பிரபல நடிகர் உமேஷ் மரணம்.. சிகிச்சையின்போதும் காமெடியால் மகிழ்வித்தவரின் உயிரை பறித்த புற்றுநோய்
பெங்களூர்: பிரபல நடிகர் மைசூர் உமேஷ் தனது 80வது வயதில் இன்று காலமானார். நடிகர் சிவாஜி கணேஷன், நடிகர் ரஜினிகாந்துடன் நடித்துள்ள கன்னட நடிகர் உமேஷ் கல்லீரல் புற்றுநோயால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் இன்று பிரிந்தது.
கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் உமேஷ். இவர் மைசூரை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் ஸ்ரீகண்டய்யா உமேஷ். மைசூரை சேர்ந்தவர் என்பதால் மைசூர் உமேஷ் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

இவர் தனது 4வது வயதிலேயே மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். முதலில் அவர் மேடை நாடக நடிகர் ஹிரண்யாவின் குழுவில் இருந்தார். பிறகு குப்பி வீரண்ணா என்பவரின் குழுவில் சேர்ந்து நடித்தார்.
பிறகு கன்னட திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். அவரது முதல் திரைப்படம் 'மக்களா ராஜ்யா' என்பதாகும். கன்னடம், தமிழ் என்று 350க்கும் அதிகமான கன்னட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் 'நாகரஹொலே, குரு சிஷ்யரு, அனுபமா, காமனா பில்லு, வெங்கட இன் சங்கடா' உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். .
மறைந்த நடிகர்கள் ராஜ்குமார், விஷ்ணுவர்தன், அம்பரீஷ், ஸ்ரீநாத், சங்கர் நாக், சரோஜா தேவி உள்ளிட்டவர்களுடன் நடித்துள்ளார்.
தமிழில் நடிகர்கள் சிவாஜிகணேசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார். இந்நிலையில் தான் நடிகர் உமேஷ் பெங்களூர் ஜேபி நகரில் வசித்து வந்தார். அவருக்கு வயது 80. கடந்த அக்டோபர் மாதம் அவர் தனது வீட்டு கழிவறையில் கால்தவறி கீழே விழுந்தார். அவரது கை மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதோடு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. கல்லீரல் புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டு இருப்பதும், அவரது வயது முதிர்வால் அறுவை சிகிச்சை செய்ய முடியாததும் தெரியவந்தது. அதோடு அவர் உடலளவில் திடகாத்திரமாக இருந்தாலும் கூட புற்றுநோய் அவரது உடலில் பல இடங்களுக்கும் பரவியதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையின் பெட்டில் இருந்து அவர் காமெடிகள் செய்து வெளியிட்ட வீடியோக்கள் ரசிகர்களை கவர்ந்தது. அதோடுஅவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று கூறினர்.
இந்நிலையில் தான் சிகிச்சை பலனின்றி உமேஷ் இன்று காலமானார். அவரது உடல் பெங்களூருவில் உள்ள ரவீந்திரா கலாசேத்திராவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் அஞ்சி செலுத்தி வருகின்றனர். நாளை அவரது உடல் இறுதி சடங்குடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications