காவிரி: ரூ.4,000 கோடி நஷ்டமாகும்.. நீர் பங்கீடு விவகாரத்தில் பந்த்தில் இறங்கும் கன்னட அமைப்புகள்
பெங்களூர்: காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகாவில் இன்று மாநிலம் தழுவி பந்த் போராட்டத்தை கன்னட அமைப்புகள் நடத்துகின்றன. இதனால் தொழில்துறைக்கு சுமார் ரூ.4,000 கோடி இழப்பு ஏற்படும் என சொல்லப்படுகிறது.
காவிரி நீரை பெறுவதற்கு தமிழ்நாடு தொடர்ந்து கர்நாடக மாநிலத்திடம் போராடி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் விநாடிக்கு 25,000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று தமிழ்நாடு வலியுறுத்தியிருந்தது. இதனை கர்நாடகா ஏற்கவில்லை. எனவே உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடியது. அதேபோல கர்நாடக அரசும் நீதிமன்றத்தை நாட காவிரி மேலாண்மை ஆணையம் இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆணையமானது, விநாடிக்கு 5,000 கனஅடி நீரை திறக்க கர்நாடகாவுக்கு கூறியது. ஆனால் கர்நாடக இதை ஏற்கவில்லை. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை இல்லாததாலும், ஒட்டுமொத்தமாக பருவமழை குறைந்ததாலும் நீர் வரத்து குறைவாக இருக்கிறது என்று கூறி இந்த நீரை திறக்க மறுத்துவிட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றமானது, காவிரி மேலாண்மை ஆணையம் வழிகாட்டிய அளவுக்கு தண்ணீரை திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இப்படி இருக்கையில் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 26ம் தேதியன்று காணொலி வாயிலாக காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு 18 நாட்கள் தொடர்ச்சியாக விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால் கர்நாடக அரசோ எந்த உதரவுக்கும் மசியால், தொடர்ச்சியாக மழை 'இல்லை, தண்ணீ இல்லை' என்கிற அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருக்கிறது.
மறுபுறம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று பல்வேறு கன்னட அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஏற்கெனவே மாண்டியா, பெங்களூரில் பந்த் நடத்தப்பட்ட நிலையில் தற்போது மாநிலம் தழுவிய பந்த் போராட்டம் இன்று நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்திற்கு அம்மாநில பாஜக மாற்றும் ஜேடிஎஸ் கட்சிகளும், 40க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் ஆதரவளித்துள்ளன.
போராட்டம் காரணமாக தொழில்துறைக்கு ரூ.4,000 கோடி இழப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே கடந்த 26ம் தேதி பெங்களூரில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்திற்கு ஓலா, ஊபர் போன்ற வாடகை கார் நிறுவனங்கள் ஆதரவளித்திருந்தன. இதனையடுத்து இன்று நடைபெறும் மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்திற்கும் ஓலா, ஊபர் ஆதரவளித்துள்ளது. ஐடி தொழில் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்க அறிவுறுத்தியுள்ளது. ஆனால் மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் ஆகியவை வழக்கம்போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
வாகன போக்குவரத்தை பொறுத்த அளவில் தமிழ்நாட்டிலிருந்து செல்லும் அரசு பேருந்துகள் மற்றும் சரக்கு லாரிகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. தவிர இருச்சக்கர வாகனங்களும் கர்நாடக எல்லையில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எல்லையில் இரு மாநில காவல்துறையினரும் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications