"அனுமதி இல்லை!" திருப்பரங்குன்ற தூண் அருகே செல்ல 2வது நாளாக தடை! தர்கா, கோயில் செல்ல மட்டும் அனுமதி
மதுரை: உச்சநீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நேற்று தீபம் ஏற்றப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள தூண் அருகே செல்ல பக்தர்களுக்கு இரண்டாவது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிக்கந்தர் பாதுஷா தர்கா மற்றும் காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்ல மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளைச் சரிபார்த்த பிறகே சிஆர்பிஎஃப் வீரர்கள் மலைக்கு செல்ல அனுமதி அளித்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக கடந்த சில நாட்களாகப் பெரும் சர்ச்சை நிலவி வந்தது. வழக்கமாக உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீப மண்டபத்தில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். ஆனால், மலை உச்சியில் உள்ள கல் தூணிலும் தீபம் ஏற்ற அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது. இதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், நவம்பர் 20ஆம் தேதி மலை உச்சியில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ஓராண்டு மட்டும் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி தரப்பட்டது. இருப்பினும், அன்றைய தினம் மலை உச்சியில் இல்லாமல் வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலேயே தீபம் ஏற்றப்பட்டது.
இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அப்போது தமிழக அரசை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மிக கடுமையாக விமர்சித்தனர். ஐகோர்ட் மதுரை கிளைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீக்கப்பட்ட நிலையில், மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டது. மேலும், மலையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள CRPF படைகளுக்கும் உத்தரவிடப்பட்டது.
இந்த சூழலில் தான் நேற்றைய தினம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது. தீபம் ஏற்றும் பணிகளை ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் ஒருங்கிணைத்தனர். உச்ச நீதிமன்றம் பக்தர்கள் செல்ல அனுமதி அளித்திருந்த போதிலும், பாதுகாப்பு கருதி நேற்று 50 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டு இருந்தது.
இதற்கிடையே தீபம் ஏற்றப்பட்ட பிறகும் மலை உச்சியில் உள்ள தூண் பகுதிக்கு செல்வதற்கான கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. இரண்டாவது நாளாகவும் அந்த பகுதிக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சிக்கந்தர் பாதுஷா தர்கா மற்றும் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்ல விரும்புவோர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
மலைக்கு செல்லும் பக்தர்களிடம் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகள் சரிபார்க்கப்படுகின்றன. அதன் பின்னரே சிஆர்பிஎஃப் வீரர்கள் அவர்களை அனுமதித்து வருகின்றனர்.




Click it and Unblock the Notifications
