சோனியா காந்தி வந்து சந்திக்கட்டும்.. ஸ்டாலின் இறுதி முடிவை எடுப்பார்.. அழுத்தமான சொன்ன உதயநிதி!
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க சோனியா காந்தி வந்து பேசினாலும், மாநில உரிமைகளில் எந்த சமரசமும் இருக்காது என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொகுதி மறுவரையறை மசோதா உட்பட முதல்வர் விஜய் எந்த விவகாரத்திற்கும் வாய் திறந்ததே இல்லை என்று கூறிய உதயநிதி ஸ்டாலின், தொகுதி மறுவரையறைக்காக முதல் குரல் கொடுத்தது திமுக தான் என்றும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்காக அத்தனை கட்சிகளிடம் பாஜக மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது திமுக தரப்பில் 2 முக்கிய கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அந்த கோரிக்கைகளையும் பாஜக மசோதாவில் சேர்க்க ஒப்புக் கொண்டு, மத்திய அமைச்சரவையில் அனுமதி அளித்தது.

இதனால் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதாக திமுக எம்பிக்கள் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டு அறிவித்தது. திமுக ஆதரவு அளிப்பதால், தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் எளிதாக நிறைவேறும் சூழல் உருவாகி இருக்கிறது. இது இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு இடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை திமுகவின் கனிமொழி, டி.ஆர்.பாலு, வில்சன், ஆ.ராசா உள்ளிட்டோர் சந்தித்தனர். இந்த நிலையில் தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, கபில் சிபல், ரேவந்த் ரெட்டி, டிகே சிவகுமார், மிசா பாரதி, எம்ஏ பேபி, மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் சென்னை வர உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனை அமைச்சர் விஸ்வநாதன் உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக முதன்முதலில் குரல் கொடுத்தது திமுக தான். திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க இந்தியா கூட்டணி தலைவர்கள் வருவது பற்றி எனக்கு தெரியாது.. அவர்கள் வரட்டும்.. வந்து பார்க்கட்டும்.. இறுதி முடிவை ஸ்டாலின் எடுப்பார்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆ.ராசா, கனிமொழி, தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துவிட்டனர். எந்த விஷயத்திற்காகவும் தமிழ்நாட்டின் உரிமைகளை திமுக விட்டுக் கொடுக்காது. அதேபோல் தொகுதி மறுவரையறை மட்டுமல்ல.. எந்த விஷயத்திற்காக முதல்வர் விஜய் பேசி இருக்கிறார்.. என்று தெரிவித்துள்ளார்.



Click it and Unblock the Notifications
