பெண் அதிகாரிக்கு மிரட்டல்.. தலைமறைவான திமுக எம்எல்ஏ! தனிப்படை அமைத்து தேடும் கள்ளக்குறிச்சி போலீஸ்!
சென்னை: பெண் உயரதிகாரிக்கு மிரட்டல் விடுத்த ரிஷிவந்தியம் திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண்கள் வன்கொடுமைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவரைக் கைது செய்ய தியாகதுருகம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், தலைமறைவாகியுள்ளார் வசந்த கார்த்திகேயம். இந்நிலையில், முன் ஜாமின் கேட்டு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் வசந்தம் கார்த்திகேயன் மனு தாக்கல் செய்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மகளிர் திட்ட இயக்குனராக லலிதா என்ற பெண் அதிகாரி பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ்நாடு வாழ்வாதார இயக்க மேலாண்மை இயக்குனர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம், எம்எல்ஏ வசந்தன் கார்த்திகேயன் குறித்து புகார் அளித்திருந்தார்.

தான் சாதி பார்த்து வேலை செய்தவதாக இழிவாக பேசியதோடு, பணியில் நீடிப்பது குறித்து மிரட்டல் விடுக்கும் வகையில் வசந்தம் கார்த்திகேயன் மிரட்டல் விடுத்ததாக புகாரில் தெரிவித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் சமூக வலைதளங்களில் அநாகரிகமாக மெசேஜ் செய்தது மட்டுமின்றி தன்னைக் குறித்து அவதூறு பரப்பியதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.
இதன் அடிப்படையில் தியாகதுருவம் காவல்துறையினர் வசந்தம் கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு செய்து இருக்கின்றனர். பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டம், பெண்ணை அவமதிக்கும் நோக்கில் பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கள்ளக்குறிச்சிதவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதாகியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது அதே மாவட்டத்தில் திமுக எம்எல்ஏ மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, அந்த பெண் அதிகாரி வேறு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, கடந்த நவம்பர் 23ஆம் தேதி பணியில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில், நேற்று நீதிபதி பானுமதி முன்பு அந்த பெண் அலுவலர் ஒன்றரை மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
வாக்குமூலம் முடிந்து அவர் வெளியேறுவதற்கு சற்று முன்பு, நீதிமன்ற வளாகத்திற்குள் இருந்த செய்தியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, பிரதான நுழைவாயில் மூடப்பட்டது. மேலும், பாதுகாப்புக் கருதி 30க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து, இரவு 8 மணியளவில் அவர் பாதுகாப்பாக நீதிமன்றத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த வழக்கில் சாட்சிகளின் விசாரணை நிறைவடைந்த பிறகே, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்படும் என போலீசார் சொல்கின்றனர்.
இதற்கிடையே திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயனை கைது செய்யும் நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தியாகதுருவம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் வசந்தம் கார்த்திகேயனை கைது செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் இல்லங்களில் விசாரணை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.
மேலும் அவரது செல்போன் எண்ணை வைத்து அவரை கைது செய்யும் நடவடிக்கையும் தொடர்கிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என்பதால் தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார் வசந்தம் கார்த்திகேயன். இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications
