வீட்டுக்கு வந்த ராகுல் காந்திக்கு பொன்னாடை போர்த்தி கட்டியணைத்து வரவேற்ற ஸ்டாலின்!
சென்னை: தனது வீட்டுக்கு வந்த ராகுல் காந்தியை பொன்னாடை போர்த்தி, கட்டியணைத்து வரவேற்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். முன்னதாக, 'எட்டப்பன்' என ராகுல் விமர்சித்திருந்த நிலையில், நாங்கள் எட்டப்பன்கள் அல்ல, கட்டபொம்மன்கள் என பதிலடி கொடுத்திருந்தார் ஸ்டாலின்.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதாவை திமுக ஆதரிக்க முடிவு செய்துள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துப் பேசுவதற்காக இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்களுடன் சென்னை வந்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி.

அவருடன் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, டிகே சிவகுமார், ரேவந்த் ரெட்டி, சதீசன் உள்ளிட்டோரும் சென்னை வந்தனர். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசி வருகின்றனர்.
தனது வீட்டுக்கு வந்த ராகுல் காந்தியை பொன்னாடை போர்த்தி, கட்டியணைத்து, ஆரத்தழுவி வரவேற்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். திமுகவை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வரும் சூழலிலும், ராகுல் காந்தியை சிரித்த முகத்துடன் வரவேற்றுள்ளார் மு.க.ஸ்டாலின்.
முன்னதாக இன்று டெல்லியில் இருந்து கிளம்பும்போது ஒரு பதிவை வெளியிட்டிருந்தார் ராகுல் காந்தி. அதில், இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்களும் நானும் ஸ்டாலினை சந்திக்க சென்னை செல்கிறோம். தொகுதி மறுசீரமைப்பு அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களை எதிர்க்குமாறு அவரிடமும் திமுகவிடமும் கோரிக்கை விடுக்க உள்ளோம்.
தமிழர்களுக்கு எதிரான சக்திகளுக்கு எதிராகச் சகோதரர் ஸ்டாலின் எப்போதும் ஒரு பாறை போல் நின்றிருக்கிறார். தேசிய நலனுக்காகவும், தமிழ்நாட்டின் நலனுக்காகவும், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும் நாம் இந்த மசோதாவை ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
ராகுல் காந்தியின் இந்தப் பதிவுக்குப் பதிலளித்து ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "அரசியலமைப்புச் சட்டத்தையும் மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் திமுகவின் வரலாற்றுப் பங்கை அங்கீகரித்தமைக்குச் சகோதரர் ராகுல் காந்திக்கு எனது மனமார்ந்த நன்றி.
தமிழ்நாடு மற்றும் தமிழ் மக்களின் நலன்களையே எப்போதும் முதன்மையான கருத்தாகக் கொண்டு ஒவ்வொரு முடிவையும் எடுத்து வருகிறோம். இந்தப் பாதையில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். வரலாறு எங்களை எட்டப்பர்களாக அல்லாமல் கட்டபொம்மன்களாகவே மதிப்பிடும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது" எனத் தெரிவித்தார்.
முன்னதாக, ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை வந்தபோது, தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள். இவர்கள் 21ம் நூற்றாண்டின் எட்டப்பர்கள் என விமர்சித்திருந்தார். இதனைச் சுட்டிக்காட்டியே ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்தார் மு.க.ஸ்டாலின்.


Click it and Unblock the Notifications
