ஸ்டாலின் தொகுதி மறுவரையறையில் இவ்வளவு உறுதி ஏன்? திமுக போடும் 5 கணக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு இப்போது தேசிய அரசியலிலும் கவனம் பெற்றுள்ளது... காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், திமுக மட்டும் தனது முடிவில் உறுதியாக இருக்கிறது. தேசிய தலைவர்கள் கேட்டுக்கொண்ட பிறகும் ஸ்டாலின் ஏன் தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை? இதற்கு பின்னால் தமிழகத்தின் நலன் மட்டும்தான் இருக்கிறதா? அல்லது திமுகவின் அரசியல் எதிர்காலத்தைக் கணக்கில் கொண்ட வேறு சில திட்டங்களும் இருக்கின்றனவா?

தற்போது மக்களவையில் தமிழகத்துக்கு 39 தொகுதிகள் உள்ளன.. தொகுதிகளின் எண்ணிக்கையை அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே அளவில் 50 சதவீதம் அதிகரித்தால், தமிழகத்தின் தொகுதிகள் 59 ஆக உயரும். இதனால் நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் தற்போதுள்ள அளவிலேயே பாதுகாக்கப்படும் என்பது திமுகவின் முக்கியமான கணக்கு.

mk stalin

ஸ்டாலின் ஸ்ட்ராங்

காரணம், மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. ஆனால் மக்கள் தொகை அடிப்படையில் மட்டும் தொகுதிகளை அதிகரித்தால், மக்கள் தொகை அதிகமாக உள்ள வட மாநிலங்களுக்கு அதிக இடங்கள் கிடைக்கும்.

இதனால் நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் குரல் குறையக்கூடும் என்ற அச்சம் இருக்கிறது. அந்தப் பாதிப்பைத் தவிர்ப்பதற்கான வாய்ப்பாகவே இந்த 50 சதவீத உயர்வை திமுக பார்க்கிறது.

2. 2051 வரை பாதுகாப்பு

இப்போதைய ஏற்பாட்டின்படி, 1971ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களின் தொகுதி விகிதாச்சாரத்தை மேலும் 25 வருடங்களுக்கு பாதுகாக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதாவது 2051 வரை தமிழகத்தின் பிரதிநிதித்துவம் தற்போதைய விகிதத்தில் தொடர முடியும்.

இல்லாவிட்டால் 2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப பிறகு தொகுதி மறுவரையறை நடக்கும்போது தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படலாம்... மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காகத் தமிழகத்துக்கு நாடாளுமன்றத்தில் குறைவான இடங்கள் கிடைக்கும் நிலை உருவாகக்கூடாது என்பதுதான் இங்கு முக்கியம். இந்த சான்ஸை இப்போது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று திமுக நினைக்கிறது.

3. மக்கள் பிரதிநிதிகள் அதிகரிப்பு

எம்பி தொகுதிகள் அதிகரித்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும்.. அதுபோல சட்டமன்ற தொகுதிகளும் அதிகரிக்கும்போது எம்எல்ஏக்களின் எண்ணிக்கையும் உயரும். உள்ளாட்சி அமைப்புகளிலும் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் ஒரு தொகுதிக்கு அதிகமான மக்கள் என்ற நிலை குறையலாம். மக்கள் தங்கள் பிரச்சினைகளை எடுத்து சொல்ல கூடுதல் பிரதிநிதிகள் கிடைக்கலாம்.

பெண்களுக்கு 3ல் ஒரு பங்கு இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும்போது, அவர்களுக்கான பிரதிநிதித்துவமும் அதிகரிக்கும். அதுமட்டுமல்ல, இப்போது இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம்... 50 வருடங்களாக தள்ளிப்போன இந்த வாய்ப்பு மீண்டும் 25 ஆண்டுகளுக்குத் தள்ளிப்போய்விடக் கூடாது என்பதும் இந்த முடிவுக்குப் பின்னாலுள்ள ஒரு கணக்கு.

4. காங்கிரஸின் கணக்கு

காங்கிரஸ் இந்த விவகாரத்தை தேசிய அளவிலான அரசியல் கணக்குகளுடன் அணுகுகிறது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் அதன் தேர்தல் நிலைப்பாடுகளும் இதில் முக்கியத்துவம் பெறுகின்றன... ஆனால் திமுகவை பொறுத்தவரை தமிழகத்தின் நலன்தான் முதன்மையானது.

திமுக ஒரு மாநிலக் கட்சி... தமிழகத்தின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அது உறுதியாக இருக்கிறது. கூட்டணியிலுள்ள கட்சி என்பதற்காக காங்கிரஸ் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் திமுக ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்துக்கு எது நல்லது என்று கருதுகிறதோ அந்த முடிவை எடுப்பதுதான் சரி என்று திமுக நினைக்கிறது.

5. தேசிய அரசியலில் ஸ்டாலின்

இந்தியா கூட்டணியின் தேசிய தலைவர்கள் சென்னைக்கு வந்து ஆலோசனை நடத்துவது திமுகவுக்கு தேசிய அளவில் முக்கியத்துவத்தை ஏற்படுத்துகிறது... தேசிய அரசியலில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் இடமாக சென்னை மாறுகிறது... இதன் மூலம் ஸ்டாலினுக்கும் தேசிய அரசியலில் தனி கவனம் கிடைக்கிறது.

அதே நேரத்தில், கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் தனது முடிவில் உறுதியாக இருப்பதன் மூலம் திமுக தனது தனித்த அரசியல் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது. ஒரு விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாட்டுடன் திமுகவின் முடிவு ஒத்துப்போவதால், 2 கட்சிகளும் கூட்டணி அமைக்கப்போகின்றன என்று அர்த்தமில்லை. பாஜகவுடன் திமுக கூட்டணி அமைப்பது வேறு விஷயம், தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பது வேறு விஷயம் என்பதே இந்த வாதத்தின் அடிப்படை.

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள்

ஆனால் திமுகவின் இந்த முடிவுக்கு எதிர்ப்புகளும் இருக்கின்றன. காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் இந்த மசோதாவை எதிர்க்கும் நிலையில், திமுக மட்டும் தனியாக ஆதரவு தெரிவிப்பது பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக விமர்சிக்கப்படுகிறது.

மேலும், தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது பாஜகவின் அடுத்தகட்ட திட்டங்களுக்கு உதவியாகிவிடுமோ என்ற அச்சமும் எழுப்பப்படுகிறது. குறிப்பாக, "ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டத்துக்கு இது வழிவகுத்துவிடக்கூடும் என்று விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் எச்சரிக்கின்றனர்.

எதிர்ப்புகள், விமர்சனங்கள்

இன்னொரு முக்கியமான கேள்வியும் இருக்கிறது. 2051 வரை தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் ஏற்பாடு இருந்தாலும், அதற்குப் பிறகு என்ன நடக்கும்? மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு நிரந்தரமான அரசியல் பாதுகாப்பு கிடைக்குமா? அல்லது மீண்டும் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை வந்தால் தமிழகத்துக்குப் பாதிப்பு ஏற்படுமா? என்ற கேள்விகளும் எழுகின்றன.

ஆக, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஸ்டாலினின் முடிவுக்குப் பின்னால் தமிழகத்தின் தொகுதிகளைப் பாதுகாப்பது, எதிர்கால பாதிப்பை தவிர்ப்பது, மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, கூட்டணியில் தனித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது, தேசிய அரசியலில் திமுகவின் முக்கியத்துவத்தை உயர்த்துவது எனப் பல கணக்குகள் இருக்கின்றன. ஆனால் இந்த முடிவு தமிழகத்துக்கு நீண்டகாலத்தில் எந்த அளவுக்குப் பலன் தரும் என்பதுதான் இனிமேல் எழப்போகும் மிக முக்கியமான கேள்வி.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+