அப்பாவ காணோம்னு கேட்டீங்கல்ல.. டெல்லியில் இருந்து யார்லாம் வந்து இருக்கா பாருங்க! போஸ் வெங்கட் பதிவு
சென்னை: தமிழக சட்டசபையில் பேசிய முதல்வர் விஜய், "உங்க அப்பா இங்கே தான் இருப்பார்ன்னு சொன்னாங்க.. அப்பாவையே காணோமே" என கொளத்தூர் தொகுதியில் மு.க ஸ்டாலின் தோல்வியடைந்ததை விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற வலியுறுத்துவதற்காக மு.க ஸ்டாலினை சந்திக்க டெல்லியில் இருந்து சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி என தலைவர்கள் மொத்தமாக வந்திருப்பதை சுட்டிக்காட்டி முதல்வர் விஜய்க்கு போஸ் வெங்கட் பதிலடி கொடுத்துள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் இல்லை என்பதால் ஆட்சி அமைக்க முடியாமல் தத்தளித்த தவெகவிற்கு திமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்து இருந்த காங்கிரஸ் முதல் கட்சியாக ஆதரவு அளித்தது. திமுகவுக்கு லோக்சபாவில் 22 எம்பிக்களும், ராஜ்யசபாவில் 8 எம்பிக்களும் இருந்தபோதும், திமுக காங்கிரசில் உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் நாளை நடைபெறும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்கு துருப்பு சீட்டாக இருந்த திமுகவும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியது. இதனால் இம்மசோதா நிறைவேறும் சூழல் இருப்பதால் கடும் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் இருந்து மு.க ஸ்டாலினை சந்திப்பதற்காக சென்னைக்கு இன்று வந்தனர்.
மு.க ஸ்டாலின் அளித்த ஆதரவை திரும்பப் பெற வலியுறுத்துவதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு வந்தனர். இதனால் இன்று காலை முதலே மு.க ஸ்டாலினின் இல்லம் பரபரப்பாக காணப்பட்டது. தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்றால் அது மு.க ஸ்டாலினின் சொல்லும் ஒரு வார்த்தையிலேயே உள்ளது.
கிங்க் மேக்கராக இருக்கும் மு.க ஸ்டாலினின் முடிவை மாற்ற வலியுறுத்தி டெல்லியில் இருந்து இந்தியா கூட்டணி தலைவர்கள் மொத்தமாக வந்து அவரை சந்தித்திருக்கும் நிலையில், திமுக ஆதரவாளர் போஸ் வெங்கட் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
"அப்பாவ காணோம்னு கேட்டீங்கல்ல.,
டெல்லியிலிருந்து அம்மா, தாத்தா.., மாமா., மச்சான் எல்லாரும் அப்பாவ பாக்க வந்திருக்காங்க..
அப்பா யாரு, எப்படிப்பட்டவர்னு அவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கங்க.." என்று பதிவிட்டுள்ளார்.
முன்பு தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது பேசிய முதல்வர் விஜய், "உங்க அப்பா இங்கே தான் இருப்பார்ன்னு சொன்னாங்க.. அப்பாவையே காணோமே" என கொளத்தூர் தொகுதியில் மு.க ஸ்டாலின் தோல்வியடைந்ததை விமர்சித்து பேசியிருந்தார். ஆனால் இன்று அந்த அப்பாவை பார்ப்பதற்கு டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் வருகை தந்ததை வைத்து விஜய்யை விமர்சிக்கும் விதமாக போஸ் வெங்கட் இந்த பதிவினை வெளியிட்டுள்ளார்.




Click it and Unblock the Notifications
