திமுக முன் நிற்கும் மிகப்பெரிய சவாலே இதுதான்.. கச்சத்தீவு போல தொகுதி மறுவரையறை விவகாரம் மாறுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியலில் சில முடிவுகள் எடுக்கப்படும்போது அவை இன்றைக்கு சரியானதாகத் தோன்றலாம். ஆனால், காலம் கடந்து அதன் விளைவுகள் வெளிப்படும்போதுதான் அந்த முடிவின் உண்மையான அரசியல் தாக்கம் தெரியவரும். அப்படிப்பட்ட ஒரு விவகாரம்தான் கச்சத்தீவு. தற்போது தொகுதி மறுவரையறை விவகாரத்திலும் இதேபோன்ற கத்தி திமுகவின் தலைக்கு மேல் தொங்குகிறது.

பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்திருப்பது தற்போது மிகப்பெரிய அரசியல் விவாதமாக மாறியுள்ளது. திமுக தனது முடிவுக்கு மாநில நலன் சார்ந்த காரணங்களை முன்வைக்கிறது. ஆனால், இந்த முடிவு எதிர்காலத்தில் எந்தவொரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அதற்கான விளைவுகளை திமுக சந்திக்க நேரிடும்.

Will Delimitation Become Another Katchatheevu for DMK

கச்சத்தீவு விவகாரத்தில் இன்றளவும் திமுக எதிர்கொள்ளும் விமர்சனத்தைப் போல, தொகுதி மறுவரையறை விவகாரமும் எதிர்காலத்தில் திமுகவுக்கு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்துமா? அல்லது, திமுக இன்றைக்கு எடுத்துள்ள முடிவுதான், விமர்சனங்களில் இருந்து காப்பாற்றப் போகிறதா? என்பதெல்லாம் பாஜக அரசின் நடவடிக்கைகள் மூலமே தெரியவரும்.

கச்சத்தீவு - 50 ஆண்டு கடந்தும் தொடரும் விமர்சனம்

1974 ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. அப்போது தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

கச்சத்தீவு தொடர்பான முடிவை மத்திய அரசு எடுத்தபோது தமிழக அரசின் கருத்து புறக்கணிக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. அப்போது கருணாநிதி அரசு இந்த முடிவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர முயன்றதாகவும், அதற்கு எதிர்க்கட்சியான அதிமுக ஒத்துழைக்கவில்லை என்றும் திமுக தரப்பில் கூறப்படுகிறது.

அதேநேரத்தில், திமுக அரசு தான் இந்த விவகாரத்தில் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்காமல் கச்சத்தீவை தாரைவார்த்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் அணுகுமுறை குறித்து இன்றுவரை விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

குறிப்பாக, 2024 மக்களவைத் தேர்தலின்போது பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கச்சத்தீவு விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்து காங்கிரஸ் மற்றும் திமுகவை விமர்சித்தனர்.1974-ல் நடந்த ஒரு நிகழ்வு, 50 ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழக அரசியலில் தேர்தல் பிரசாரத்திற்கான முக்கியமான ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது.

தொகுதி மறுவரையறை - திமுகவின் கணக்கு என்ன?

மத்திய பாஜக அரசின் புதிய தொகுதி மறுவரையறை மசோதாவில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரிப்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகள் 39-லிருந்து 59 ஆக அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக முன்வைத்த இரண்டு முக்கியக் கோரிக்கைகள் இந்த முன்மொழிவில் இடம்பெற்றுள்ளன. மக்களவையில் தமிழ்நாட்டின் தற்போதைய 7.18 சதவீத பிரதிநிதித்துவம் குறையவில்லை. மாநிலங்களுக்கு இடையிலான தற்போதைய தொகுதிப் பங்கு விகிதம் மேலும் 25 ஆண்டுகளுக்குப் பாதுகாக்கப்படும். இந்த 2 அம்சங்கள் ஏற்கப்பட்டிருப்பதாகக் கூறியே திமுக இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளது.

தற்போதைய சூழலில் இந்த மசோதாவை ஆதரிக்காவிட்டால் எதிர்காலத்தில் மக்கள் தொகை அடிப்படையிலான மறுவரையறை மூலம் தமிழகத்தின் தொகுதிகள் 39-லிருந்து 31 அல்லது 32 ஆகக் குறையக்கூடும் என்று திமுக தெரிவிக்கிறது. கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதே சரியானது என்பது திமுகவின் வாதம்.

எதிர்காலத்தில் நிலைமை மாறினால்

தற்போது மத்திய பாஜக அரசு அளித்திருப்பதாகக் கூறப்படும் உத்தரவாதங்கள் எதிர்காலத்திலும் உறுதியாகச் செயல்படுத்தப்படுமா? தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்த பிறகு மாநிலங்களுக்கு இடையிலான விகிதாச்சாரம் மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் தொகுதிகள் எவ்வாறு பிரிக்கப்படும் என்பதும் முக்கியமான விஷயமாக இருக்கிறது.

தொகுதி மறுசீரமைப்பைச் செயல்படுத்தும்போது, பாஜக அரசு தமது வேலையைக் காட்டிவிடும். எனவே, இந்த மசோதாவை ஆதரிக்கக் கூடாது என்கிறது மற்றொரு தரப்பு. ஆனால், ஆதரிக்காமல் விட்டால், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடக்கும், அப்போது தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்படும் என்கிறது திமுக தரப்பு.

கச்சத்தீவு விவகாரம் vs தொகுதி மறுவரையறை

கச்சத்தீவு விவகாரத்தில் அப்போதைய திமுக அரசு முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட மத்திய அரசாக இருக்கவில்லை. ஆனால், தமிழகத்தின் கருத்தை எவ்வளவு வலுவாக முன்வைத்தது என்பதுதான் இன்றளவும் விவாதிக்கப்படுகிறது.

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக நேரடியாக நாடாளுமன்றத்தில் தனது கட்சியின் வாக்குகளைப் பயன்படுத்தி ஒரு முடிவை ஆதரிக்கிறது. இன்னும் சொல்லப்போனால், திமுக ஆதரவின் மூலமாகத்தான் நாளை இந்த மசோதாவே நிறைவேற்றப்பட இருக்கிறது.

திமுக எதிர்காலத்தில் விமர்சனங்களை எதிர்கொள்ளும் சூழல் வருமா?

இதனால் எதிர்காலத்தில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவின் விளைவுகள் தமிழகத்திற்கு பாதகமாக அமைந்தால், திமுகவின் இன்றைய ஆதரவு முடிவு கடுமையான அரசியல் விமர்சனத்திற்கு உள்ளாகும்.

அதேநேரத்தில், திமுக தற்போது மசோதாவை எதிர்த்து வாக்களித்து, அதன் மூலம் நாளை, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைந்து, தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்து போனாலும், திமுகவின் இன்றைய முடிவு வரலாற்றுத் தவறாகப் பதிவாகும்.

திமுகவின் இன்றைய முடிவு தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாத்த முடிவாக வரலாற்றில் இடம்பெறுமா? அல்லது எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும் வகையில் தவறான அரசியல் முடிவாக மாறுமா? என்பததற்கான பதிலை இன்றே தீர்மானிக்க முடியாது. காலம்தான் இதற்கான பதிலைச் சொல்லும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+