கர்நாடகாவில் ஓ பன்னீர் செல்வம் அணி போட்டி?எடப்பாடியை முந்தி எடியூரப்பாவை சந்தித்த புகழேந்தி!பின்னணி
பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில் தமிழர்கள் அதிகம் உள்ள 3 தொகுதிகளை ஒதுக்க அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி சார்பில் பாஜகவிடம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் தான் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமியை முந்தி ஓ பன்னீர் செல்வம் அணியினர் இன்று கர்நாடகா மாநில முன்னாள் பாஜக முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து பேசியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை மே 13ல் நடக்கிறது. இந்நிலையில் தான் கர்நாடகா சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட பாஜகவிடம் வாய்ப்பு கோரப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக கூட்டணியில் உள்ளன. இந்த கூட்டணியின் அடிப்படையில் கர்நாடகாவில் பாஜக கூட்டணியில் அதிமுகவை இணைத்து கொண்டு தமிழர்கள் அதிகம் வசிக்கும் 3 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் பாஜக தலைவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இதற்கிடையே தான் ஓ பன்னீர் செல்வம் தரப்பிலும் கர்நாடகா தேர்தலில் களமிறங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ஓ பன்னீர் செல்வம் தரப்பும் விரைவில் பாஜக தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அதன்படி இன்று பெங்களூரில் கர்நாடகா முன்னாள் முதல்வரும், பாஜகவின் முகமாகவும் இருக்கும் எடியூரப்பாவை ஓ பன்னீர் செல்வம் அணியினர் சந்தித்து பேசியுள்ளனர். ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி தலைமையில் நிர்வாகிகள் எடியூரப்பாவை இன்று சந்தித்து பேசினர்.
இந்த வேளையில் கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் உள்ள சட்டசபை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கும்படி கோரிக்கை வைத்தனர். மேலும் தமிழர்கள் வெற்றி வாய்ப்பு நிர்ணயிக்கும் தொகுதிகள் பற்றிய விபரங்களை எடியூரப்பாவிடம் குறிப்பிட்டனர். அதோடு தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்குவதன் மூலம் மாநிலம் முழுவதும் வசிக்கும் தமிழர்களின் ஆதரவு என்பது பாஜகவுக்கு கிடைக்கும் என்பதையும் எடுத்து கூறினர்.












Click it and Unblock the Notifications