"லஞ்சம் இல்லாத தமிழ்நாட்டை முதல்முறையாக நேரடியாகப் பார்க்கிறேன்”.. பணி நியமன ஆணை பெற்ற பெண் பேட்டி
சென்னை: "லஞ்சம் இல்லாத தமிழ்நாட்டை முதல்முறையாக நேரடியாகப் பார்க்கிறேன். பொறுப்பான அரசுக்கு பொறுப்பான அதிகாரிகளாக நாங்கள் ஒத்துழைப்பு அளிப்போம்." என முதல்வர் விஜய் கையால் பணி நியமன ஆணை பெற்ற பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 383 உதவி பொறியாளர் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார்.

எரிசக்தி துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 383 நபர்களுக்கு உதவிப் பொறியாளர்கள் மற்றும் 18 நபர்களுக்கு உதவிக் கணக்கு அலுவலர்கள் என மொத்தம் 401 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பங்கேற்று அனைவருக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கி சிறப்பித்தார்.
இந்த நிகழ்வில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், "மின்வாரியத்தில் உடனடியாக செய்ய வேண்டியது காலிப் பணியிடங்களை நிரப்புவது தான். கடந்த ஒரு மாதங்களாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு எல்லா நிலைகளிலும், எல்லா முடிவுகளையும் சிறப்பாக எடுத்து வருகிறது.
முதலமைச்சர் விஜய் தலைமையில் மின்சார வாரிய ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, மின்சார வாரியத்தில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், அதில் முதற்கட்டமாக 15,000 காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. அடுத்த அரை மணி நேரத்திற்குள் 15,000 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான உத்தரவை முதலமைச்சர் வழங்கினார் என்றார்.
பெயரளவுக்கு மட்டுமே சொல்லும் முதல்வர் அல்ல. சொன்னது எதுவோ, அதையே செய்யக் கூடிய முதல்வர் தான் தமிழ்நாட்டு முதலமைச்சர். மக்களுக்கு பயந்து தான் இந்த அரசு செயல்படும், வேறு யாருக்கும் இந்த அரசு பயப்படாது. மேலும், மின் வாரியத்தை சீரமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அவற்றை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு புது மாதிரியான மின்சாரத் துறையை மாற்றி அமைப்போம்" எனப் பேசினார்.
பணி நியமன ஆணை பெற்ற பெண் ஒருவர் பேசுகையில், "லஞ்சம் இல்லாத தமிழ்நாட்டை முதல்முறையாக நேரடியாகப் பார்க்கிறேன். நான் ஏற்கனவே அரசு ஊழியராக பணியில் இருக்கிறேன். இப்போதெல்லாம் 10 மணிக்கே அலுவலகம் வந்துவிடுகிறேன். பொறுப்பான அரசுக்கு பொறுப்பான அதிகாரிகளாக நாங்கள் ஒத்துழைப்பு அளிப்போம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications