முடிவை மாற்றிய ஸ்டாலின்! ட்விஸ்ட் தந்த சரத் பவார்! தொகுதி மறுவரையறை மசோதா இன்னும் எத்தனை வாக்கு தேவை
டெல்லி: லோக்சபா தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற இப்போது பாஜகவுக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது. திமுக மற்றும் சரத் பவார் தலைமையிலான என்சிபி ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் மசோதாவுக்கு ஆதரவாக இருக்கும் எம்பிக்களின் எண்ணிக்கை சுமார் 320ல் இருந்து உயர்ந்துள்ளது. இப்போது அவர்களுக்கு எவ்வளவு ஆதரவு உள்ளது.. இன்னும் எவ்வளவு வாக்குகள் தேவைப்படுகின்றன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நாளை நவம்பர் 30ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரில், மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதுடன் தொகுதி மறுவரையறையையும் இணைத்து புதிய மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய அமைச்சரவை மூன்று மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

50% அதிகரிப்பு
புதிய திட்டத்தின்படி, ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்துக்கும் உள்ள லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்த்தப்படும். அதேநேரத்தில், மாநிலங்களுக்கிடையிலான தற்போதைய தொகுதிப் பங்கீட்டு விகிதம் மாற்றப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு மாநிலத்திற்கும் இப்போது இருக்கும் பிரதிநிதித்துவம் அப்படியே தொடரும்!
முடிவை மாற்றிய ஸ்டாலின்
22 எம்பிக்களைக் கொண்ட திமுக, தமிழகத்தின் தற்போதைய 7.18 சதவீத தொகுதிப் பங்கு அப்படியே தொடரும் என்பதால் மசோதாவுக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளது. இதுகுறித்து பேசிய திமுக எம்பி ஆ.ராசா, தமிழகத்தின் 7.18 சதவீத பங்கு தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே கட்சியின் கோரிக்கை என்றும், புதிய முன்மொழிவில் அது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
கடந்த ஏப்ரல் மாதம் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை திமுக எதிர்த்து இருந்தது. ஆனால், இப்போது ஸ்டாலின் தனது முடிவை மாற்றியுள்ளார். கட்சியின் இரண்டு முக்கிய கோரிக்கைகள் புதிய மசோதாவில் இடம்பெற்றுள்ளதாகவும் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு பாதிக்கப்படாத வகையில் பாதுகாப்பு கிடைத்துள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே இந்த மசோதாவை திமுக ஆதரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பவார்
இதற்கிடையே 8 எம்பிக்களை கொண்ட சரத் பவார் தலைமையிலான என்சிபி கட்சியும் ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளது. தொகுதி மறுவரையறை அரசியலமைப்பின் அடிப்படையிலான தேவை என்றும், அதற்கு கட்சி ஆதரவளிக்கும் என்றும் அக்கட்சித் தலைவர் ஜிதேந்திர அவாத் ஏற்கெனவே கூறியிருந்தார். மாநிலங்களின் தற்போதைய பிரதிநிதித்துவ விகிதம் மாறாமல், அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே அளவில் தொகுதிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே அக்கட்சியின் நிலைப்பாடு.
நம்பர் என்ன
தற்போதைய கணக்கின்படி, பாஜகவின் 241 எம்பிக்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவு என என்டிஏ ஆதரவு சுமார் 320 எம்பிக்களின் பலம் உள்ளது. திமுக, சரத் பவார் கட்சி ஆதரவு கிடைத்தால் இந்த எண்ணிக்கை 350 ஆக உயரும். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நான்கு எம்பிக்களும் ஆதரவு அளிப்பதால் எண்ணிக்கை 354 ஆகலாம். ஆனாலும், 360 வாக்குகள் என்ற இலக்கை எட்ட மேலும் ஆறு வாக்குகள் தேவைப்படும். இரு சிறு கட்சிகள், ஒரு சுயேச்சை எம்பிக்கள் ஆதரவு தருவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 360 நம்பரை எட்டுவது இனியும் பாஜகவுக்கு கஷ்டம் இல்லை.
கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி லோக்சபாவில் கொண்டுவரப்பட்ட 131வது அரசியலமைப்பு திருத்த மசோதா தோல்வியடைந்தது. அப்போது மசோதாவுக்கு ஆதரவாக 298 பேரும், எதிராக 230 பேரும் வாக்களித்தனர். வாக்களித்த 528 உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு, அதாவது 352 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், அரசால் அந்த எண்ணிக்கையை பெற முடியவில்லை.
நிறைவேறும்
அரசியலமைப்பு சட்டத்தின் 368வது பிரிவின்படி, திருத்த மசோதா நிறைவேற லோக்சபாவிலும் ராஜ்யசபாவிலும் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையினரின் ஆதரவும், அவையில் பங்கேற்று வாக்களிப்பவர்களில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு ஆதரவும் அவசியம். வாக்கெடுப்பில் சிலர் பங்கேற்காமல் இருப்பது மூன்றில் இரண்டு பங்கு கணக்கை குறைக்கலாம். எனவே, அதையும் கருத்தில் கொண்டால் ஈஸியாக இந்த மசோதா நிறைவேறும்!




Click it and Unblock the Notifications
