உலகத்தில் நதிநீரை "பதுக்கி" வைப்பது கர்நாடகா ஒன்லி- தமிழ்நாட்டுக்கான காவிரி நீர் கூடுதலாக திறப்பு!
பெங்களூர்: கர்நாடகாவில் 132 ஆண்டுகாலத்தில் இல்லாத ஆகப் பெரும் வறட்சி நிலவுகிறது; குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் கர்நாடகாவில் தட்டுப்பாடு நிலவுகிறது என்கிற தம்முடைய வாதத்தையே பொய் என்பதை இப்போது நிரூபித்துக் கொண்டிருக்கிறது கர்நாடகா.
காவிரியில் தமிழ்நாடு அரசு முதலில் 24,000 கன அடி நீரை திறந்துவிட கோரியது. ஆனால் காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையம், உச்சநீதிமன்றம் ஆகியவை வினாடிக்கு 5,000 கன அடிநீர், வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்றெல்லாம் ஆணித்தரமாக உத்தரவிட்டது.

பஞ்சப்பாட்டும் ஒப்பாரியும்: கர்நாடகா அரசோ, காவிரியில் தண்ணீரே இல்லை; வறட்சி நிலவுகிறது; அதுவும் 132 ஆண்டுகாலத்தில் இல்லாத பெரும் வறட்சி; கர்நாடகாவின் ஒட்டுமொத்த தாலுக்காக்களுமே வறட்சி பாதித்துவிட்டது; மத்திய குழுவையும் அழைத்துவந்துவிட்டோம் என ஓவராக பஞ்ச ஒப்பாரி வைத்தது.
தூண்டிவிட்ட பாஜக: அத்துடன் கர்நாடகா அரசியல் கட்சிகள் நிற்கவில்லை. பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள், தமிழ்நாட்டுக்கு சொட்டு நீரைக் கூட தரக் கூடாது; ரத்தத்தை கூட தருவோம் என்றெல்லாம் இனவெறித்தனமாக பேசவும் போராட்டங்களை நடத்தவும் தூண்டிவிட்டு இடைவிடாத முழு அடைப்புகளை நடத்தின.
அணைகள் நிரம்பின: இதன்பினர் குடகு மாவட்டத்தில் கனமழை பெய்து கேஆர்எஸ் அணைக்கும் கேரளா வயநாட்டில் கனமழை பெய்து கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்தது. கர்நாடகாவின் கேஆர்எஸ் அணையில் 100 அடி நீர் இப்போதும் உள்ளது. கபினி அணையிலும் 57 அடி நீர் இருக்கிறது. இருந்த போதும் காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை.
நதிநீரை பதுக்கிய கர்நாடகா: தற்போது கடந்த 2 நாட்களாக வினாடிக்கு 6,000 கன அடி அப்புறம் வினாடிக்கு 9,000 கன அடி ரேஞ்சுக்கு தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட்டுக் கொண்டிருக்கிறது கர்நாடகா. இவ்வளவு நீரை கர்நாடகா தனது அணைகளில் பதுக்கி வைத்துக் கொண்டு தமிழ்நாட்டுக்கு பச்சை துரோகம் எனும் வஞ்சகம் செய்ததை தம்முடைய நடவடிக்கையாலே ஒப்புக் கொண்டிருக்கிறது! உலகத்திலேயே நதிநீரை பதுக்கி வைத்திருக்கும் ஒரே ஊரு கர்நாடகா என வருங்கால வரலாறு கல்வெட்டில் எழுதி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பது சமூக வலைதளங்களில் வலம் வருகிற கருத்து.












Click it and Unblock the Notifications