ஃப்ரிட்ஜ் கதவை அடிக்கடி திறந்தால் இவ்வளவு நடக்குமா? மின் கட்டணத்தை தவிர்க்க நிபுணர்களின் எளிய டிப்ஸ்
சென்னை: ஃப்ரிட்ஜ் எனப்படும் குளிர்சாதனப் பெட்டியை முறையாகப் பயன்படுத்த தெரியாததால் பலரது வீடுகளிலும் மின் கட்டணம் எகிறி விடுகிறது. பொதுமக்களின் சுமையைக் குறைக்கும் வகையில், ஃப்ரிட்ஜை எப்படி சரியாக பராமரித்து மின்சாரத்தைச் சேமிக்கலாம் என்பது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் நிபுணர்கள் சில எளிய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அவைகளை இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
பலரும் ஃப்ரிட்ஜை கிச்சனில் தங்களுக்கு வசதியான இடத்தில் வைத்து விடுகிறார்கள். ஆனால், ஃப்ரிட்ஜை சூரிய ஒளி நேரடியாகப் படும் இடங்களிலோ அல்லது சமையல் எரிவாயு அடுப்பிற்கு அருகிலோ கண்டிப்பாக வைக்கக் கூடாது.

வெளிப்புற வெப்பம் அதிகமாக இருக்கும் இடத்தில் ஃப்ரிட்ஜ் இருந்தால், அதன் உட்புறத்தைக் குளிர்ச்சியாக வைத்திருக்க மோட்டார் மற்றும் கம்ப்ரஸர் நீண்ட நேரம் இயங்க வேண்டியிருக்கும். இதனால் மின்சாரம் அதிகமாக செலவாகும்.
சுவற்றுக்கும் ஃப்ரிட்ஜுக்கும் இடைவெளி
அதேபோல், சுவற்றுக்கும் ஃப்ரிட்ஜுக்கும் இடையில் குறைந்தது 6 அங்குல இடைவெளி இருக்க வேண்டும். அப்போதுதான் அதன் பின்புறத்தில் உருவாகும் வெப்பம் சீராக வெளியேறி, காற்றுச் சுழற்சி தடைபடாமல் இருக்கும். ஃப்ரிட்ஜ் மீது எந்தப் பொருட்களையும் வைக்காமல் இருப்பதும் காற்றோட்டத்திற்கு வழிவகுக்கும்.
சமைத்த உணவுகளை சூடாக இருக்கும்போதே அப்படியே ஃப்ரிட்ஜில் வைப்பது பலரது வழக்கமாக உள்ளது. இது முற்றிலும் தவறான செயலாகும். அந்த உணவின் வெப்பத்தை குளிர்விக்க ஃப்ரிட்ஜ் இயந்திரம் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். அதனால் உணவுகளை அறை வெப்பநிலைக்குக் குளிர்ந்த பிறகே உள்ளே வைக்க வேண்டும்.
அதேபோல் பொருட்களை மிகவும் நெருக்கமாக அடுக்கி வைப்பதும் சரியல்ல.. உள்ளே காற்று சுழல போதிய இடம் இருக்க வேண்டும். அதே நேரத்தில் ஃப்ரிட்ஜை முற்றிலும் காலியாக வைப்பதும் தவறு. மிதமான அளவில் பொருட்கள் இருந்தால், ஏற்கனவே குளிர்ந்திருக்கும் அந்தப் பொருட்களே உள்ளே இருக்கும் வெப்பநிலையை நிலையாக வைத்திருக்க உதவும்.
ரப்பர் கேஸ்கெட் முக்கியம்
ஃப்ரிட்ஜின் கதவுகளில் இருக்கும் ரப்பர் கேஸ்கெட் (Rubber Banding) மிகவும் முக்கியமானது.. இந்தக் கதவு ரப்பர் தான் வெளிப்புறக் காற்று உள்ளே நுழையாதவாறு ஃப்ரிட்ஜை இறுக்கமாக மூடிப் பாதுகாக்க உதவுகிறது.
இந்த ரப்பரில் ஏதாவது சிறிய தேய்மானமோ, கிழிசலோ அல்லது சேதமோ ஏற்பட்டால், உள்ளேயிருக்கும் கூலிங் வெளியில் கசியத் தொடங்கும். இதனால் ஃப்ரிட்ஜின் உட்புறம் வெப்பமடைந்து, மின்சாரக் கட்டணம் பல மடங்கு உயர்வதற்கு வழிவகுத்துவிடும். அதனால் இந்த ரப்பர் பகுதியை எப்போதும் சுத்தமாகவும், சேதமடையாமலும் பராமரிப்பது அவசியமாகும்.
கதவை அடிக்கடி திறக்க கூடாது
ஃப்ரிட்ஜின் முக்கியப் பாகமான கம்ப்ரஸர் உள்ளே இருக்கும் வெப்பத்தை வெளியேற்றும் வேலையைச் செய்கிறது. நாம் கதவை அடிக்கடி திறக்கும்போதும், நீண்ட நேரம் திறந்து வைக்கும்போதும் வெளியிலிருக்கும் வெப்பக் காற்று உள்ளே நுழைகிறது. இதனால் மீண்டும் குளிர்ச்சியை ஏற்படுத்த மோட்டார் கடுமையாக வேலை செய்ய வேண்டியிருக்கும். அதனால் தேவையான பொருட்களை ஒரே முறையில் எடுத்துக்கொள்ளும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்.
அதேபோல் ஃப்ரிட்ஜின் மேல் பகுதியில் கனமான பொருட்களையோ அல்லது துணிகளையோ வைப்பதால் அதன் காற்றோட்டம் தடைபட்டு, கம்ப்ரஸர் அதிக சிரமத்துடன் இயங்க வேண்டிய சூழல் உருவாகும்.
அதேபோல் ஃப்ரிட்ஜை அடிக்கடி ஆஃப் செய்துவிட்டு, மீண்டும் ஆன் செய்வதையும் தவிர்க்க வேண்டும். கதவின் விளிம்பில் இருக்கும் ரப்பர் கேஸ்கெட் (Rubber Banding) தளர்வடைந்து அல்லது விரிசல் ஏற்பட்டு இருந்தால் குளிர்ச்சி வெளியேறி மின்சாரச் செலவு அதிகரிக்கும் என்பதால், அதனை அடிக்கடி சரிபார்க்க வேண்டும்.
ஐஸ் கட்டிகள் சேரக்கூடாது
ஃப்ரிட்ஜைத் திறக்கும்போது வீசும் ஒருவித கெட்ட வாடையைத் தடுக்கவும், பூஞ்சை ஏற்படுவதைத் தவிர்க்கவும் ஒரு எளிய வழி உள்ளது. ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து அதில் கல் உப்பை போட்டு நன்றாக கலக்கி, எலுமிச்சை பழத்தை பிழிந்து கொள்ள வேண்டும்.
இந்த கரைசலை ஒரு துணியில் நனைத்து ஃப்ரிட்ஜின் உட்புறத்தை நன்றாக துடைத்துச் சுத்தம் செய்யலாம். மேலும், பழைய மாடல் ஃப்ரிட்ஜ்களில் ஐஸ் கட்டிகள் அதிகமாகப் படிந்தால் குளிர்ச்சி சரியாகப் பரவாமல், மெஷினில் கூடுதல் அழுத்தம் ஏற்படும். எனவே, அடிக்கடி அந்த ஐஸ் கட்டிகளை அகற்றுவது (Defrost) நல்லது.
வெப்பநிலை மற்றும் ஸ்டார் ரேட்டிங்
ஃப்ரிட்ஜின் வெப்பநிலையை தேவையில்லாமல் மிகவும் குறைந்த அளவில் (அதிக கூலிங் வேண்டாம்) வைக்கக் கூடாது. பொதுவாக மிதமான அளவிலான டெம்பரேச்சரே போதுமானது. முக்கியமாக புதிய ஃப்ரிட்ஜ் வாங்கும்போது அதிக ஸ்டார் ரேட்டிங் கொண்ட மாடல்களைத் தேர்வு செய்தால் மின்சாரச் சேமிப்பு பெருமளவு கிடைக்கும். இந்த எளிய நடைமுறைகளைப் பின்பற்றினால், மின்சாரத்தை மிச்சப்படுத்துவதுடன் குடும்பச் செலவையும் கணிசமாகக் குறைக்க முடியும்.












Click it and Unblock the Notifications