மொத்த இந்தியா கூட்டணியும் வந்தும் பலனில்லை! முடிவில் உறுதியாக இருந்த ஸ்டாலின்!
சென்னை: தொகுதி மறுவரையறை விஷயத்தில், திமுகவை சமாதானப்படுத்த இந்தியா கூட்டணி தலைவர்கள் சென்னை வந்து மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளனர். ஆனால், திமுக தனது முடிவில் உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறுவரையறை விஷயத்தில் மத்திய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை திமுக எடுத்திருந்தது. இது காங்கிரஸுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. எனவே, திமுகவை சமாதானப்படுத்த சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, எம்.ஏ.பேபி, மம்தா பானர்ஜி, டி.கே.சிவகுமார், ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட தலைவர்கள் ஸ்டாலின் வீட்டிற்கு வந்திருந்தனர்.

தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற ஸ்டாலின் ஆதரவு கொடுத்ததற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், காங்கிரஸ் மீதான அதிருப்திதான் முதன்மையானது என்று சொல்லப்படுகிறது. அதாவது, 2026 சட்டமன்ற தேர்தல் சமயத்திலும், தேர்தலுக்கு பின்னரும் காங்கிரஸின் அணுகுமுறை திமுகவை ரொம்பவே டென்ஷனாக்கியிருந்தது. இப்படி இருக்கையில், தொகுதி மறுவரையறை மசோதா விஷயத்தில் தனக்கு பின்னால் திமுக அணிதிரள வேண்டும் என்று காங்கிரஸ் எதிர்பார்த்தது. ஆனால், திமுக அப்படி செய்யவில்லை.
ஏற்கெனவே இந்தியா கூட்டணியை உருவாக்கிய நிதிஷ் குமார் கழன்று போய்விட்டார். இது தவிர ம்மதா பானர்ஜியும், அரவிந்த கெஜ்ரிவாலும் லைனுக்குள் வராமல் இருக்கிறார்கள். ஆனாலும் இந்த மசோதா விஷயத்தில் கூட்டணி கட்சிகளை காங்கிரஸ் கஷ்டபட்டு ஒன்றிணைத்துள்ளது. இதில் மிஸ்ஸிங் திமுக மட்டும்தான்.
எனவே திமுகவை சமாதானப்படுத்த தலைவர்கள் இன்று சென்னை வந்திருக்கின்றனர். சுமார் 1 மணி நேரம் தாண்டி இந்த சந்திப்பு நீடித்தது. இந்த சந்திப்பில், தொகுதி மறுசீரமைப்பு செயல்முறையின் விளைவுகள் குறித்து சோனியா காந்தி விளக்கமளித்ததாகக் கூறப்படுகிறது. மறுபுறம், இந்த நடைமுறை அடுத்த ஆண்டு அமல்படுத்தப்பட்டால் அது தமிழ்நாட்டிற்கு எவ்வாறு பாதகமாக அமையும் என்பதை ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்த மசோதாவை ஆதரிக்கக் கூடாது என்று தாங்கள் முடிவெடுத்தால், காங்கிரஸ் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியபோது, காங்கிரஸ் தரப்பிலிருந்து தெளிவான பதில் கிடைக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட ஸ்டாலின், நாங்கள் ஆதரித்தாலும் உறுதியாக இருப்போம்.. எதிர்த்தாலும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்போம் என்று கூறியிருக்கிறார். சோனியா காந்தியும், ராகுல் காந்தியும், ஸ்டாலினுடன் தனியாக பேசியபோதும், அவர் தனது முடிவில் உறுதியாக இருந்ததாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications
