கேவலமா பேசுனது தப்புதான், கால்ல கூட விழுறேன்! தொகுதி மறுவரையறைக்கு சப்போர்ட் பண்ணாதீங்க: காங். கதறல்
மும்பை: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) ஆதரவு கொடுத்ததால், காங்கிரஸ் டென்ஷனாகியிருக்கிறது. இதனால் மகாராஷ்டிரா காங்கிரஸ் எம்எல்ஏ, சரத்பவாரை சகட்டு மேனிக்கு பேசியிருக்கிறார். பேசுவதையெல்லாம் பேசிவிட்டு.. இப்போது மன்னிப்பு கேட்டு வருகிறார்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, மகாராஷ்டிராவிலும் தொகுதி மறுவரையறை மசோதா புயலை கிளப்பியிருக்கிறது. இந்தியா கூட்டணியில் அங்கமாக இருக்கும் கட்சிகள், இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பது காங்கிரஸின் கோரிக்கை. ஆனால், யாரும் மதிக்கவில்லை.

குறிப்பாக திமுகவும், சரத்பவார் அணியும் கொஞ்சம் கூட கண்டுக்கொள்ளவில்லை. சரத்பவார் அணிக்கு நாடாளுமன்றத்தில் 9 எம்பிக்கள் இருக்கிறார்கள். 8 மக்களவை எம்பி, 1 மாநிலங்களவை எம்பி. மசோதாவை நிறைவேற்ற பாஜகவுக்கு 3ல் 2 பங்கு மெஜாரிட்டி வேண்டும் என்பதால், ஒரு எம்பியை கூட பாஜக விட்டுக்கொடுக்க ரெடியாக இல்லை. நிலைமை இப்படி இருக்கையில் சரத்பவார் அணி தொக்காக 9 எம்பிக்களின் ஆதரவை பாஜகவுக்கு அறிவித்திருக்கிறது.
நேத்து வரைக்கும் இந்தியா கூட்டணியில் இருந்த டீம், இப்போ திடீர்னு பாஜகவுக்கு சப்போர்ட் பண்ணுவதை மகாராஷ்டிரா மக்கள் குழப்பமாக பார்க்கிறார்கள். இந்தியா கூட்டணியை காங்கிரஸ் சரியாக வழிநடத்தாததால்தான் இப்படி கூட்டணிக்கு குழப்பம் வருகிறது என்று விமர்சித்திருக்கிறார்கள். இப்படியே போனால்.. காங்கிரஸ் மீது மக்களுக்கு உள்ள கொஞ்சம் மரியாதை கூட சரிந்துவிடும். இதை கட்சி விரும்பவில்லை. எனவே சரத்பவாருக்கு எதிராக என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து வருகிறது.
சூழல் இப்படி இருக்கையில்.. உள்ளே புகுந்து வாய் விட்டு மாட்டிக்கொண்டிருக்கிறார் மகாராஷ்டிரா காங்கிரஸ் எம்எல்ஏ விஜய் வடெட்டிவார். "85 வயதாகும் சரத் பவார், தனது வாழ்நாள் முழுவதும் முற்போக்கு சிந்தனைகளை பேசிவிட்டு.. இப்போது மதவாத சக்திகளுடன் கைகோர்ப்பார் என்று நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. மக்களை முதுகில் குத்துவதுதான் பவாரின் வரலாறு. இது நாட்டு மக்களுக்கு தெரியும்.
1978 ஆம் ஆண்டு அப்போதைய மகாராஷ்டிரா முதலமைச்சர் வசந்ததாதா பாட்டீலின் முதுகில் குத்திவிட்டு, ஜனதா கட்சியின் ஆதரவுடன் சரத்பவார் முதலமைச்சரானதை மக்கள் மறக்கவில்லை. 48 ஆண்டுகளுக்கு பிறகு அதே வரலாற்றை சரத்பவார் மீண்டும் நிகழ்த்துகிறார். தேசியவாத காங்கிரஸ் கட்சி அதிகாரத்துக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. அதிகாரம் இல்லாமல்.. அந்த கட்சியால் உயிர் வாழ முடியாது. அவர்களுக்கு எந்த கொள்கையும் இல்லை. அவர்கள் அதிகாரத்துக்காகவே பிறந்தவர்கள். அதிகாரத்தில் இருந்து கொண்டே சாக வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் எண்ணம். தண்ணீரை விட்டு வெளியேறி எறியப்பட்ட மீனைப் போல சரத்பவார் மாறிவிட்டார்" என கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதை பார்க்கும்போது.. வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் பானையை உடைத்ததை போல இருக்கிறது. காங்கிரஸ், மற்ற எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய நேரம் இது. என்னதான் முரண்பாடுகள் இருந்தாலும்.. பேசி சமாதானம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும். அப்படிப்பட்ட வாய்ப்பு கண் முன் இருக்கும்போது.. அதை மொத்தமாக காலி செய்வதை போல காங்கிரஸ் எம்எல்ஏவின் பேச்சு அமைந்துவிட்டது. இவ்வளவு திட்டுக்களை வாங்கிக்கொண்டு சரத்பவார் எப்படி மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருவார்?
எனவே காங்கிரஸ் தலைமை, எம்எல்ஏவை கூப்பிட்டு ரெய்டு விட்டிருக்கிறது. அப்புறம் என்ன.. வழக்கம்போல டோனை மாற்றி பேசி, சரத்பவாரை சமாதானப்படுத்த முயன்றிருக்கிறார் எம்எல்ஏ. "சரத்பவார் இந்த மசோதாவை ஆதரிக்கவில்லை எனில்.. பொது இடத்தில் அவரது காலில் என் தலையை வைத்து மன்னிப்பு கேட்க ரெடி. அவர் சொன்னால் அரசியலைவிட்டே விலக கூட ரெடியாக இருக்கிறேன். அவரை காயப்படுத்தும் நோக்கில் நான் இதை சொல்லவில்லை" என்று கூறியிருக்கிறார்.
இதையெல்லாம் பார்க்கும்போது.. வாய்ப்பு கிடைக்கும்போது எகிறிவிட்டு.. வேலை ஆக வேண்டும் என்கிற நிலை வரும்போது.. பம்புவது காங்கிரஸுக்கு ஒன்றும் புதிய விஷயம் கிடையாது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதிலும்.. 'முதுகில் குத்திவிட்டது' என்கிற டயலாக்கை காங்கிரஸ் மொத்தமாக குத்தகைக்கு எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறது போல! மகாராஷ்டிரா மட்டுமல்லாது.. தமிழ்நாட்டிலும் திமுகவை இப்படித்தான் சொன்னது. இப்போது பேச்சுவார்த்தைக்கு வீடு தேடி வந்திருக்கிறது. என்ன இருந்தாலும் உப்பு திண்றவர்கள் தண்ணீர் குடித்துதானே ஆகவேண்டும்! தமிழ்நாட்டிலும், மகாராஷ்டிராவிலும் காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது என்பதை பார்ப்போம்.




Click it and Unblock the Notifications
