அபார்ஷன் செய்ய சொன்னார்.. கொலை மிரட்டல் விடுத்தார்! தவெக அமைச்சர் வெங்கட்ரமணன்.. மனைவி புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழக அரசில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வருபவர் பி. வெங்கட்ரமணன். மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், கட்சியின் பொருளாளராகவும் இருக்கும் இவர் மீது, அவரது மனைவி மீனாட்சி குடும்ப வன்முறை மற்றும் ஜீவனாம்சம் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கின் பின்னணி என்ன?

கடந்த 2012-ஆம் ஆண்டு வெங்கட்ரமணனுக்கும் மீனாட்சிக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். திருமணமான சில ஆண்டுகளிலேயே கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த ஏழு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

Venkataramanan

இந்த நிலையில், கணவர் வெங்கட்ரமணன் மற்றும் அவரது தாயார் தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறி மீனாட்சி கடந்த ஏப்ரல் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால், வெங்கட்ரமணன் ஆளுங்கட்சி அமைச்சராக இருப்பதால் காவல்துறையினர் தன் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மீனாட்சி குற்றம் சாட்டியுள்ளார்.

நீதிமன்றத்தில் நடந்த விசாரணை மற்றும் அதிரடி உத்தரவு

காவல்துறை நடவடிக்கை எடுக்காததால், மீனாட்சி சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மீனாட்சி நேரில் ஆஜரான நிலையில், அமைச்சர் வெங்கட்ரமணன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதனைக் கவனித்த நீதிபதி, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் டிசம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், அன்றைய தினம் அமைச்சர் வெங்கட்ரமணன் கட்டாயம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

செய்தியாளர்களிடம் மனைவி மீனாட்சி வேதனை பேட்டி

நீதிமன்ற விசாரணை முடிந்து வெளியே வந்த மீனாட்சி, செய்தியாளர்களிடம் தனது வேதனையைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, "நான் என் கணவரைப் பிரிந்து ஏழு ஆண்டுகள் ஆகிறது. வயிற்றில் இருந்த குழந்தையைக் கலைத்துவிட்டு (அபார்ஷன் செய்துவிட்டு) வருமாறு கூறி என்னை வீட்டை விட்டுத் துரத்தி அடித்தார்கள். என்னுடைய இரண்டாவது பெண் குழந்தையை என்னிடமிருந்து பிரித்து வைத்துள்ளனர். குழந்தையைப் பார்ப்பதற்குக் கூட எனக்கு அனுமதி இல்லை; அவர்கள் எங்கு வசிக்கிறார்கள் என்ற முகவரி கூட எனக்குத் தெரியாது.

அவர் அமைச்சர் ஆன பிறகாவது எங்களைக் கவனிப்பார் என நினைத்து போன் செய்தேன். ஆனால், அவர் அமைச்சர் ஆன பிறகு என்னையும் குடும்பத்தையும் கண்டுகொள்ளாமல் போனைக் கூட எடுக்க மறுக்கிறார். எனக்கும் என் தாயாருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. எனக்கு வேறு வழி தெரியாததால் தான், நீதிமன்றம் மூலமாக நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்துள்ளேன்" எனக் கண்ணீருடன் தெரிவித்தார்.

ரூ.75 லட்சம் ஜீவனாம்சம் மற்றும் குழந்தை உரிமை

இது குறித்து மீனாட்சியின் வழக்கறிஞர் கூறுகையில், கடந்த ஏழு ஆண்டுகளாகப் பிரிந்து வாழும் மீனாட்சிக்குப் போதிய பொருளாதார வசதி இல்லை. எனவே, அவருக்கு ஒருமுறை ஜீவனாம்சமாக 75 லட்சம் ரூபாயும், மாதந்தோறும் பராமரிப்புச் செலவாக (மெயின்டனன்ஸ்) 1 லட்சம் ரூபாயும் வழங்க உத்தரவிடக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளோம். அதேபோல், பிரிந்து இருக்கும் குழந்தைகளைப் பார்க்கவும், தன்னுடன் வைத்துக் கொள்ளவும் அனுமதி கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்திலும் தனியாக வழக்குத் தொடர்ந்துள்ளோம்" என்றார்.

தவெகவில் தொடரும் சர்ச்சைகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியத் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் தொடர்பான தனிப்பட்ட மற்றும் சட்ட ரீதியான சர்ச்சைகள் சமீபகாலமாகத் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. கட்சித் தலைவர் விஜய், மூத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரைத் தொடர்ந்து, தற்போது அமைச்சர் வெங்கட்ரமணனின் குடும்ப விவகாரமும் நீதிமன்றப் படி ஏறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. வரும் டிசம்பர் 5-ஆம் தேதி அமைச்சர் வெங்கட்ரமணன் நீதிமன்றத்தில் ஆஜராகி என்ன விளக்கம் அளிக்கப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+