திமுக செய்தது வரலாற்றுப் பிழையா? சோனியா நேரில் பேசியும் மாறாத ஸ்டாலின்.. இதுதான் காரணமா
சென்னை: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்திருப்பது இந்தியா கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது... சோனியா காந்தி நேரில் சந்தித்துப் பேசியும் தனது முடிவில் இருந்து ஸ்டாலின் பின்வாங்கவில்லை. தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது. இது அரசியல் ரீதியாக சரியான முடிவா? காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் இடையிலான உறவு இனி என்னவாகும்? இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர்கள் தராசு ஷ்யாம், ஜெனராம் தெரிவித்த கருத்துகள் கவனிக்கத்தக்கவை.
பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம், "இந்தியா கூட்டணி அடுத்ததாக இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்கும். கடந்த ஏப்ரல் 17ம் தேதி இந்த மசோதாவைத் தோற்கடித்தார்கள். ஆனால், நவம்பர் 30ம் தேதி அதேபோல செய்ய முடியுமா என்று தெரியவில்லை.

தேசியவாத காங்கிரஸ்
திமுகவும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ஆதரவு கொடுக்கின்றன. மத்திய அரசு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை எப்படிப் பெறப்போகிறது என்பதும் தெரியவில்லை. காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் வெளிநடப்பு செய்யலாம் அல்லது வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருக்கலாம். ஆனால், இவையெல்லாம் நேர்மையான அணுகுமுறைகள் கிடையாது.
திமுகவின் முடிவை வரலாற்றுப் பிழை என்றும், அரசியல் குற்றம் என்றும் சொல்பவர்கள் இந்தப் பிரச்சினையை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் பேசுகிறார்கள். சோனியா காந்தி நேரடியாக வந்து திமுக தலைவரைச் சந்தித்திருப்பது முக்கியமான விஷயம். 2 கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒருவரை ஒருவர் எதிரியாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. நண்பர்களாகத் தொடரலாம் என்பதைத்தான் இந்தச் சந்திப்பு உணர்த்துகிறது.
திமுக முடிவு
இந்த மசோதாவில் எல்லா மாநிலங்களுக்கும் 50 சதவீதம் இடங்களை அதிகரிப்பது முக்கியமான அம்சம். இதற்கு திமுக ஆதரவு கொடுத்திருப்பது சரியான முடிவு. தற்போதுள்ள 543 தொகுதிகளையும் மாற்றமில்லாமல் வைத்திருக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக ஏற்காது.
இப்போது மசோதா தோற்கடிக்கப்பட்டு, 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மறுவரையறை நடந்தால் தென் மாநிலங்களுக்குப் பெரிய பாதிப்பு ஏற்படும். தமிழகத்துக்கு கிட்டத்தட்ட 10 தொகுதிகள் குறையலாம். மசோதாவைப் படித்து, எம்.பி.க்கள், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே திமுக இந்த முடிவை எடுத்திருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கான வழியில் ஆபத்துகளை எதிர்கொள்ளும். ராகுல் காந்தி எல்லோருக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறையைத் திணிக்கக் கூடாது" என்கிறார் ஜென்.ராம்
தொகுதி மறுவரையறை
அதேபோல மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் ஒரு சேனலுக்கு தந்த பேட்டியில், "கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் இருக்கிறோம். இப்போது தொகுதி மறுவரையறையை மீண்டும் தள்ளிப்போட்டால், இன்னும் 25 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அப்படி நடந்தால் மொத்தம் 75 ஆண்டுகள் இந்த மாற்றத்துக்காகக் காத்திருந்த நிலை ஏற்படும்.
2027 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மறுவரையறை நடந்தால் தமிழகத்துக்கு குறைந்தபட்சம் 10 மக்களவைத் தொகுதிகள் குறையலாம். எனவே, அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக 50 சதவீதம் தொகுதிகளை அதிகரிக்கும் தற்போதைய ஏற்பாட்டை ஆதரிப்பதுதான் சரியான முடிவு.
தமிழகத்தின் நலன்
மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது மக்களுக்குத்தான் நல்லது. எம்.பி., எம்எல்ஏக்கள் மட்டுமல்லாமல் உள்ளாட்சி அமைப்புகளிலும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை எளிதில் அணுக முடியும்.
தொகுதி மறுவரையறை ஆணையத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் உறுப்பினர்கள் இருப்பதால், பாஜக நினைத்தபடி தொகுதி எல்லைகளை மாற்றிவிட முடியாது. இது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் அரசியல் வாதம்.
காங்கிரஸ் உத்தரப் பிரதேசம், பஞ்சாப் தேர்தல்களைக் கணக்கில் வைத்து முடிவெடுக்கிறது என்பதற்காக திமுக ஏன் தமிழகத்தின் நலனை விட்டுக்கொடுக்க வேண்டும்? ஒவ்வொரு கட்சியும் தங்கள் மாநிலத்தின் தேவைக்கு ஏற்ப முடிவெடுக்க வேண்டும். தமிழகத்துக்கு மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது நல்லது என்பதால் திமுக இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. இதை பாஜகவின் அரசியல் வெற்றியாகவும் பார்க்க முடியாது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
