உச்சநீதிமன்றம் சொன்னாலும் கர்நாடகாவில் தக் லைஃப் வெளியாகாது! ஓடிப்போன விநியோகஸ்தர்.. புதுபிரச்சனை
பெங்களூர்: கர்நாடகாவில் ‛தக் லைஃப்' திரைப்படத்துக்கு தடை கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தான் கர்நாடகாவில் ‛தக் லைஃப்' திரைப்படம் வெளியாகாது என்று அந்த படத்தின் விநியோகஸ்தர் வெங்கடேஷ் கமலகர் கூறியுள்ளதோடு கன்னட அமைப்பினரின் போன்கால் காரணமாக அவர் ரகசிய இடத்துக்கு ஓட்டம் பிடித்துள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா உள்பட பல திரைப்பிரலங்கள் நடித்துள்ள திரைப்படம் ‛தக் லைஃப்'. கடந்த 5ம் தேதி கர்நாடகா தவிர அனைத்து இடங்களிலும் வெளியானது. இந்த திரைப்படம் சூப்பர் என்று ஒருதரப்பினரும், எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று இன்னொரு தரப்பினரும் கூறி வருகின்றனர். திரைப்படத்துக்கு இப்படி கலவையான விமர்சனம் வருகிறது.

இந்த திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாமல் இருக்க கமல்ஹாசன் கூறிய கருத்து தான் காரணம்.. ரிலீசாகும் முன்பு படத்தின் இசை வெளியீட்டு சென்னையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ் குமார் பங்கேற்றார்.
அப்போது ‛‛தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்'' என்று கமல்ஹாசன் பேசினார். இதற்கு கன்னட அமைப்பினர், கர்நாடகா திரைப்பட வர்த்தக சங்கத்தை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கன்னட அமைப்பினர் கூறினர். மன்னிப்பு கேட்டால் மட்டுமே கர்நாடகாவில் திரைப்படம் வெளியிடப்படும் என்று கர்நாடகா திரைப்பட வர்த்தக சங்கம் அறிவித்தது. இதையடுத்து ‛தக் லைஃப்' திரைப்படம் கர்நாடகாவில் கடந்த 5ம் தேதி வெளியாகவில்லை.
இதையடுத்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தை அணுகியபோது படத்தை திரையிட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பிறகு உச்சநீதிமன்றத்தை கமல்ஹாசன் தரப்பு நாடியது. உச்சநீதிமன்றம் கர்நாடகா அரசை கண்டித்தது. "கர்நாடகாவில் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது. திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். உரிய சான்றிதழ் பெற்ற பின் ஒரு திரைப்படத்தை வெளியிட எல்லாருக்கும் உரிமை உண்டு'' என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவை தொடர்ந்து கர்நாடகாவில் ‛தக் லைஃப்' திரைப்படம் வெளியானால் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அந்த மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இதனால் கர்நாடகாவில் ‛தக் லைஃப்' திரைப்படம் வெளியாகும் என்று பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தான் தற்போது அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட வெங்கடேஷ் கமலகர் என்ற விநியோகஸ்தர் தான் உரிமம் பெற்றுள்ளார். இந்நிலையில் தான் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கினாலும் கூட ‛தக் லைஃப்' திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடப்படாது என்று அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ‛இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், ‛‛நான் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய மாட்டேன். இதற்கு பல காரணங்கள் உள்ளது. கர்நாடகாவில் அந்த திரைப்படத்தை விநியோகம் செய்யும் உரிமையை நான் பெற்றிருந்தேன். எந்த படத்தை எடுத்து கொண்டாலும் கூட முதல் 2 வாரங்களில் தான் வசூலை குவிக்கும். ஆனால் இப்போது திரைப்படம் வெளியாகி 2 வாரத்துக்கு மேலாகிவிட்டது. அதோடு தமிழ்நாட்டிலும் இந்த திரைப்படம் நன்றாக போகவில்லை'' என்று கூறியுள்ளார்.
முன்னதாக உச்சநீதிமன்றம் திரைப்படத்துக்கு தடை விதிக்க முடியாது என்று கூறியதால் அது கன்னட அமைப்பினருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சிலர் படத்தை திரையிடாமல் தவிர்க்க வேண்டும் என்று தியேட்டர்களின் உரிமையாளர்களிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் விநியோகஸ்தர் வெங்கடேஷ் கமலகருக்கும் கன்னட அமைப்பினர் தொடர்ந்து போன் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அவர் யாருக்கும் தெரியாமல் ரகசிய இடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications