இந்திய அரசியல் வரைபடத்தையே தீர்மானிக்கும் தமிழகம்! வரலாற்று தருணத்தை இன்று கண்ணால் பார்த்த தமிழர்கள்
சென்னை: ஒட்டுமொத்த இந்திய நாட்டின் பார்வையும் இன்று தமிழ்நாட்டைத் நோக்கித் திரும்பியிருந்தது. இந்திய அரசியல் வரைபடத்தை தீர்மானிக்கப்போகும் மிக முக்கியமான முடிவுக்கான சந்திப்பு இன்று சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டில் நடைபெற்றது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, 3 மாநில முதல்வர்கள், மம்தா பானர்ஜி போன்ற தலைவர்களின் ஸ்டாலின் உடனான சந்திப்பு புகைப்படம் வரலாற்று ஆவணமாக மாறத் தகுதியானது. ஏனெனில் அடுத்த கால் நூற்றாண்டுக்கான இந்திய அரசியல் வரைபடத்தை தீர்மானிக்கப்போகும் நாளுக்கு முந்தைய தினம் நடந்த முக்கிய மீட்டிங் இதுவாகும்.
இதுபோல தமிழகம் பல வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் சந்திப்புகளை பார்த்துள்ளது. அதுகுறித்த ஒரு ரீவைண்ட் இதோ..
எதிரெதிர் துருவங்களாகப் பிரிந்த கட்சிகளையும் தலைவர்களையும் ஒன்றிணைக்க முக்கிய சந்திப்புகள் நடந்துள்ளன. இந்தச் சந்திப்புகள் சிலவற்றில் வெற்றியும் கிடைத்துள்ளது. அப்படி ஒரு சந்திப்பால் தான் அதிமுக ஜெயலலிதா வசம் வந்தது. தேர்தல் கூட்டணியை உறுதி செய்து, ஆட்சியையே தீர்மானிக்கக்கூடிய மிக முக்கியமான மீட்டிங்குகளும் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன.

அந்தவகையில், இன்று சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
1. அண்ணா - ராஜாஜி சந்திப்பு (1967)
காங்கிரஸ் ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் அண்ணாவும், சுதந்திரா கட்சித் தலைவர் ராஜாஜியும் சந்தித்துப் பேசி கூட்டணி அமைத்தனர். இந்தச் சந்திப்பு 1967-ல் திமுக முதல்முறையாக ஆட்சியைப் பிடிக்கவும், தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வரவும் அடித்தளமிட்டது.
2. ராஜாஜி - கருணாநிதி சந்திப்பு (1971)
தமிழகத்தில் மதுவிலக்கை ரத்து செய்ய முதலமைச்சர் கருணாநிதி முடிவெடுத்தபோது, 92 வயதான ராஜாஜி 1971 ஜூலை 20 அன்று கொட்டும் மழையில் கோபாலபுரம் இல்லத்திற்கு நேரில் சென்று கருணாநிதியைச் சந்தித்தார். மதுவிலக்கை ரத்து செய்தால் எதிர்காலத் தலைமுறை சீரழியும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். இருப்பினும், நிதி நெருக்கடி காரணமாக ஆகஸ்ட் 30 அன்று மதுவிலக்கு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
3. பிஜு பட்நாயக் - கருணாநிதி - எம்.ஜி.ஆர் சந்திப்பு (1979)
இந்திரா காங்கிரஸின் எழுச்சியைத் தடுக்க ஒடிசா முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக் 1979 செப்டம்பரில் சென்னை வந்து திமுக, அதிமுக இணைப்புக்கு முயற்சித்தார். சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் நேரில் சந்தித்துப் பேசினர். இதில் 'திமுக' என்ற பெயரையும், 'அதிமுக' கொடியையும் வைத்துக்கொள்வது எனவும், எம்.ஜி.ஆர் முதல்வராகவும், கருணாநிதி கட்சித் தலைவராகவும் இருப்பது எனவும் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால், மறுநாள் வேலூர் பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர் திமுகவை விமர்சித்ததால் இந்த முயற்சி தோல்வியடைந்தது.
4. கருணாநிதி - இந்திரா காந்தி சந்திப்பு (1980)
எமர்ஜென்சி காலத்தில் திமுக ஆட்சியைக் கலைத்த இந்திரா காந்தியுடன், 1980 மக்களவைத் தேர்தலுக்காகக் கருணாநிதி மீண்டும் கைகோர்த்தார். சென்னையில் நடந்த பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் இருவரும் இணைந்து மேடையேறி, "நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக" என்று கருணாநிதி முழங்கியது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
5. அதிமுக அணிகள் இணைப்புச் சந்திப்பு (1989)
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாகப் பிரிந்த அதிமுக, 1989 தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஒன்றிணைய முடிவு செய்தது. இரு அணிகளின் முக்கியத் தலைவர்கள் சந்தித்துப் பேசியதன் விளைவாக, ஜானகி ராமச்சந்திரன் அரசியலிலிருந்து விலகி ஜெயலலிதா தலைமையிலான ஒருங்கிணைந்த அதிமுக உருவானது.
6. ஜெயலலிதா - பாஜக தலைவர்கள் சந்திப்பு (1998)
திராவிட இயக்கப் பின்னணியிலிருந்து வந்த அதிமுக, தேசிய அளவில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க ஜெயலலிதாவும் பாஜக மூத்த தலைவர்களும் நடத்திய சந்திப்புகள், மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி அமைய வழிவகுத்தன.
7. சோனியா காந்தி - கருணாநிதி சந்திப்பு (2004)
பிப்ரவரி 13 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சோனியா காந்தி, கருணாநிதியைச் சந்தித்தார். 2004 மக்களவைத் தேர்தலுக்கான திமுக - காங்கிரஸ் கூட்டணியை வலுப்படுத்திய முக்கியமான சந்திப்பு இது.
8. நரேந்திர மோடி - கருணாநிதி சந்திப்பு (2017)
2017 ஆம் ஆண்டு நவம்பர் 6 அன்று பிரதமர் நரேந்திர மோடி, கோபாலபுரம் இல்லத்திற்கு நேரில் வந்து கருணாநிதியைச் சந்தித்தார். பாஜக - திமுக இடையிலான அரசியல் உறவு குறித்த விவாதங்களையும் இந்தச் சந்திப்பு ஏற்படுத்தியது. எனினும், இந்தச் சந்திப்புக்குப் பிறகு, காங்கிரஸ் - திமுக கூட்டணி அமைந்து, 2019 லோக்சபா தேர்தலை திமுக - காங்கிரஸ் இணைந்து எதிர்கொண்டன.
9. திமுக நடத்திய மாநில சுயாட்சி மாநாடு (2018)
2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று சென்னையில் நடைபெற்ற மாநாட்டுக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள் அழைக்கப்பட்டனர்.
இந்த மாநாட்டில் அன்றைய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், கர்நாடக முதல்வர் குமாரசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு, பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங், சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநில உரிமைகள், கூட்டாட்சி மற்றும் மத்திய அரசின் அதிகாரங்கள் தொடர்பான விவாதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பின்னாளில் நாடு தழுவிய அளவில் உருவான 'இந்தியா' கூட்டணிக்கு இந்த மாநாடு அச்சாரம் போட்டது என்றால் மிகையில்லை.
10. ஸ்டாலின் வீட்டில் இந்தியா கூட்டணி தலைவர்கள் (நவம்பர் 29, 2026)
சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால், முதலமைச்சர்கள் டி.கே. சிவகுமார், ரேவந்த் ரெட்டி, வி.டி. சதீசன் , திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, அபிஷேக் பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி. இ.டி. முகமது பஷீர், மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் உள்ளிட்டோர் இன்று ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினர்.
தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக திமுக தனது ஆதரவு நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கம். அடுத்த பல ஆண்டுகளுக்கு இந்திய அரசியலின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் முடிவு என்பதால் இந்தச் சந்திப்பு நாடு முழுவதும் பெரும் கவனம் பெற்றது.
இந்தச் சந்திப்பின் முடிவில், தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பது என்ற முடிவில் மாற்றம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார் திமுக தலைவர் ஸ்டாலின். தமிழ்நாட்டின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தியா கூட்டணி தலைவர்கள் திரண்டு வந்து சந்தித்தும், ஸ்டாலின் மனதை மாற்ற முடியவில்லை.
நாளை தொகுதி மறுவரையறை மசோதா தாக்கலின்போது, திமுக ஆதரவாக வாக்களித்தால் இந்த மசோதா நிச்சயம் நிறைவேறும் சூழல் உள்ளது. எனவே, அடுத்த பல ஆண்டுகளுக்கு இந்திய அரசியல் வரைபடத்தை தீர்மானிக்கும் சக்தியாக திமுக உருவெடுத்துள்ளது.





Click it and Unblock the Notifications
