ஒரே ஒரு சீன் தான்..ஒட்டுமொத்தமாய் மாறிய கிளைமேக்ஸ்? கூட்டணி மேப்பையே மாற்றும் திமுகவின் ஒற்றை முடிவு
சென்னை: இந்தியாவின் ஒட்டுமொத்த கூட்டணி மேப்பையே மாற்றப் போகிறது தொகுதி வரையறை மசோதா என்கின்றனர் டெல்லி அரசியல் பார்வையாளர்கள். திமுக - காங்கிரஸ் பிரிந்த நிலையில் தற்போது தொகுதி மறுவரை விவகாரத்தில் பாஜகவுக்கு திமுக ஆதரவளித்து இருக்கிறது. இந்த சூழலில் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவிலேயே புதிய கூட்டணிக்கான அச்சாரங்கள் போடப்பட்டுள்ளதாக சொல்கின்றனர்.
பாஜகவின் நீண்ட நாள் திட்டங்களில் ஒன்று தொகுதி மறு வரையறை. மக்களவை இடங்களை543ல் இருந்து உயர்த்துவது தான் இதன் முக்கிய சாராம்சம். 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் தொகுதிகளை மறுவரையறை செய்வதற்கான முயற்சிகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டது.
1971 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு 2026 வரை நீட்டிக்கப்பட்டிருந்த இதற்கான தடையை நீக்குவது தான் பாஜகவின் எண்ணம். மக்கள் தொகைக்கு ஏற்ப தொகுதி மறு வரை என அறிவிக்கப்பட்ட நிலையில் இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொகுதி மறுவரையறை
மக்கள் தொகை கட்டுப்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்திய தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விவாதத்தையும், மாநில உரிமைகள் தொடர்பான கருத்துக்களையும் மிக ஆழமாக எடுத்து வைத்தது திமுக. கடந்த 2026 தமிழக சட்டசபை தேர்தலின் போது பாஜகவை எதிர்க்க இதனை ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தினார் திமுக தலைவர் ஸ்டாலின்.
முக ஸ்டாலின்
கருப்பு சட்டை அணிந்து பிரச்சாரத்தில் அவர் பேசிய பேச்சுக்கள் இந்திய அளவில் எதிரொலித்தது. அப்போது தொகுதி வரையறை மசோதா தோற்கடிக்கப்பட்ட நிலையில் பட்டாசு வெடித்து கொண்டாடினார் ஸ்டாலின். இதற்கிடையே 2026 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தோற்று ஆட்சியை இழந்தது திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளித்து இரண்டு அமைச்சர்களையும் பெற்றது.
தவெக கூட்டணி
இதேபோல விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட திமுகவின் முக்கிய கூட்டாளிகள் தமிழக வெற்றி கழகத்தின் பக்கம் சாய்ந்தனர்.
இந்த நிலையில் சில திருத்தங்களுடன் மீண்டும் தொகுதி வரையறை மசோதாவை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்தியாவின் முக்கிய கட்சிகளை அணுகியது பாஜக. அதில் ஒன்றுதான் திமுக.
பாஜகவுக்கு ஆதரவு
நேற்று நடந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தொகுதி வரையறை மசோதாவை ஆதரிப்பது என திமுக முடிவு செய்திருக்கிறது. இதனை அக்கட்சித் தலைமையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் நிலையில், தேசிய அளவில் புதிய கூட்டணிக்கான அச்சாரம் இது என்கின்றனர் டெல்லி அரசியல் பார்வையாளர்கள். ஏற்கனவே காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்த திமுக நேரம் பார்த்து பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
கூட்டணி மேப்
மேலும் சரத் பவர் என்சிபி போன்ற கட்சிகளும் ஏற்கனவே காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருக்கும் நிலையில் பாஜகவுடன் கட்சிகள் கூட்டணி சேருமா என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என திமுக அறிவித்திருக்கும் நிலையில், திமுக தலைமையில் மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்கலாம். இதனால் இந்தியாவின் ஒட்டுமொத்த அரசியல் கூட்டணி மேப் மாறலாம் என்கின்றனர்.




Click it and Unblock the Notifications
