ஒரே நிமிடத்தில் 2 நிலநடுக்கங்கள்! நூற்றாண்டில் இல்லாத பேரதிர்ச்சி.. வெனிசுலாவை உலுக்கிய பூகம்பங்கள்
வெனிசுலா: வெனிசுலா நாட்டில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முதலாவது நிலநடுக்கம் 7.1 ரிக்டரிலும், அடுத்த நிலநடுக்கம் 7.5 ரிக்டரிலும் பதிவாகியுள்ளது. ஒரே நிமிடத்தில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
வெனிசுலா நாட்டில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிக வலுவான அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இது அந்நாட்டை உலுக்கிப் போடுவதாக இருக்கிறது. இதனால் தலைநகர் கராகஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. கடந்த நூற்றாண்டில் வெனிசுலா சந்தித்த மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

இரு நிலநடுக்கம்
முதலில் ரிக்டர் அளவில் 7.1 என்ற அளவில் கூடிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இது காரிபியன் கடற்கரையில் அமைந்துள்ள மோரோன் என்ற பகுதிக்கு மேற்கே, தலைநகர் கராகஸிலிருந்து சுமார் 168 கிலோமீட்டர் தொலைவில், நடுக்கடலுக்கு அடியில் 13 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது அமைந்திருந்தது. இந்த நடுக்கம் ஏற்பட்ட அடுத்த ஒரு நிமிடத்திற்குள், அதைவிட மிகச் சக்திவாய்ந்த 7.5 ரிக்டர் அளவிலான இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது வெறும் 10 கிலோமீட்டர் ஆழத்தில், மோரோன் பகுதிக்குத் தென்மேற்கே 16 கிலோமீட்டர் தொலைவை மையமாகக் கொண்டு இருந்தது.
சுனாமி எச்சரிக்கை
அடுத்தடுத்து ஏற்பட்ட இரு நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, கரீபியன் தீவுகளில் ஒன்றான விர்ஜின் தீவுகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. டொமினிகன் குடியரசு அதிகாரிகளும் தங்கள் தீவுப் பகுதிக்குச் சுனாமி ஆபத்து இருப்பதாக எச்சரித்தனர். இருப்பினும் சிறிது நேரத்திற்குப் பிறகு புவேர்ட்டோ ரிகோ பகுதிக்கு விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை பின்னர் விரைவாக வாபஸ் பெறப்பட்டது.
மக்கள் அச்சம்
நிலநடுக்கத்தின் தீவிர அதிர்வுகளால் தலைநகர் கராகஸில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் கடுமையாக ஆட்டம் கண்டன. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் தங்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். பல இடங்களில் கட்டடங்களின் சுவர்கள் முழுமையாக இடிந்து விழுந்தன. உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் என அனைத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
அமைச்சர்
இது குறித்து வெனிசுலா நாட்டின் உள்துறை அமைச்சர் தியோஸ்டாடோ காபெல்லோ இதுகுறித்து பேசுகையில், "இந்த நிலநடுக்கம் நாட்டின் பல மாநிலங்களில் உணரப்பட்டது. குறிப்பாக கராகஸில் உள்ள அல்டமிரா பகுதியில் கட்டடங்கள் மற்றும் வீடுகள் இடிந்து விழுந்து மிகவும் ஆபத்தான சூழல் நிலவுகிறது. இடிபாடுகளில் சிக்கி மக்கள் காமயடைந்துள்ளனர். அவர்களை மீட்கும் நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகள் வேகமாக நடந்து வருகிறது. மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.. அடுத்தடுத்த அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்பதால் மக்கள் தொடர்ந்து வீடுகளுக்கு வெளியே பாதுகாப்பாக இருக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் முதியவர்களைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்" என்றார்.
இப்போது வரை இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா... எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications