இருளில் இருக்கும் சந்திரயான் 3விக்ரம் லேண்டரின் புகைப்படம் வெளியீடு! அசத்திய சந்திரயான் 2 ஆர்பிட்டர்
பெங்களூர்: இருள் சூழ்ந்த நிலவின் தென் துருவத்தில் உள்ள சந்திரயான் 3 விக்ரம் லேண்டரின் புதிய படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. விக்ரம் லேண்டரை சந்திரயான் - 2 ஆர்பிட்டர் அதிநவீன கருவி மூலம் படம்பிடித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தில் உள்ள பள்ளத்தாக்குகளில் பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாமல் இருக்கிறது. இந்நிலையில் இங்கு நீர் இருப்பதற்கான சாத்தியங்களை சந்திரயான்-1 விண்கலம் கண்டுபிடித்து சொன்னது. அதன் பின்னர் நிலவை யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி தொடங்கியது. இதனையடுத்து நிலவில் ரோவரை இறக்கி அதில் அதன் மூலம் ஆய்வு செய்ய கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்தியது இஸ்ரோ.

ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப தவறால் நிலவில் தரையிறங்க இருந்த ரோவர் கட்டுப்பாட்டை இழந்து நிலவில் வேகமாக மோதி உடைந்தது. இருப்பினும் இதனை கொண்டு சென்ற ஆர்பிட்டர் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மற்றொரு ரோவரை அனுப்புவது என்று முடிவெடுத்து சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ம் தேதியன்று மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
நிலவில் தரையிறங்கி ஆய்வை மேற்கொண்ட சந்திரயான் 3 பிரக்யான் ரோவர் 14 நாட்கள் ஆய்வை முடித்த நிலையில், ஸ்லீப்பிங் மோடில் சென்றிருக்கிறது. இதை மீண்டும் செப்டம்பர் 22ம் தேதி மீண்டும் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. இந்நிலையில், சந்திரயான் 3 லேண்டர் நிலவில் இருக்கும் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்த படத்தை சந்திரயான்-2 ஆர்பிட்டரில் உள்ள டிஎப்எஸ்ஏஆர் எனும் கருவி எடுத்துள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது.
இந்த புகைப்படம் கடந்த 6ம் தேி எடுக்கப்பட்டுள்ளது. இந்த தேதியில் சந்திரயான் 3 லேண்டர் இருக்கும் இடம் முழுவதும் இருளால் சூழப்பட்டிருக்கும். இருந்தபோதும், சந்திரயான் 2 ஆர்பிட்டர், விக்ரம் லேண்டரை சரியாக புகைப்படம் எடுத்திருக்கிறது. இதற்கு காரணம் டிஎப்எஸ்ஏஆர் எனும் கருவிதான். இது மிகக்குறைந்த அதிர்வெண் கொண்ட அலை வரிசையை கடத்துகிறது. எனுவே எவ்வளவு இருளில் மின்னணு பொருள் இருந்தாலும் அதை இக்கருவி தெளிவாக கண்டுபிடித்துவிடும்.
இதன் மூலம் விக்ரம் லேண்டரின் செயல்பாடுகளை இரவில் கூட கண்டுபிடிக்க முடியும் என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது. இஸ்ரோ வெளியிட்டுள்ள புகைப்படத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்கு முன்னர் இருந்த பகுதியையும், தரையிறங்கிய பின்னர் இருந்த பகுதியையும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. அதேபோல இந்த புகைப்படம் மற்றொரு வகையில் விஞ்ஞானிகளுக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.
ஏனெனில் பூமியில் இருப்பதை போல நிலவில் வளிமண்டலம் கிடையாது. எனவே நிலவின் ஈர்ப்பு விசையில் சிக்கி நிலவு நோக்கு வரும் சிறிய விண்கற்கள் அப்படியே முழுமையாக நிலவில் விழுந்துவிடும். இதே பூமி எனில், வளி மண்டலத்தில் இருக்கும் வாயுக்களுடன் இந்த கற்கள் உரசி எரிந்து சாம்பலாகிவிடும். எனவே விக்ரம் லேண்டர் எந்தவித விண்கற்கள் தாக்குதலுக்கும் ஆளாகவில்லை என்பது இந்த புகைப்படம் மூலம் தெளிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications