கிளாம்பாக்கத்தில் முடங்கிய 300 அரசு பஸ்கள்.. சென்னையில் இந்த ஷூட் தேவையா? ₹1 கோடி போச்சு! யார் பாருங்க
சென்னை: கிளாம்பாக்கத்தில் 300 அரசு பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். 300 பேருந்துகளையும் ட்ரோன் ஷாட் எடுக்கும் மோகத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்துக்கு ₹40,000 வீதம் செலவழித்து தலைநகருக்கு கொண்டு வந்த ரீல்ஸ் மாடல் அரசின் பேராசையால் மக்கள் பணம் ₹1 கோடி இன்று வீணாகியிருக்கிறது என்றும் குற்றஞ்சாட்டி உள்ளார்.
"முதல்வர் விஜய் பிறந்தநாளன்று 300 அரசுப் பேருந்துகளின் துவக்க விழாவை திட்டமிட்டிருந்த தவெக அரசு, பிறந்தநாள் முடிந்து இரண்டு நாட்களாகியும் துவக்க விழாவை நடத்தாததால், புதிய பேருந்துகள் சென்னையிலேயே நிற்பதாக வெளியாகிய செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

300 பேருந்துகள் - 1 கோடி வீண்
300 பேருந்துகளையும் ட்ரோன் ஷாட் எடுக்கும் மோகத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்துக்கு ₹40,000 வீதம் செலவழித்து தலைநகருக்கு கொண்டு வந்த ரீல்ஸ் மாடல் அரசின் பேராசையால் மக்கள் பணம் ₹1 கோடி இன்று வீணாகியிருக்கிறது.
உலக நாடுகளே எரிபொருள் தட்டுப்பாட்டில் தவிக்கும் வேளையில் இப்படி ஒரு விளம்பர ஷூட்டிங் தேவையா? அதிலும், கடனில் தமிழகம் மிதக்கும் வேளையில், இப்படி வரிப்பணத்தை வீணாக்கலாமா? 'மக்கள் பணத்தை தொட மாட்டோம்! தொடவிடவும் மாட்டோம்' என்று கூறிய முதல்வர் விஜய், பஞ்ச் வசனங்களை பேசுவதை விடுத்து, செயலில் காட்ட வேண்டும்!
உடனடியாக புதிய பேருந்துகளை அந்தந்த பணி முனையங்களுக்கு அனுப்பி இயக்க உத்தரவிடுவதோடு, இது போன்ற வீண் விளம்பர செலவினங்கள் இனியும் நேராதிருக்க உறுதி செய்ய வேண்டும்." என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
கிளாம்பாக்கத்தில் அரசு பேருந்துகள்
அதேபோல எஸ்டிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் ஷபிக் அஹம்மது வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக முதல்வரின் பிறந்தநாளையொட்டி, புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குவதற்கான தொடக்க விழா என்ற பெயரில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அவை கடந்த மூன்று நாட்களாகக் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் முடக்கி வைக்கப்பட்டுள்ளதும், அப்பேருந்துகளை இயக்கி வந்த ஓட்டுநர்களும், நடத்துநர்களும் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றித் தவித்து வருவதும் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
நிதி இழப்பு - தமிழக அரசு
தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்கள் ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் சூழலில், வழக்கமான வழித்தடங்களில் ஓடிக்கொண்டிருந்த 300 பேருந்துகளைச் பல நூறு கிலோ மீட்டர்கள் கடந்து சென்னைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. இதனால் பொதுமக்களின் அன்றாடப் போக்குவரத்துச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துக் கழகத்திற்குத் தேவையற்ற கூடுதல் நிதி இழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது.
மக்களுக்கான சேவையை முடக்கி, அரசுப் பணத்தை வீணடித்து, இப்படியொரு தொடக்க விழாவை நடத்துவது ஒரு மக்கள் நல அரசுக்கு அழகல்ல; இது ஒரு பொறுப்பான அரசுக்கு உகந்த செயலும் அன்று. எனவே, அரசுப் பண விரயத்திற்கும், பொதுமக்களின் அவதிக்கும் வழிவகுக்கும் இத்தகைய தேவையற்ற நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்." என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications