திமுகவின் பலம் முன்னாடி தெரியலையா..? ஒரே அடியில் இப்போது ஸ்டாலினை தேடி ஓடிவரும் காங்கிரஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வந்ததுமே, திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக கூட்டணியில் இணைந்தது காங்கிரஸ். இன்றைக்கு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள், திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க டைம் கேட்டு காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் பாஜகவை எதிர்க்க திமுகவின் தயவு எவ்வளவு தேவை என்பதை மிக மிக தாமதமாக உணர்ந்திருக்கிறது காங்கிரஸ்.

தமிழக அரசியலில் நீண்டகாலமாக திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து வந்தது. இந்தக் கூட்டணியில் யாருக்கு யாருடைய தேவை அதிகம் என்ற கேள்வி அப்போதெல்லாம் முக்கியத்துவம் பெறவில்லை. இப்போது தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக எடுத்துள்ள முடிவும், அதை மாற்ற வலியுறுத்தி ஒட்டுமொத்த தேசியத் தலைவர்களும் சென்னைக்கு வந்திருப்பதும் இந்தக் கேள்வியை இன்னும் வலுவாக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி, தற்போது திமுகவின் முடிவை மாற்றுவதற்காக அதன் தலைவரைத் தேடி வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Congress

வெளியேறிய காங்கிரஸ்

தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீண்டகாலமாக இடம்பெற்று வந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தல் பேச்சுவார்த்தைகளின்போது கூட்டணிக்குள் அதிகாரப் பகிர்வு தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்தன. அதிக தொகுதிகள், அமைச்சரவையில் இடம் என காங்கிரஸ் தரப்பில் எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. குறிப்பாக, ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் வெளிப்படையாக ஒலிக்கத் தொடங்கியது.

திமுகவோ, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை நிராகரித்தது. எனினும், பேச்சுவார்த்தைகளின் முடிவில், முன்பைப் போலவே சீட்களை வழங்கி இருந்தது. தேர்தலில் திமுக தோல்வியடைந்து, தவெக அதிக இடங்களில் வென்றதும், தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு விஜய்யின் தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்தது.

காங்கிரஸ் இல்லாமலேயே

காங்கிரஸ் இல்லாமல் திமுகவால் தேர்தலை எதிர்கொள்ள முடியும் என்பதை நடந்து முடிந்த இடைத்தேர்தலில் திமுக மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியது. குறிப்பாக, அதிமுக செல்வாக்கு அதிகமுள்ள தொகுதிகளான மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில்கூட, கூட்டணி முறிவைத் தாண்டி திமுக இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

ஒரு கட்சியின் பலத்தைத் தீர்மானிப்பது அதன் கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கை மட்டுமல்ல. அதன் அமைப்பு பலம், வாக்கு வங்கி, அடிமட்டத் தொண்டர்களும் மிக முக்கியம். அந்த வகையில், காங்கிரஸ் கூட்டணியில் இல்லாவிட்டாலும் திமுகவுக்கு தமிழகத்தில் தனக்கென ஒரு வலுவான அரசியல் தளம் இருக்கிறது என்பதை திமுக நிரூபித்துள்ளது.

மீண்டும் திமுகவை நோக்கி வரும் காங்கிரஸ்

இந்தச் சூழலில் தொகுதி மறுவரையறை மசோதா விவகாரம்தான் தற்போது காங்கிரஸை திமுகவை நோக்கி தேடி வர வைத்துள்ளது. நியாயமான தொகுதி மறுவரையறையை கோரி வந்தது திமுக. கடந்த ஏப்ரலில் பாஜக அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்திய கூட்டணி கட்சிகள் எதிர்த்து வாக்களித்ததால் தோல்வி அடைந்தது.

தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிப் பங்கு 7.18 சதவீதத்திற்கு குறையாமல் பாதுகாக்கப்பட வேண்டும், மாநிலங்களுக்கு இடையிலான தற்போதைய விகிதாச்சாரம் அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொடர வேண்டும் என்ற நிபந்தனைகளை திமுக முன்வைத்த நிலையில், அவற்றை பாஜக ஏற்றுக்கொண்டு, தொகுதி மறுவரையறை மசோதாவை மாற்றியுள்ளதால், இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்க திமுக முடிவு செய்தது.

ஸ்டாலினை சந்திக்கும் தலைவர்கள்

ஆனால், காங்கிரஸ் கட்சி, திமுகவின் இந்த முடிவை ஏற்கவில்லை. மசோதாவுக்கு எதிராக திமுக வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இதனை ஸ்டாலினை சந்தித்து நேரில் வலியுறுத்துவதற்காகவே, அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களும், இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் தற்போது சென்னைக்குப் படையெடுத்துள்ளனர்.

இங்குதான் திமுகவின் நாடாளுமன்ற பலம் காங்கிரஸுக்குத் தேவைப்படுகிறது. திமுகவுக்கு மக்களவையில் 22 எம்.பி.க்களும் மாநிலங்களவையில் 8 எம்.பி.க்களும் உள்ளனர். நாடாளுமன்றத்தில் முக்கியமான மசோதாக்களை எதிர்கொள்ளும்போது இந்த எண்ணிக்கை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு முக்கியமானது.

சென்னையில் திரண்ட தலைவர்கள்

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் ஸ்டாலினைச் சந்திப்பதற்காகச் சென்னைக்கு வந்துள்ளனர். இவர்களுடன் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களும் வருகை தந்துள்ளனர்.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக திமுக தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கம். தமிழக அரசியலில் திமுகவுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தேர்தலுக்குப் பிறகு வேறொரு அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்தது. தற்போது தேசிய அரசியலில் முக்கியமான ஒரு மசோதாவை எதிர்கொள்ள வேண்டிய சூழலில், மீண்டும் திமுகவின் ஆதரவை நாடி வந்திருக்கிறது.

இதை முன்பே யோசித்திருக்க வேண்டாமா?

காங்கிரஸ் கட்சியின் தேசிய அரசியலுக்கு திமுகவின் ஆதரவு அவசியம். ஆனால், தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் தயவு இல்லாமல் அரசியல் செய்ய முடியும். தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் எதிர்கொள்ள முடியும்.

ஆனால், தேசிய அளவில் காங்கிரஸுக்கு மாநிலக் கட்சிகளின் ஆதரவு அவசியமாகிறது. குறிப்பாக, நாடாளுமன்றத்தில் எண்ணிக்கை பலத்தை உருவாக்குவதற்கு திமுக போன்ற மாநிலக் கட்சிகளின் ஆதரவு முக்கியமானது. இந்த விஷயத்தை தான் தற்போதைய தொகுதி மறுவரையறை விவகாரம் சம்மட்டியால் அடித்துச் சொல்லி இருக்கிறது.

மிஸ் செய்த காங்கிரஸ்

திமுகவுடன் கூட்டணியில் இருந்தபோதே அதன் அரசியல் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட்டிருக்க வேண்டிய காங்கிரஸ், கூட்டணியில் இருந்து விலகி தவெக கூட்டணியில் இணைந்த பிறகுதான் திமுகவின் தேவையை மீண்டும் உணர்ந்திருக்கிறது. இப்போது திமுகவின் ஆதரவைப் பெறுவதற்காக ஒட்டுமொத்த தேசியத் தலைமையையும் சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறது.

வெறும் 2 அமைச்சரவை இடங்களுக்காக திமுக கூட்டணியை விட்டு வெளியேறிய காங்கிரஸ் கட்சி, இன்றைக்கு தேசிய அளவில் மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. காங்கிரஸின் அவசர முடிவு இன்று அக்கட்சிக்கே வினையாக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+