ஸ்டாலின் இப்ப செய்றதெல்லாம் சரியா? திமுகவின் 39, 59 லாப கணக்கு தப்பாகுமோ? பாஜக ரெடியாயிருக்கு போல
சென்னை: தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பது முக்கியம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் அந்த உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் எதிர்காலத்திலும் தமிழகத்துக்குச் சாதகமாக இருக்க வேண்டும். இப்போது திமுக எடுத்திருக்கும் முடிவில் கிடைக்கும் பலன்கள் என்ன? கவனிக்க வேண்டிய ஆபத்துகள் என்ன? இதை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
தொகுதி மறுவரையறையை எதிர்த்து வந்த திமுக, இப்போது மத்திய அரசின் புதிய மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதற்கு ஸ்டாலின் சொல்லும் காரணம், தமிழகத்தின் இரண்டு முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதுதான்.

தமிழகத்தின் இப்போதுள்ள 7.18 சதவீத மக்களவைப் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது. மேலும், 1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையிலான மாநிலங்களின் தொகுதிப் பங்கீட்டு விகிதம் அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொடர வேண்டும் என்பதுதான் அந்தக் கோரிக்கைகள்.
திமுக சொல்வது நியாயமா
தமிழகம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் பல ஆண்டுகளாக கவனம் செலுத்தி வருகிறது. குடும்ப கட்டுப்பாடு, கல்வி, சுகாதாரம் எனப் பல துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது.
ஆனால் மக்கள் தொகை அதிகமாக இருக்கும் மாநிலங்களுக்கு அதிக தொகுதிகள் வழங்கப்பட்டால், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறையலாம்.
அதனால், தமிழகத்தின் தற்போதைய பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையில் நியாயம் இருக்கிறது.
39 தொகுதிகள் 59 என்றால்?
இப்போது தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. புதிய திட்டத்தின்படி இது 59 ஆக உயர வாய்ப்புள்ளது. தமிழகத்தின் மொத்தப் பிரதிநிதித்துவ விகிதமும் 7.18 சதவீதத்திலிருந்து 7.21 சதவீதமாக அதிகரிக்கும் என்று திமுக கூறுகிறது.
இது தமிழகத்துக்கு சாதகமான மாற்றம்தான். ஆனால் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமே அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்திவிடாது.
பாஜகவின் பலம்
பாஜகவின் பலம்தான், இந்த விவகாரத்தில் எழுப்பப்படும் முக்கியமான எதிர்ப்பு... தொகுதி மறுவரையறைக்கு பிறகு உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், அங்கு பாஜக வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பது எதிர்க்கட்சிகளின் அச்சம்.
ஆனால் தொகுதிகள் அதிகரிப்பதால் பாஜகவின் வெற்றி தானாக உறுதியாகிவிடாது. தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பைப் பொறுத்தே கட்சிகளின் பலம் அமையும்.
தென்னிந்தியாவுக்கு மைனஸ்
தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களும் இந்த விவகாரத்தில் கவலை தெரிவிக்கின்றன... வடமாநிலங்களில் தொகுதிகள் அதிகமாக அதிகரித்தால், நாடாளுமன்றத்தில் தென்னிந்திய மாநிலங்களின் ஒட்டுமொத்தப் பங்கு குறையக்கூடும்.
இதனால் தென்னிந்தியாவின் ஆதரவு இல்லாமலேயே மத்திய அரசால் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய நிலை உருவாகுமா என்ற கேள்வியும் எழுகிறது.
மாநில உரிமைகளுக்கு ஆபத்து
நாடாளுமன்றத்தில் ஒரு தரப்பின் அரசியல் பலம் அதிகரித்தால், மாநிலங்களின் கோரிக்கைகளுக்கு முன்பு இருந்த முக்கியத்துவம் கிடைக்காமல் போகலாம் என்ற அச்சம் இருக்கிறது.
முக்கியமாக மொழிக் கொள்கை, நிதிப் பகிர்வு, கல்வி மற்றும் மாநில அரசுகளின் அதிகாரம் போன்ற விவகாரங்களில் தென்னிந்திய மாநிலங்களின் எதிர்ப்புக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்குமா என்பதுதான் கேள்வி. இதுதான் தொகுதி எண்ணிக்கையைத் தாண்டி எழும் பெரிய விவாதம்.
பெண்கள் இடஒதுக்கீடு
பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது வரவேற்க வேண்டிய முடிவு. ஆனால் அதற்காக மக்களவைத் தொகுதிகளை அதிகபட்சம் 850 ஆக உயர்த்த வேண்டுமா? தற்போதுள்ள 543 தொகுதிகளிலேயே பெண்கள் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியாதா என்ற கேள்வியை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்புகின்றன.
அதுமடுடுமல்ல, தொகுதி மறுவரையறையை ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட மத்திய அரசின் பிற திட்டங்களுடன் இணைத்துப் பார்க்க வேண்டும் என்ற அரசியல் விமர்சனமும் உள்ளது.
ஸ்டாலினை தேடி வந்த தலைவர்கள்
திமுகவின் முடிவை காங்கிரஸ் ஏற்கவில்லை. இந்தியா கூட்டணியின் மற்ற கட்சிகளும் இந்த மசோதாவை எதிர்க்கின்றன. ஆனால் திமுக தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. தமிழகத்தின் உரிமையைப் பாதுகாப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார்.
இந்த நிலையில், ராகுல் காந்தி, சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் ஸ்டாலினை சந்தித்துள்ளனர்.. நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நவம்பர் 30-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், திமுக தனது ஆதரவு முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கம்.
திமுக செய்வது சரியா?
இந்த விவகாரத்தில் திமுகவின் முடிவை முழுமையாக தவறு என்று சொல்லிவிட முடியாது. தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது என்ற அதன் வாதத்தில் நியாயம் இருக்கிறது.. அதேசமயம், மத்திய அரசு அளிக்கும் உறுதிமொழிகளை மட்டும் நம்பி ஆதரவு தெரிவிப்பதும் சரியான அணுகுமுறையா என்ற கேள்வி எழுகிறது.
தமிழகத்தின் 7.18 சதவீத பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுவதுடன், தொகுதி மறுவரையறை ஆணையத்தின் அதிகாரம், தொகுதிகளின் எல்லைகள், மாநிலங்களின் எதிர்கால அரசியல் செல்வாக்கு ஆகியவற்றுக்கும் தெளிவான சட்டப் பாதுகாப்பு இருக்க வேண்டும்.
பாஜக கொண்டுவரும் மசோதாவை ஆதரிப்பது பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்குச் சமமல்ல. ஆனால் அந்த ஆதரவால் எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகளுக்கு திமுகவும் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
தமிழகத்தின் உரிமைக்காக திமுக எடுத்த துணிச்சலான முடிவா இது? அல்லது உடனடியாகக் கிடைக்கும் பலனைப் பார்த்து எதிர்கால அரசியல் ஆபத்துகளைப் புறக்கணித்துவிட்டதா? இதற்கான பதிலை மசோதாவின் சட்டப் பாதுகாப்புகளும், அதன் நடைமுறை விளைவுகளும்தான் தீர்மானிக்கும்... பொறுத்திருந்து பார்ப்போம்...!!




Click it and Unblock the Notifications
