திடீர் மாற்றம்.. தவெக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை தள்ளி வைத்தது அதிமுக!
சென்னை: தவெக அரசை கண்டித்து அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் வரும் டிசம்பர் 3 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
முன்னதாக டிசம்பர் 2 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 82 இடங்களில் நடைபெறுவதாக இருந்த இந்த ஆர்ப்பாட்டம் தற்போது டிசம்பர் 3 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பில்,
• தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை!
• அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்வு!
• கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள் புழக்கம், பாலியல் வன்கொடுமைகள் எனச் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ள அவல நிலை!
• மேகதாது பிரச்சனையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பது!
உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்து வரும் 'ரீல்ஸ் மாடல்' த.வெ.க. அரசைக் கண்டித்து, கட்சி அமைப்பு ரீதியான மாவட்டக் கழகங்களின் சார்பில் டிச. 2ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டு, டிச. 3ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
கட்சி அமைப்பு ரீதியான மாவட்டங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்கெனவே அறிவித்த நிர்வாகிகளே தலைமையேற்று நடத்துவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக அமைப்பு ரீதியாகச் செயல்பட்டு வரும் 85 மாவட்டங்களின் சார்பில் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிர்வாகிகளே அந்தந்த மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமை ஏற்று நடத்துவார்கள் என்றும் கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தென் சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், கிருஷ்ணகிரி மேற்கில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் கிழக்கில் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
ராணிப்பேட்டை மேற்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தம்பிதுரை, நாமக்கல்லில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி, வட சென்னை தென்கிழக்கில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், திருவள்ளூர் மேற்கில் மகளிரணி செயலாளர் பா.வளர்மதி, திருவண்ணாமலை தெற்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, திருவாரூரில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ், நாகப்பட்டினத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, மதுரை புறநகர் மேற்கில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திருவள்ளூர் தெற்கில் இன்பதுரை எம்பி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
