ஜெர்ரிமாண்டரிங் பண்ணிடுவாங்க! ஸ்டாலினிடம் கலங்கிய சோனியா! அப்படி என்றால் என்றால் என்ன? பின்னணி
டெல்லி: நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா குறித்து நாடு முழுவதும் விவாதம் சூடுபிடித்துள்ளது. இது தொடர்பாக திமுகவின் நிலைப்பாட்டை மாற்ற காங்கிரஸ் தீவிரமாக முயன்று வருகிறது.
நாளை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், மத்திய பாஜக அரசு கொண்டு வரவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அறிவித்துள்ளது. இந்த முடிவைத் திரும்பப் பெற வலியுறுத்தி, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட 'இந்தியா' கூட்டணி மூத்த தலைவர்கள் இன்று தனி விமானங்களில் சென்னைக்கு வந்துள்ளனர்.

ஸ்டாலினிடம் சோனியா உள்ளிட்ட தலைவர்கள் ஜெர்ரிமாண்டரிங் குறித்து எச்சரித்து உள்ளனர். தொகுதி மறுவரை பேச்சு தொடங்கியதில் இருந்தே.. அதன் விவாதத்தில் ராகுல் காந்தி, ப.சிதம்பரம், அருந்ததி ராய், துருவ் ராதே உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் விமர்சகர்களும் தொடர்ந்து பயன்படுத்தி வரும் ஒரு ஆங்கிலச் சொல் ஜெர்ரிமாண்டரிங்" (Gerrymandering)*
இந்த 'ஜெர்ரிமாண்டரிங்' என்றால் என்ன? அது 200 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி உருவானது? இந்தியாவின் தற்போதைய தொகுதி மறுவரையறை மசோதாவில் இந்தச் சொல் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை எளிய தமிழில் விரிவாகப் பார்க்கலாம்.
'ஜெர்ரிமாண்டரிங்' என்றால் என்ன?
தேர்தலில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு வெற்றி வாய்ப்பை அதிகரிப்பதற்காக, தேர்தல் தொகுதிகளின் எல்லைகளைத் திட்டமிட்டு, விசித்திரமான வடிவங்களில் மாற்றி அமைக்கும் தந்திரத்திற்குப் பெயர்தான் 'ஜெர்ரிமாண்டரிங்'.
உதாரணமாக, ஒரு நகரத்தில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை மாறாமலேயே, எந்தப் பகுதியை எந்தத் தொகுதியோடு இணைத்தால் நமக்கு அதிக வாக்குகள் கிடைக்கும், எதிர்க்கட்சியின் வாக்குகளை எப்படிச் சிதறடிக்கலாம் எனக் கணக்குப் போட்டு வரைபடத்தில் எல்லைக் கோடுகளை வரைவதே இதன் அடிப்படை. அதாவது பாஜக இந்துத்துவா கட்சி என்பதால் தொகுதிகள் அனைத்தையும் இந்துக்கள் மெஜாரிட்டி இருப்பது போல வடிவைப்பதே ஜெர்ரிமாண்டரிங் ஆகும்.
இந்தப் பெயர் எப்படி வந்தது?
1812-ம் ஆண்டு அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தின் ஆளுநராக இருந்தவர் எல்பிரிட்ஜ் ஜெர்ரி. அப்போது தனது கட்சிக்குச் சாதகமாகத் தேர்தல் தொகுதிகளின் எல்லைகளை அவர் மாற்றி அமைத்தார். அப்படிப் பிரிக்கப்பட்ட ஒரு தொகுதியின் வரைபடம், பல்லி போன்ற உருவமுடைய சாலமண்டர் என்ற உயிரினத்தின் வடிவத்தில் விசித்திரமாக இருந்தது.
இதை விமர்சித்து அன்றைய நாளிதழ் ஒன்று வெளியிட்ட கார்ட்டூனில், ஆளுநர் ஜெர்ரியின் பெயரையும், சாலமண்டரையும் இணைத்து ஜெர்ரி-மாண்டர் எனக் குறிப்பிட்டது. அன்றிலிருந்து உலகம் முழுவதும் தொகுதி எல்லைகளில் செய்யப்படும் அரசியல் தந்திரங்களுக்கு இந்தப் பெயர் நிலைத்துவிட்டது.
ஜெர்ரிமாண்டரிங் எப்படிச் செய்யப்படுகிறது?
அரசியல் அறிவியல் வல்லுநர்கள் இதில் நான்கு முக்கியத் தந்திரங்களைச் சுட்டிக்காட்டுகின்றனர்:
1. உடைத்தல்: எதிர்க்கட்சி வலுவாக உள்ள ஒரு பகுதியின் வாக்காளர்களைப் பல துண்டுகளாகப் பிரித்து, வெவ்வேறு தொகுதிகளில் சேர்த்துவிடுவது. இதனால் எந்தத் தொகுதியிலும் அவர்களால் வெற்றி பெற முடியாமல் போகும்.
2. குவித்தல்: எதிர்க்கட்சிக்கு ஆதரவான வாக்காளர்கள் அனைவரையும் ஒரே தொகுதிக்குள் அடைத்துவிடுவது. இதன் மூலம் எதிர்க்கட்சி அந்த ஒரு தொகுதியில் மட்டும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்லும்.. ஆனால் சுற்றியுள்ள மற்ற தொகுதிகளில் ஆளும் கட்சி எளிதாக வென்றுவிடும்.
3.ஒன்றிணைத்தல்: எதிர்க்கட்சியின் இரண்டு முக்கியத் தலைவர்கள் போட்டியிடும் வெல்லும் தொகுதிகளை ஒன்றாக இணைத்து, இருவரையும் ஒரே தொகுதியில் மோதவிடுவது. இதனால் எதிர்க்கட்சிகளின் வெற்றி எண்ணிக்கைக்கு குறையும்.
4. எல்லை மாற்றுதல்: ஒரு எதிர்க்கட்சி எம்.பி அல்லது எம்.எல்.ஏ-வின் சொந்த ஊரையும், அவருக்குச் செல்வாக்கு உள்ள பகுதிகளையும் வெட்டி வேறு தொகுதியோடு இணைத்து, அவரைத் தனது வாக்காளர்களிடம் இருந்து பிரிப்பது.
இந்தியாவின் 2026 தொகுதி மறுவரையறை மசோதாவில் இது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?
மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய மசோதாவின்படி, அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே சீராக 50% இடங்கள் உயர்த்தப்பட்டு, மக்களவைத் தொகுதிகள் 543-லிருந்து 850 ஆகவும், மாநில சட்டமன்றத் தொகுதிகள் 50% அதிகமாகவும் உயரவுள்ளன. மேலும், 2051-ம் ஆண்டு வரை மாநிலங்களின் விகிதாச்சாரப் பங்கு மாறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் 'ஜெர்ரிமாண்டரிங்' குறித்த அச்சத்தை எழுப்புவதற்கு முக்கியக் காரணங்கள் உள்ளன:
ஒரு மாநிலத்தின் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 50% உயர்ந்தாலும், தமிழ்நாட்டில் புதிதாக உருவாகும் 20 எம்பி தொகுதிகள் மற்றும் 117 சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளை தொகுதி மறுவரையறை ஆணையம் புதிதாக வரையறுக்கும்.
தொகுதி மறுவரையறை ஆணையத்தை நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் இருப்பதால், ஆளும் பாஜக தனக்குச் சாதகமான வாக்கு வங்கிகளை ஒருங்கிணைத்தும், சிறுபான்மையினர் மற்றும் எதிர்க்கட்சி வாக்குகளைப் பிரித்தும் எல்லைகளை அமைக்க வாய்ப்புள்ளதாகக் காங்கிரஸ் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. சமீபத்தில் அசாம் மாநிலத்தில் நடந்த தொகுதி மறுவரையறையே இதற்கு உதாரணம் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறம், தொகுதி மறுவரையறை ஆணையம் என்பது உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில், தேர்தல் ஆணையர் மற்றும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கொண்ட குழுவாகச் செயல்படும் என்றும், பொதுமக்களின் கருத்துகளைக் கேட்ட பிறகே வரைபடம் இறுதி செய்யப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தாண்டி, புதிய தொகுதிகளின் எல்லைக் கோடுகள் எந்தப் பகுதியை உள்ளடக்கி வரையப்படப் போகின்றன, எப்படி தொகுதிகள் தீர்மானிக்கப்பட உள்ளன என்பதுதான் அடுத்த 25 ஆண்டுகளுக்கான இந்தியத் தேர்தல் அரசியலின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கப் போகிறது. அதனால்தான் 'ஜெர்ரிமாண்டரிங்' என்ற சொல் இப்போது இந்திய அரசியலின் மையப் புள்ளியாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications
