ஸ்டாலின் வீட்டில் "இந்தியா" தலைவர்கள்! ஆனா திடீரென உதயநிதி வீட்டிற்கு போன ஸ்டாலின்! என்ன நடக்கிறது
சென்னை: தொகுதி மறுவரையறை மசோதாக்களுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசுவதற்காக இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ளனர். ஆனால், ஸ்டாலினோ உதயநிதி இல்லத்திற்கு சென்றுள்ளார். அங்கு மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை திமுக எடுத்துள்ளது. இந்த மசோதா நிறைவேற திமுக ஆதரவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், தான் திமுக முடிவு குறித்து ஆலோசிக்க இந்தியா கூட்டணி தலைவர்கள் சென்னை வருகிறார்கள்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பிற்பகலில் ஸ்டாலினை சந்திக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் விவகாரங்களில் இருந்து சோனியா காந்தி விலகியே இருந்தார். ஆனால், அவரே நேரடியாக வந்துள்ளது தேசியளவில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஆழ்வார்பேட்டை சித்ரஞ்சன் சாலையில் உள்ள ஸ்டாலின் வீட்டில் இந்தியா கூட்டணி தலைவர்கள் வரவுள்ளனர். ஆனால், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் இல்லத்தில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோரும் பங்கேற்றார். நீண்ட ஆலோசனைக்கு பிறகே அவர், உதயநிதி இல்லத்தில் இருந்து கிளம்பி சென்றார்.
இன்னும் சற்று நேரத்தில் இந்தியா கூட்டணித் தலைவர்கள் ஸ்டாலினை சந்தித்துப் பேச உள்ளனர். நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாக்கள் தொடர்பாக இப்போது அடுத்தடுத்து திருப்பங்கள் நடந்து வருகிறது.



Click it and Unblock the Notifications
