திடீரென பூமியில் விழுந்த இஸ்ரோ "பாகுபலி" ராக்கெட்! 9 மாதங்களுக்கு பிறகு நடந்த சம்பவம்! என்ன நடந்தது?
பெங்களூர்: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் என அழைக்கப்படும் LVM3-M5 ராக்கெட்டின் C25 மேல்நிலைப் பகுதி, விண்வெளியில் சுமார் 9 மாதங்கள் சுற்றி வந்த பிறகு இப்போது பத்திரமாக பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்துள்ளது. இதுபோல திடீரென அந்த ஏவூர்தி பூமிக்கு திரும்பியது ஏன்.. இதன் பின்னணி தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்.
விண்வெளி துறையில் இந்தியா பல சாதனைகளை படைத்து வருவது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக இஸ்ரோ தொடர்ச்சியாக பல முக்கியமான மிஷன்களை அடுத்தடுத்து மேற்கொண்டு வருகிறது. அவற்றில் பெரும்பாலான ஆய்வுகள் வெற்றிகரமாகவே முடிகிறது. அப்படியொரு சாதனையை தான் இப்போது இஸ்ரோ படைத்து காட்டியுள்ளது.

இஸ்ரோ ராக்கெட்
இந்த LVM3-M5 ராக்கெட் கடந்த 2025 நவம்பர் 2ஆம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து CMS-03 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. செயற்கைக்கோள் திட்டமிட்ட ஜிடிஓ எனப்படும் Geostationary Transfer Orbit சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
செயற்கைக்கோளை அதன் இலக்கில் நிலைநிறுத்திய பிறகு, ராக்கெட்டின் C25 மேல்நிலை பகுதிக்கு வேறு எந்த பணியும் இல்லை. வழக்கமாக இதுபோல சாட்டிலைட்களை எடுத்து செல்லும் ராக்கெட் விண்வெளியேலியே சுற்றி கொண்டு இருக்கும். இவற்றை விண்வெளி குப்பை என்பார்கள். இதுபோன்ற ராக்கெட் பாகங்கள் விண்வெளியில் குப்பையாக நீண்ட காலம் சுற்றிக்கொண்டிருப்பது எதிர்காலத்தில் விண்வெளி திட்டங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.
21 டிகிரி
இதன் காரணமாகவே செயற்கைக்கோளை வெற்றிகரமாக பிரித்த பிறகு, C25ல் உள்ள எரிபொருள் உள்ளிட்டவற்றை செயலிழக்க செய்யும் நடவடிக்கையை இஸ்ரோ மேற்கொண்டது. ராக்கெட்டில் எஞ்சியிருக்கும் ஆற்றல் அல்லது அழுத்தம் காரணமாக எதிர்பாராத வெடிப்பு ஏற்படுவதை தடுக்கவே இதை முதலில் செய்துள்ளனர்.. அதன் பின்னர் C25 ராக்கெட் பகுதி, 21 டிகிரி சாய்வுடன் கூடிய நீள்வட்ட சுற்றுப்பாதையில் விடப்பட்டது.
அதன் நகர்வை அமெரிக்காவின் விண்வெளி துறை தொடர்ந்து கண்காணித்தது. இஸ்ரோவும் கூட அதன் பாதையை கண்காணித்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள டீம் ஒன்று இந்த ராக்கெட்டை தீவிரமாக கண்காணித்தது. அது மெல்ல சரிந்து மீண்டும் பூமியின் வளிமண்டத்தில் நுழையும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த ஜூலை 30ம் தேதி மாலை 5.38 மணியளவில் C25 ராக்கெட் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும் என எதிர்பார்க்கப்பட்டது.
சரியாக திரும்பியது
திட்டமிட்டபடியே அந்த ராக்கெட் ஜூலை 30ம் தேதி வளிமண்டலத்துக்குள் நுழைந்தது. அது அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் விழும் வகையில் அதன் பாதையை திட்டமிட்டிருந்தனர். வளிமண்டலத்தில் மிக அதிக வேகத்தில் நுழையும்போது ஏற்படும் கடுமையான உராய்வு வெப்பம் காரணமாக ராக்கெட்டின் பெரும்பாலான பகுதிகள் எரிந்து அழிந்திருக்கும். அதீத வெப்பத்தை சமாளிக்கும் சில பாகங்கள் மட்டுமே மீதமிருக்க வாய்ப்புள்ளதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. குறிப்பாக எரிவாயு சிலிண்டர்கள், சில டேங்க் பகுதிகள் வளிமண்டல வெப்பத்தை தாங்கும் என ஆய்வாளர்கள் எதிர்பார்த்தனர்.
ஏன் முக்கியம்
ஒரு ராக்கெட் அதன் பணியை முடித்தவுடன், அதன் அனைத்து பாகங்களும் உடனடியாக பூமிக்கு திரும்பிவிடுவதில்லை. அவை எந்த சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டுள்ளன, ஏவப்பட்ட நேரம் மற்றும் அதன் வேகம் ஆகியவற்றை பொறுத்து ராக்கெட் பாகங்கள் பல மாதங்கள், ஆண்டுகள் அல்லது சில சமயங்களில் பல தலைமுறைகள் கூட விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கலாம். இது போன்ற செயலிழந்த செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட் பாகங்களே விண்வெளிக் குப்பை என அழைக்கப்படுகின்றன. பூமியை சுற்றி அதிகரித்து வரும் விண்வெளி குப்பைகள், மற்ற சாட்டிலைட்கள் மற்றும் எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
எனவே, விண்வெளியில் குப்பை சேருவதை தடுக்கும் பொறுப்பு அனைத்து நாடுகளுக்குமே உள்ளன. இதன் காரணமாகவே LVM3-M5 திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, C25 ராக்கெட் ஒரு ஆண்டுக்குள் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும் வகையில் இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. அதன்படி, நவம்பர் 2025 முதல் ஜூலை 2026 வரை அது 9 மாதங்களுக்கும் குறைவாகவே விண்வெளியில் இருந்துள்ளது.
இஸ்ரோ
சர்வதேச வழிகாட்டுதல்களுக்கு ஏற்பவே இஸ்ரோ இந்த திட்டத்தை போட்டிருந்தது. குறிப்பாக, லோயர் ஆர்பிட்டில் தங்கள் பணிகளை முடித்த பொருட்கள் பொதுவாக 25 ஆண்டுகளுக்குள் சுற்றுப்பாதையை விட்டு வெளியேறும் வகையில் திட்டமிட வேண்டும் என்ற வழிகாட்டுதல் உள்ளது. ஆனால், இஸ்ரோ வெறும் 9 மாதங்களில் மீண்டும் ராக்கெட்டை பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைத்துள்ளது.
இந்த காலத்தில் சாட்டிலைட்களும் அது தரும் டேட்டாவும் முக்கியமானதாக மாறியுள்ளன. எனவே, விண்வெளியில் அதிகப்படியான விண்வெளி குப்பை சேர்ந்துவிடாமல் பார்த்து கொள்வது அவசியமாகிறது. எனவே, ஒரு ராக்கெட்டை விண்ணில் செலுத்துவது மட்டுமின்றி, அதன் பணி முடிந்த பிறகு அதை எப்படி பாதுகாப்பாக பூமிக்கு அழைத்து வருவது என்பதையும் ஏவுதலுக்கு முன்பே திட்டமிடுவது அவசியமாகிறது.


Click it and Unblock the Notifications
