ரகசிய ஆபரேஷன்! ஸ்டாலினையும், சரத் பவாரையும் பாஜக தன் பக்கம் இழுத்தது எப்படி? நடந்தது இதுதான்!
சென்னை: நாளை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் கூடும்போது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முற்றிலும் ஒரு புதிய நம்பிக்கையுடன் நாடாளுமன்ற அவைக்குள் நுழையவுள்ளது. கடந்த சில மாதங்களாக நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான மாணவர் போராட்டங்கள், எதிர்க்கட்சிகளின் வாக்குத் திருட்டு பிரச்சாரம் எனப் பல்வேறு நெருக்கடிகளால் தற்காப்பு ஆட்டம் ஆடிக்கொண்டிருந்த பாஜக அரசு, இப்போது சாத்தியமே இல்லை என்று கருதப்பட்ட ஒரு பெரிய இலக்கை எட்டத் தயாராகிவிட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் 54 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த தொகுதி மறுவரையறை மசோதா, இப்போது எளிதாக நிறைவேறும் சூழல் உருவாகியுள்ளது. மோடி அரசின் 12 ஆண்டுகால ஆட்சியில், முதன்முறையாக ஒரு அரசு மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியடையக் காரணமாக இருந்த கட்சிகள.. அதாவது தமிழ்நாட்டின் திமுக மற்றும் மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார் அணி).. இப்போது அதே மசோதாவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளன.

கடந்த எட்டு மாதங்களில் இந்த இரு எதிர்க்கட்சிகளையும் பாஜக எப்படித் தன் பக்கம் கொண்டு வந்தது என்பதுதான் டெல்லி அரசியலின் மிகப்பெரிய 'இன்சைட் ஸ்டோரி'
தேர்தல் ஆண்டில் பிடிகொடுக்காத திமுக!
உண்மையில், 1 வருடத்திற்கு பின்பே மத்திய அரசு தூதுவர்கள் மூலமாகத் திமுகவுடன் ரகசியப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருந்தது. மக்களவையில் தமிழ்நாட்டின் இடங்களுக்குப் பாதிப்பு வராது என உத்தரவாதம் அளிக்கத் தயாராக இருப்பதாக ஏப்ரல் மாத மசோதாவுக்கு முன்பே மத்திய அரசு தெரிவித்தது.
ஆனால், அப்போது தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்ததால், பாஜக மசோதாவை ஆதரித்து அரசியல் ரீதியாக எந்த விலையையும் கொடுக்கத் திமுக தயாராக இல்லை. கடந்த பிப்ரவரி மாதம் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றினார்.
ஸ்டாலின் கேட்டது நியாயமான மறுவரையரை.. ஆனால் பாஜக அதை கொடுக்க ரெடியாக இல்லை. இதனால் ஏப்ரல் 16-ம் தேதி, மத்திய அரசின் மசோதா நகலை எரித்து, அதை ஒரு "கருப்புச் சட்டம்" எனக் கடுமையாக விமர்சித்தார். ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் பேசும்போது, அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே சீராக 50 சதவீத இடங்களை உயர்த்தும் சட்டப் பிரிவைக் கொண்டு வர அரசு தயாராக உள்ளது என்று கூறியபோதிலும், திமுக தனது பிடியைத் தளர்த்தவில்லை.
ஏப்ரல் முதல் நவம்பர் வரை மாறிய தமிழக அரசியல் களம்!
ஆனால், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாதங்களில், திமுகவின் 22 மக்களவை எம்பிக்கள் மற்றும் 8 மாநிலங்களவை எம்பிக்களின் ஆதரவைப் பாஜக பக்கம் திருப்பியது தமிழகத்தின் தேர்தல் முடிவுகள்தான்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தனது பாரம்பரிய எதிரியான அதிமுகவிடம் தோற்காமல், விஜய்யின் புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திடம் ஆட்சியைப் பறிகொடுத்தது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தவெக 108 இடங்களைப் பிடித்து (பெரும்பான்மைக்கு 10 இடங்கள் குறைவு) ஆட்சியைப் பிடித்த நிலையில், திமுக வெறும் 54 இடங்களுடன் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது.
இந்தத் தோல்வியில் இருந்து திமுக மீள்வதற்குள்ளாகவே, கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ் கட்சி திமுகவைக் கைவிட்டு வெளியேறியது. தேர்தல் நேரத்திலேயே திமுகவிற்காக காங்கிரஸ் பிரச்சாரம் செய்யவில்லை. ஸ்டாலினுடன் மேடை ஏற ராகுல் மறுத்தார். காங்கிரஸ் - தவெக இடையே ரகசிய டீலிங்கும் இருந்தது.
இப்படி திமுகவை முதுகில் குத்தியதோடு.. விஜய் தலைமையிலான தவெக அரசில் இணைந்த காங்கிரஸ், 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் 2 அமைச்சர் பதவிகளைப் பெற்று ஆட்சியில் பங்கு கொண்டது. 2 அமைச்சர் பதவிக்காக.. 1 எம்பி பதவிக்காக திமுகவை ராகுல் பகைத்துக்கொண்டார்.
இந்த துரோகத்தால் கடும் கோபமடைந்த திமுக, காங்கிரஸ் மற்றும் 'இந்தியா' கூட்டணியில் இருந்து வெளியேறியது. மே 7-ம் தேதி திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில், மாறியுள்ள அரசியல் சூழலாலும், காங்கிரஸுடனான கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டதாலும், மக்களவையில் திமுக எம்பிக்களுக்குத் தனியாக இருக்கைகள் ஒதுக்க வேண்டும் எனக் கோரினார். அந்தக் கோரிக்கை இப்போது ஏற்கப்பட்டு, மக்களவையில் 97 எம்பிக்களின் இருக்கை வரிசை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது!
மகாராஷ்டிராவில் சரத் பவாரை வளைத்த வியூகம்!
மறுபுறம், மகாராஷ்டிராவில் சரத் பவாரின் மருமகன் அஜித் பவாரை இழுத்து கட்சியை உடைத்ததாக பாஜக மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இப்போது சரத் பவார் அணியும் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கிறது.
கடந்த ஜூலை மாதம் நடந்த மழைக்காலக் கூட்டத்தொடரின் போதே, திமுக மற்றும் சரத் பவார் கட்சியை ஈர்க்க பாஜக காய்களை நகர்த்தத் தொடங்கியது. முதலில், பிரிந்த இரண்டு தேசியவாத காங்கிரஸ் அணிகளையும் இணைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்க்க பாஜக முயன்றது. ஆனால், கடந்த ஜனவரி மாதம் அஜித் பவார் மறைந்த பிறகு கட்சித் தலைவரான அவரது மனைவி சுனேத்ரா பவாரும், மகன் பார்த் பவாரும் இணைப்புக்குச் சம்மதிக்கவில்லை. சரத் பவார் அணி தனி கட்சியாக கூட்டணிக்கு வந்தால் வரவேற்கிறோம், ஆனால் இணைப்பு வேண்டாம் என அவர்கள் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.
இருப்பினும், பாஜக சரத் பவாருடன் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தது. ஆகஸ்ட் 10-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் தனது 8 மக்களவை எம்பிக்களுடன் பிரதமர் மோடியை சரத் பவார் சந்தித்தார். மகாராஷ்டிரா வறட்சி நிலவரம் குறித்துப் பேசுவதாகச் சொல்லப்பட்டாலும், அதன் பின்னணியில் இந்த மசோதா ஆதரவு இருந்தது. பின்னர் 85 வயதான சரத் பவார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, பிரதமர் மோடி அவரைத் தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தார்.
நீங்கள் இப்போது ஓய்வெடுங்கள்.. நானும் உங்கள் மகள் சுப்ரியா சுலேவும் இணைந்து நாட்டின் விவகாரங்களைப் பார்த்துக்கொள்கிறோம், என்று பிரதமர் மோடி கூறியதாக சரத் பவாரின் நெருங்கிய உதவியாளர் தெரிவித்தார். இது மத்திய அமைச்சரவையில் சுப்ரியா சுலேவுக்கு இடம் கிடைப்பதற்கான சமிக்ஞையாகப் பார்க்கப்பட்டது.
முக்கிய மசோதாக்களை நிறுத்தி வைத்த 'கொடுக்கல் வாங்கல்'!
இந்தச் சந்திப்புகளைத் தாண்டி, ஜூலை மழைக்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு எடுத்த சில முடிவுகள் திமுக மற்றும் சரத் பவார் அணியைப் பெரிதும் சாந்தப்படுத்தின.
அந்தக் கூட்டத்தொடரில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்', விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான் கல்வி மசோதா, 30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதல்வர் அல்லது அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்யும் மசோதா, மற்றும் தொண்டு நிறுவனங்களின் நிதியை முடக்கும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதா (FCRA) ஆகியவற்றை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.
இவை அனைத்தையும் திமுகவும் சரத் பவார் அணியும் கடுமையாக எதிர்த்தன. குறிப்பாக FCRA மசோதா மீது திமுக கடும் அதிருப்தியில் இருந்தது.
ஆனால், இந்த மசோதாக்களை ஆய்வு செய்யும் நாடாளுமன்றக் கூட்டுக்குழுக்களின பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு, எந்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை.. FCRA மசோதாவும் கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு பெறுவதற்கான ஒரு கொடுக்கல் வாங்கலாகவே மத்திய அரசு இந்த மசோதாக்களை நிறுத்தி வைத்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரகசியம் காத்த பாஜக - திமுக!
இந்த பேச்சுவார்த்தை குறித்து இரு தரப்பிலும் மூத்த தலைவர்கள் யாரும் வாய் திறக்காமல் ரகசியம் காத்தனர். ஒருமுறை கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஒருவர் சென்னை வந்தபோது, திமுகவின் ஆதரவு குறித்து எதுவும் பேச வேண்டாம் என மூத்த மத்திய அமைச்சர் ஒருவர் போன் செய்து எச்சரித்த அளவுக்கு மத்திய அரசு கவனமாக இருந்தது.
இறுதியாக, வெள்ளிக்கிழமை கூடிய மத்திய அமைச்சரவை, திமுகவின் இரண்டு முக்கிய நிபந்தனைகளையும் எழுத்துப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. அதாவது, தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே சீராக 50 சதவீத இடங்கள் உயர்த்தப்பட்டு, தற்போதைய சதவீத விகிதம் 2051-ம் ஆண்டு வரை (அடுத்த 25 ஆண்டுகளுக்கு) மாற்றப்படாது என உறுதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, சனிக்கிழமை சென்னையில் எம்பிக்கள் கூட்டத்தைக் கூட்டிய ஸ்டாலின், அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளோம் என அறிவித்து மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். திமுக குழுவினர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்துத் தங்கள் முடிவைத் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் மற்றும் மகாராஷ்டிரா அரசியலில் ஏற்படும் தாக்கம்
இந்த அதிரடித் திருப்பம் இரு மாநில அரசியலிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது. தமிழகத்தில் பாஜகவும் அதிமுகவும் கூட்டணியில் உள்ள நிலையில், விஜய்யின் வெற்றி இப்போது பாஜகவையும் திமுகவையும் ஒரு புள்ளியில் நெருக்கமாக்கியுள்ளது. மகாராஷ்டிராவில் சரத் பவார் அணி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தால், ஆளும் மகாயுதி கூட்டணிக்குள் புதிய சமன்பாடுகள் உருவாகும்.. தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை மேலும் பலவீனமடையும்!




Click it and Unblock the Notifications
