாக குவிந்து கிடந்தனர்..
அந்த ஒருநாள் இரவு.. சன் டிவியில் வெளியான சில நிமிட வீடியோதான் நித்தியானந்தா சுவாமிஜி என்ற சொல்லை 'நித்தி', மோசடி பேர்வழி நித்தி என உருமாற்றிப் போட்டது... நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா படுக்கையில் உருண்டு புரண்டு கூத்தடித்த அந்த 'எடிட்' செய்யப்பட்ட காட்சிகள் நாடு முழுவதும் பரபரப்பை பற்ற வைத்தது.. அத்துடன் புற்றீசல் போல "பலாத்கார" புகார்களையும் வரிசை கட்டி நிற்க வைத்தது.. அப்புறம் என்ன பலாத்கார வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியானார் நித்தியானந்தா.
இதனால் ஓடினார்.. ஓடினார்.. நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஓடி இமயமலை அடிவாரத்தில் இமாசல பிரதேசத்தின் குக்கிராமத்தில் பதுங்கிக் கிடந்தார். ஆனாலும் விட்டுவிட்டதா போலீஸ்? அலேக்காக தூக்கிக் கொண்டு வந்து சிறையில் போட்டது!
சிறை மீண்ட நித்தியானந்தா சும்மா இருக்கவில்லை.. போலி பாஸ்போர்ட் எடுத்து இந்தியாவை விட்டே தப்பி ஓடினார். அப்படி ஓடியும் அடங்காத நித்தியானந்தா எனும் பலாத்கார வழக்கில் தேடப்படும் குற்றவாளி, ஏதோ ஒரு நாட்டின் ஏதோ ஒரு தீவை விலைக்கு வாங்கி 'கைலாசா' என புதிய நாட்டை உருவாக்கிவிட்டதாகவும் அதன் அதிபராக முடிசூட்டிக் கொண்டதாகவும் பிரகடனப்படுத்திக் கொண்டார். நித்தம் நித்தம் நித்தியானந்தா இன்னமும் சமூக வலைதளங்களில் வீடியோவும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
அதேநேரத்தில் சட்டம் தன் கடமையை செய்து கொண்டே இருக்கிறது.. இன்னமும் செய்து கொண்டே இருக்கிறது. நித்தியானந்தாவை தேடப்படும் குற்றவாளியாக பிரகடனம் செய்து ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் சர்வதேச போலீசாரின் உதவியையும் கர்நாடகா போலீஸ் நாடியது. இதனடிப்படையில் ஏற்கனவே கர்நாடகா போலீசாரிடம் ஏராளமான தகவல்களை சர்வதேச போலீசார் பெற்றிருந்தனர்.
இருப்பினும் நித்தியானந்தாவை சோ கால்ட் கைலாசாவில் இருந்து "தூக்குவதற்கு" கூடுதல் ஆவணங்கள் தேவை என்பதால் மீண்டும் கர்நாடகா போலீசை சர்வதேச போலீஸ் தரப்பு தொடர்பு கொண்டது. கர்நாடகா போலீசாரும் கூடுதல் தகவல்களை வாரி வழங்கி இருக்கின்றனர்.
இதனால் விரைவாக கைலாசாவில் இருந்து கூண்டோடு நித்தியானந்தா கோஷ்டி கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு இழுத்துவரப்படலாம் என்கின்றன பெங்களூர் தகவல்கள்.












Click it and Unblock the Notifications