ஐடி ரெய்டு: வீட்டுக்குள் ஒண்ணும் காணோம்.. அண்ணாந்து மரத்தை பார்த்தால் ‘மர்ம பெட்டி’! சிக்கிய 1 கோடி!
பெங்களூர் : கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா நடப்பதாக புகார்கள் கிளம்பி வரும் நிலையில், அதிரடி ரெய்டுகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் வேட்பாளர் ஒருவரின் சகோதரர் வீட்டில் மரத்தில் தொங்கிய பணப் பெட்டியை ஐடி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதையொட்டி தலைவர்களின் இறுதிக்கட்ட பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பெருமளவில் பணம் வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. இதுவரை ரூ.110 கோடி ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
புத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வீட்டில் அசோக் குமார் ராய், கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது வீடு, மைசூருவில் உள்ள அவரது சகோதரர் சுப்பிரமணிய ராயின் வீடு ஆகியவற்றில் சோதனை நடைபெற்றது. இதில் வீட்டுக்குள் பெரிய அளவில் ரொக்கப்பணம் சிக்கவில்லை.
ஐ.டி அதிகாரிகள் சுப்பிரமணிய ராயின் வீட்டின் பின்புறம் இருந்த அலங்கார மரத்தில் ஒரு பெரிய அட்டைப்பெட்டி இருப்பதை கண்டனர். இதனால் சந்தேகம் ஏற்பட்டதால் அதனை உலுக்கி எடுத்து திறந்து பார்த்தனர். அதில் ரூ.500, ரூ.2000 நோட்டுக் கட்டுகள் ரூ. 1 கோடி அளவுக்கு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் மரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, சுப்பிரமணிய ராயிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் வேட்பாளரின் சகோதரர் வீட்டின் பின்புறம் மரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications