உட்சபட்ச நீர்மட்டத்தை எட்டும் கபினி.. காவிரியில் வினாடிக்கு 27,000 கனஅடி நீர் திறப்பு!
பெங்களூர்: கர்நாடகாவின் கபினி அணைக்கு நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவு 27,000 ஆக அதிகரித்திருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக தற்போது அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவும் அதிகரித்திருக்கிறது.

கடந்த சில நாட்களாகவே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கபினி அணையை ஒட்டிய பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. கனமழை காரணமாக அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 31,746 கனஅடியாக உயர்ந்திருக்கிறது. இந்த அணையின் கொள்ளளவு 19.52 டிஎம்சி ஆகும். இதில் 18.60 டிஎம்சி தண்ணீர் தற்போது உள்ளது. எனவே அணைக்கு வரும் நீரில் முக்கால்வாசி, அப்படியே திறந்துவிடப்படுகிறது.
கர்நாடகாவின் குடகு மற்றும் கேரளாவின் வயநாடு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழைதான் நீர்வரத்து அதிகரிக்க காரணம். அதேபோல ஹாரங்கி அணையின் நீர் மட்டமும் அதிகரித்திருக்கிறது. எனவே அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவும் அதிகரித்திருக்கிறது. கேஆர்எஸ் அணையை பொறுத்தவரை 100 அடியை நீர் மட்டம் எட்ட இருக்கிறது.
அடுத்த ஒரு வாரத்திற்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துக்கொண்டுதான் இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அணைகள் முழு கொள்ளவை எட்டி வருவதால், நீர் திறப்பும் அதிகரித்திருக்கிறது. எனவே, கர்நாடகா-தமிழ்நாடு இடையே நீர் தொடர்பான பிரச்சனை தற்காலிகமாக அமைதியடைந்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications
