தலைமுடியை விட சிறிய சைஸ் ரோபோ! மூளை புற்றுநோய்க்கு முடிவு கட்டும் புதிய கண்டுபிடிப்பு!
வாஷிங்டன்: மூளை புற்றுநோய் என்பது ரொம்பவும் கொடுமையானது. அதைவிட கொடுமையான விஷயம் அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைதான். இப்படி இருக்கையில் தற்போது தலைமுடியை விட சிறிய நானா சைஸ் ரோபோக்கள் மூலம், இதற்கு சிகிச்சை அளிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அமெரிக்காவின் கலிபோர்னியா தொழில்நுட்ப கழக விஞ்ஞானிகள்தான் இந்த சாதனையை செய்திருக்கிறார்கள். ரத்த நாளங்கள் வழியாக பயணித்து.. மூளைக்கு புற்றுநோய் மருந்துகளை துல்லியமாக சேர்க்கும் 'பிரெய்ன்பாட்ஸ்' எனப்படும் மிக நுண்ணிய ரோபோக்களை இவர்கள் உருவாக்கி உள்ளார்கள்.

தலைமுடியின் அகலத்தை விட பல நூறு மடங்கு சிறியதான.. அதாவது சுமார் 250 நானோ மீட்டர் அளவு கொண்ட இந்த ரோபோக்களை கொண்டு எலிகளிடம் நடத்தப்பட்ட சோதனை பாசிட்டிவ் முடிவுகளை கொடுத்திருக்கிறது.
மூளை புற்றுநோயை பொறுத்தவரை, சிகிச்சையில் நமக்கு இருக்கும் பெரிய சிக்கல், மூளையை பாதுகாக்கும் 'இரத்த மூளை' தடை என்ற இயற்கையான பாதுகாப்பு அரன்தான். இது நச்சுப் பொருட்களுடன் சேர்ந்து, புற்றுநோய் மருந்துகளையும் மூளைக்குள் செல்ல விடாமல் தடுக்கிறது. இதனால் மூளை புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பது மிகவும் கடினமாக இருந்தது. இந்த தடையை கடப்பதற்காகவே நானோ ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
இவை செயல்படும் விதம் மிகவும் நுட்பமானதாகும். ஒரு சிறிய பலூன் போன்ற வடிவத்தை கொண்ட இந்த ரோபோக்களுக்குள்.. அமோனியம் பைகார்பனேட் மற்றும் புற்றுநோய் மருந்து நிரப்பப்பட்டிருக்கும். இந்த 'அமோனியம் பைகார்பனேட்' வாயுவை உருவாக்கும் எரிபொருள் ஆகும். ரோபோக்களை ரத்தத்தில் செலுத்திய பிறகு, மண்டை ஓட்டின் வழியாக அகச்சிவப்பு ஒளி பாய்ச்சப்படும். இந்த ஒளி ஏற்படுத்தும் வெப்பத்தால் ரோபோவின் மூடி திறந்து உள்ளே இருக்கும் எரிபொருள் வாயுவாக மாறி ரோபோவை வேகமாக முன்னோக்கி தள்ளும்.
ரோபோவின் மேற்பரப்பில் உள்ள சிறப்பு டி.என்.ஏ மூலக்கூறுகள், மூளையின் பாதுகாப்பு அரண் செல்களை அடையாளம் கண்டு.. அவற்றுடன் இணைந்து மூளைக்குள் நுழைகின்றன. மூளைக்குள் சென்றதும் மருந்தை வெளியிட்டு விட்டு இந்த ரோபோக்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் தானாகவே கரைந்து சிதைந்து விடும்.
'கிளியோபிளாஸ்டோமோ' எனப்படும் தீவிர மூளை புற்றுநோய் கொண்ட எலிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில், சாதாரண முறையை விட இந்த ரோபோக்கள் 5 மடங்கு அதிக மருந்தை மூளைக்கு கொண்டு சேர்த்துள்ளன. மருந்து உடலின் மற்ற பாகங்களில் பரவாமல் நேரடியாக மூளைக்கு மட்டும் செல்வதால், கிமோதெரபியால் ஏற்படும் கடுமையான பக்க விளைவுகள் பெருமளவில் குறைந்து.. எலிக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது.
கடந்த நவம்பர் 25 அன்று 'சயின்ஸ் ரோபோடிக்ஸ்' இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு, தற்போது எலிகளிடம் மட்டுமே நிரூபிக்கப்பட்டுள்ளது. மனிதர்களிடம் பரிசோதிப்பதற்கு முன்பு இதில் நீண்ட கால பாதுகாப்பும் குறித்து மேலும் ஆய்வுகள் நடத்தப்பட உள்ளன.
ஆய்வுகள் வெற்றிப்பெற்றால் என்ன நடக்கும்?
தற்போதைய புற்றுநோய் மருந்துகள் உடல் முழுவதும் பரவுவதால் முடி உதிர்தல், கடுமையான சோர்வு, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. இப்படி இருக்கையில்.. நானோ ரோபோக்கள் மூலம் மருந்து நேரடியாக புற்றுநோய் கட்டிகளுக்கு மட்டுமே செலுத்தப்படுவதால், ஆரோக்கியமான செல்கள் பாதிக்கப்படாது.
மட்டுமல்லாது மூளையின் ஆழமான பகுதிகளில் உள்ள கட்டிகளை அகற்றவோ அல்லது மருந்து செலுத்தவோ மண்டை ஓட்டை திறந்து செய்யப்படும் சிக்கலான அறுவை சிகிச்சைகளின் தேவை குறையும். சாதாரண ஊசி மூலம் ரத்தத்தில் ரோபோக்களை செலுத்தி, வெளியில் இருந்து ஒளி அல்லது காந்த அலைகள் மூலம் அவற்றை இயக்கி சிகிச்சை அளிக்க முடியும்.
ஆரம்ப கட்டத்தில் இந்த சிகிச்சை மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கலாம். மேலும், கோடிக்கணக்கான நானோ ரோபோக்கள் உடலுக்குள் சென்று கரைந்த பிறகு.. நீண்ட காலத்திற்கு பிறகும் அவை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதை உறுதிப்படுத்த பல ஆண்டுகள் மருத்துவ பரிசோதனைகள் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
