சோனியாவே வந்தாலும் 'Go Back Congress' தான்! ஸ்டாலின் வீட்டின் முன்பு கெத்தாக நின்ற ஜென் ஸீ நிர்வாகி
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் வைத்து சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் சந்திக்க இருக்கின்றனர். இப்படி இருக்கையில், ஸ்டாலின் வீட்டின் முன்பு 'Go Back Congress' என பதாகையை ஏந்தியவாறு கட்சியின் Gen-Z நிர்வாகி, காங்கிரஸுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
தொகுதி மறுவரையறை விஷயத்தில், மத்திய அரசு தீவிரமாக இறங்கியிருக்கிறது. நாளை மக்களவையில் மசோதா தாக்கலாகிறது. மசோதா நிறைவேற 3ல் 2 பங்கு எம்பிக்கள் ஆதரவு அவசியம். அதாவது ஆளும் கட்சியை தாண்டி.. எதிர்க்கட்சிகளின் ஆதரவும் முக்கியம். இந்த நேரத்தில்தான் மசோதாவுக்கு ஆதரவளிப்பதாக திமுக அறிவித்திருக்கிறது.

திமுகவின் இந்த நிலைப்பாடு, காங்கிரஸுக்கு தூக்கி வாரி போட்டிருக்கிறது. எதிர்க்கட்சி என்பது சாதாரண பொறுப்பு கிடையாது. மற்ற எல்லா கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் தலைமை பண்பு அவசியம். ஆனால், திமுகவின் நிலைபாட்டை பார்க்கும்போது காங்கிரஸ் அந்த தகுதியை இழந்துவிட்டதோ? என விமர்சனங்கள் வெடித்திருந்தன. இந்த விமர்சனங்களால் பதறிப்போன காங்கிரஸ், தற்போது மு.க.ஸ்டாலின் இல்லாம் தேடி வந்திருக்கிறது.
சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி, எம்.ஏ.பேபி, ரேவந்த் ரெட்டி, டி.கே.சிவகுமார் என இந்தியா கூட்டணியின் பெரும் தலைகள் எல்லாம் சென்னையில் முகாமிட்டிருக்கின்றன. மாலை 4.30 மணிக்கு ஸ்டாலினுடன் மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியா கூட்டணி தலைவர்கள் இதை பாசிட்டிவாக அணுக முயன்றாலும், திமுகவினர் அவ்வளவு சீக்கிரத்தில் காங்கிரஸ் ஏற்படுத்திய காயத்தை மறக்கவில்லை. எனவே, ஸ்டாலின் வீட்டின் முன்பு 'Go Back Congress' என பதாதகையை ஏந்தியவாறு கட்சியின் Gen-Z நிர்வாகிகள் திரண்டிருக்கின்றனர்.
இதற்கு காங்கிரஸ்தான் காரணம். 2026 தேர்தலுக்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பு இருந்து ஏழரையை காங்கிரஸ் தொடங்கியது. கூடுதல் வேண்டும் என்று கேட்டது. சீட் கொடுக்கப்படவில்லை. சீட்டில் கூடுதல் குறைவு இருந்தாலும் ஓகேதான்.. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கதர் தலைகள் ஒற்றைக்காலில் நின்றார்கள். ஸ்டாலின் அசைந்துக்கொடுக்கவில்லை. அப்புறம் என்ன.. தன்னிச்சையாக ஒவ்வொரு கதர் தலைகளும் ஆட்சியில் பங்கு என்கிற விஷயத்தை பேச தொடங்கிவிட்டார்கள்.
இது திமுகவை டென்ஷனாக்கியது. இத்துடன் நிற்கவில்லை.. தேர்தல் ரிசல்ட் வந்ததும் வராததுமாய், ஓடிப்போய் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தார்கள். ஏற்கெனவே திமுக கூட்டணியில் இருக்கிறோம். அவர்களிடம் எதிர்கால அரசியல் குறித்து கலந்தாலோசிப்போம்! பின்னர் முடிவை அறிவிக்கலாம் என்று யோசிக்கவில்லை. திமுகவிடம் சொல்லிக்கொள்ளாமல் ஓடியது காங்கிரஸ். அங்கு போயும் சும்மா இல்லை! திமுகவை தொடர்ந்து சீண்டிக்கொண்டே இருந்தது.
இதெல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் ஆறக்கூடிய காயங்கள் அல்ல. எனவேதான் கட்சி நிர்வாகிகள் இந்த விஷயத்தில் காங்கிரஸ் மீது கடுப்பில் இருக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் Gen-Z நிர்வாகியின் 'Go Back Congress' என்கிற பதாதகை! திமுகவின் Gen-Z நிர்வாகியும், வழக்கறிஞருமான சரண்யா தனது டேப்லெட்டில் 'Go Back Congress' என காட்டியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
