மாணிக்கம் தாகூர், தமிழக காங்கிரஸார் யாருமே வேண்டாம்.. தனி டீமோடு ஸ்டாலினை சந்தித்த சோனியா! ஏன்?
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட குழுவினர் சென்றுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தமிழக நிர்வாகிகள் யாருமே செல்லவில்லை. தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் திமுகவை தொடர்ச்சியாக சீண்டி வந்ததால், அவர்கள் இல்லாமல் இந்தச் சந்திப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் அமைப்புப் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், கர்நாடகா மாநில முதல்வர் டி.கே. சிவகுமார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரளா முதல்வர் வி.டி. சதீசன் உள்ளிட்டோருடன் இன்று டெல்லியில் இருந்து சென்னைக்கு கிளம்பினார்.

மேலும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி. இ.டி. முகமது பஷீர், ராஷ்ட்ரீய ஜனதா தளம் எம்.பி.க்கள் சுதாகர் சிங், அபய் குமார் சின்ஹா, சமாஜ்வாதி கட்சி எம்.பி. ராஜீவ் ராய், மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் ஆகியோரும் விமானத்தில் இன்று டெல்லியில் புறப்பட்டு பிற்பகல் 1.40 மணிக்கு சென்னை வந்தடைந்தனர்.
சென்னை விமான நிலையத்திலிருந்து ஒரே வேனில் டிரைடென்ட் ஹோட்டலுக்குச் சென்ற காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், அங்கு மதிய உணவு சாப்பிட்டனர். பின்னர், பிற்பகல் 3.30 மணிக்கு மேல் டிரைடென்ட் ஹோட்டலிலிருந்து ஸ்டாலின் இல்லத்துக்குப் புறப்பட்டனர்.
சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலை இல்லத்துக்கு மாலை 4.40 மணியளவில் வருகை தந்த சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்களை மு.க.ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வாசலில் நின்று வரவேற்று அழைத்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து நடந்த சந்திப்பில் மத்திய பாஜக அரசின் புதிய தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டை திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக முன்னணி நிர்வாகிகளும் எம்.பி.க்களுமான கனிமொழி, திருச்சி சிவா, தயாநிதி மாறன் உள்ளிட்டோரும் இந்த சந்திப்பின் போது உடனிருக்கின்றனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் உடனான இந்தச் சந்திப்பின்போது, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் யாரையுமே சோனியா காந்தி உடன் அழைத்துச் செல்லவில்லை. தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் திமுகவை தொடர்ச்சியாக சீண்டி வந்ததால், அவர்கள் இல்லாமல் இந்தச் சந்திப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் அகில இந்திய தலைவர்கள் சென்னை வரும்போதெல்லாம், தமிழக காங்கிரஸ் தலைவரும் உடன் இருப்பார். மற்ற கட்சி தலைவர்களைச் சந்திக்கும்போது அவர்களும் இருப்பது வழக்கம். கடந்த முறை ராகுல் காந்தி சென்னை வந்து, முதல்வர் விஜய்யை சந்தித்தபோது, மாணிக்கம் தாகூர், விஸ்வநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் திமுகவை கடுமையாக சீண்டி வருவதால், அவர்கள் யாருமே வேண்டாம் எனக் கூறி, அகில இந்திய நிர்வாகிகள் மட்டுமே இன்று ஸ்டாலினை சந்தித்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது கவனம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications
