தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய வெற்றி! தென்னிந்தியாவில் மிக அதிகம்.. 59 எம்பி இடங்கள் கிடைப்பது எப்படி?
சென்னை: நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், மத்திய அரசு கொண்டு வரவுள்ள 132-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்த தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழ்நாட்டிற்குக் கிடைக்கவுள்ள எம்பிக்கள் பலம் குறித்த புள்ளிவிவரங்கள் கவனம் ஈர்த்துள்ளன.
அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே சீராக 50 சதவீத இடங்களை உயர்த்துவது, 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலான மாநில விகிதத்தை 2051-ம் ஆண்டு வரை நீட்டிப்பது ஆகிய அம்சங்கள் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.
இதன் மூலம் தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகள் 39-லிருந்து 59 ஆக உயரவுள்ளது. மற்ற பெரிய மாநிலங்கள் மற்றும் அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டிற்கு எவ்வளவு பெரிய பலன் கிடைத்துள்ளது என்பதை எளிய கணக்குகள் மூலம் பார்க்கலாம்:

உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிடும்போது கிடைக்கும் லாபம்:
இந்தியாவிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தின் மக்கள்தொகையில், தமிழ்நாட்டின் மக்கள்தொகை ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு மட்டுமே உள்ளது.
ஆனால், புதிய மசோதாவின்படி உத்தரப் பிரதேசத்திற்கு 120 மக்களவைத் தொகுதிகள் கிடைக்கும் நிலையில், தமிழ்நாட்டிற்கு அதில் ஏறத்தாழ பாதி அளவுக்கு.. அதாவது 59 மக்களவைத் தொகுதிகள் கிடைக்கின்றன. ஒருவேளை தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டிருந்தால், தமிழ்நாட்டிற்கு வெறும் 48 இடங்கள் மட்டுமே கிடைத்திருக்கும். இப்போது கூடுதலாக 11 இடங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
அண்டை மாநிலமான கர்நாடகாவை விட 17 இடங்கள் அதிகம்
தென் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் கர்நாடக மாநிலத்தின் மக்கள்தொகை சுமார் 7 கோடியாக உள்ளது. அதே நேரத்தில், தமிழ்நாட்டின் மக்கள்தொகை சுமார் 7.75 கோடியாக உள்ளது.
மக்கள்தொகையில் இரு மாநிலங்களுக்கும் இடையே சுமார் 75 லட்சம் மட்டுமே வித்தியாசம் இருந்தாலும், புதிய மறுவரையறையில் கர்நாடகாவிற்கு 42 எம்பி இடங்கள் மட்டுமே கிடைக்கும். ஆனால், தமிழ்நாட்டிற்கு 59 எம்பி இடங்கள் கிடைக்கின்றன. அதாவது கர்நாடகாவை விடத் தமிழ்நாட்டிற்கு 17 மக்களவைத் தொகுதிகள் அதிகமாகக் கிடைக்கின்றன!
3. மொழி வாரியான ஒப்பீடு: தெலுங்கு மாநிலங்கள் Vs தமிழ்
மொழி வாரியாகப் பார்த்தாலும் தமிழ் பேசும் மக்களுக்குக் கிடைத்துள்ள பிரதிநிதித்துவம் மிகவும் வலிமையானதாக உள்ளது:
ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் சேர்த்து தெலுங்கு பேசும் மக்களின் எண்ணிக்கை சுமார் 9.25 கோடியாக உள்ளது. இந்த இரு மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் 64 மக்களவைத் தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தமிழ் மக்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 8 கோடியாக உள்ள நிலையில், தமிழ்நாட்டின் 59 இடங்கள் மற்றும் புதுச்சேரியின் 2 இடங்கள் என மொத்தம் 61 மக்களவைத் தொகுதிகள் கிடைக்கின்றன.
வளர்ச்சிக்குக் கிடைத்த அங்கீகாரம்!
கடந்த 50 ஆண்டுகளில் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியதோடு, கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்கிறது. "மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது" என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு, 7.18% பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டுள்ளதால், டெல்லி அரசியலில் தமிழ்நாட்டின் குரல் அடுத்த 25 ஆண்டுகளுக்கும் வலுவாக ஒலிக்கும் சூழல் உருவாகியுள்ளது.




Click it and Unblock the Notifications
