இதென்ன பிரமாதம்.. பாஜக அரசின் EWS இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரித்து ஓட்டு போட்டது காங்கிரஸ்!
சென்னை: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பாஜக உடன் திமுக கூட்டணி சேரப்போவதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சிக்கின்றன. ஆனால், திமுக எதிர்த்த பாஜக அரசின் மசோதாக்களைக் கூட காங்கிரஸ் கட்சி ஆதரித்து வாக்களித்துள்ளது.
வட மாநிலங்களில் தேர்தல் வரவிருந்த சூழழில், EWS இட ஒதுக்கீட்டு மசோதா கொண்டுவரப்பட்டது. தேர்தலை கருத்தில் கொண்டு அந்த மசோதாவை அன்றைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்தன. இது சமூக நீதிக்கு எதிரானது என திமுக பேசியபோதும் காங்கிரஸ் கட்சி பாஜகவின் மசோதாவுக்கு ஆதரவாகவே வாக்களித்திருந்தது.

அன்றைக்கு காங்கிரஸ் என்ன செய்தது?
திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி, கடந்த 2019 ஆம் ஆண்டு பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கான (EWS) இட ஒதுக்கீடு மசோதாவின் மீதான வாக்கெடுப்பில் காங்கிரஸ் ஆதரவாக வாக்களித்ததைச் சுட்டிக்காட்டி உள்ளார்.
பாஜக கொண்டுவரும் ஒரு மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிப்பது என்பது அவர்களுடன் கூட்டணி அமைப்பதாக அர்த்தம் ஆகாது. 2019-இல் EWS மசோதா கொண்டுவரப்பட்டபோது, திமுக, ஆர்ஜேடி மற்றும் சில கட்சிகள் மட்டுமே அதற்கு எதிராக வாக்களித்தன. ஆனால், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அந்த மசோதாவை ஆதரித்தன என்று கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.
EWS மசோதா மீது திமுகவின் நிலைப்பாடு
2019 ஜனவரியில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கான (EWS) 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான அரசியலமைப்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்தபோது, திமுக அதை கடுமையாக எதிர்த்தது. மேலும், அந்த மசோதாவை ஒரு தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று திமுக எம்.பி கனிமொழி தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தார்.
ஆதரித்த காங்கிரஸ்
திமுக இந்த மசோதாவிற்கு எதிராக வாக்களித்த நிலையில், காங்கிரஸ் மற்றும் சிபிஐ(எம்) உள்ளிட்ட கட்சிகள் அதற்கு ஆதரவாக வாக்களித்தன. இந்த மசோதாவுக்கு ஆதரவாக சிபிஐஎம் எம்.பி ரங்கராஜன் பேசியபோது, திமுக எம்.பி கனிமொழி குறுக்கிட்டு வாக்குவாதம் செய்தார். கூட்டணி கட்சி எம்.பியின் பேச்சை திமுக எம்.பி கனிமொழி கண்டித்த சம்பவம் அன்றைக்கு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
ஸ்டாலின் நிலைப்பாடு
2022 நவம்பர் 7 அன்று, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கான (EWS) 10% இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், 2022 நவம்பர் 12 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார்.
அந்தக் கூட்டத்தில், 103-வது அரசியலமைப்புத் திருத்தத்தை நிராகரிப்பதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், இது குறித்து மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் இடதுசாரி கட்சிகளும் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டன. நாடாளுமன்றத்தில் இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் ஆதரித்திருந்த போதிலும், தமிழ்நாட்டில் திமுக அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு இந்தக் கட்சிகளின் தமிழக பிரிவுகள் ஆதரவு தெரிவித்தன. தமிழ்நாடு அரசு EWS இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளது.
தொகுதி மறுசீரமைப்பு மசோதா
பாஜக அரசின் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை திமுக ஆதரிக்கக்கூடாது என காங்கிரஸ் தலைவர்கள் இன்று திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கேட்டுக்கொண்டனர். ஆனால், தமது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாகவும், தமிழ்நாட்டின் நலன் கருதியே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெளிவுபடுத்தியுள்ளார் ஸ்டாலின்.


Click it and Unblock the Notifications
