டப்பைட்.. முதல்வர் பொம்மை முதல் எடியூரப்பா மகன் வரை.. கர்நாடகாவில் 10 ‛ஹைவொல்டேஜ்’ தொகுதி ரிசல்ட்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு துவங்கிய நிலையில் பாஜகவில் பசவராஜ் பொம்மை முதல் எடியூரப்பா மகன் விஜயேந்திரா வரையும், காங்கிரஸில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, டிகே சிவக்குமார் முதல் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் வரை போட்டியிடும் 10 முக்கிய தொகுதிகளின் ரிசல்ட் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
கர்நாடகா மாநிலத்தில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 10ம் தேதி ஒரே கட்டமாக நடந்த தேர்தலில் 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகியது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஜேடிஎஸ், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி, மாயாவதியின் பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றன. மொத்தம் 2,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இருப்பினும் நேரடி போட்டி என்பது ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே தான் உள்ளது.
கர்நாடகாவில் 34 இடங்களில் மொத்தம் 36 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. ஓட்டு எண்ணும் பணிக்கு தொகுதிக்கு ஒருவர் என 224 தேர்தல் அலுவலர்கள், 317 உதவி தேர்தல் அலுவலர்கள், 4,256 மேற்பார்வையாளர்கள், 4256 உதவியாளர்கள், 4,256 நுண் பார்வையாளர்கள் என 14 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பணியில் ஈடுபட்டனர். 224 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை 4,256 மேஜைகளில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ஓட்டு எண்ணும் பணியை தொடர்ந்து 36 மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி 144 தடையும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.. அதோடு மாநிலம் முழுவதும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்த நிலையில் 136 இடங்களில் வென்று காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் கர்நாடகா தேர்தல் முடிவு எப்படி அமையும் என இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.. மேலும் கர்நாடகாவில் 10 முக்கிய தொகுதிகளின் ரிசல்ட் எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் உருவானது. இந்த தொகுதிகள் தான் கர்நாடகா தேர்தலில் ஹைவோல்டேஜ் தொகுதியாக இருந்த நிலையில் ரிசல்ட் தற்போது வெளியாகி உள்ளது.
முதல்வர் தொகுதி: அதன்படி முதல்வர் பசவராஜ் பொம்மை போட்டியிடும் ஹாவேரி மாவட்டம் சிக்கான் தொகுதியின் ரிசல்ட்டை அனைவரும் எதிர்பார்த்தனர். பசவராஜ் பொம்மை அரசு மீது ஊழல், முறைகேடு, 40 சதவீத கமிஷன் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் அவரது தொகுதி மீது அனைவரின் கவனமும் திரும்பியது. இந்த தொகுதியில் பசவராஜ் பொம்மை வெற்றி பெற்றார். பசவராஜ் பொம்மை 1 லட்சத்து 16 ஆயிரம் ஓட்டுகள் பெற்ற நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பதான் யாசீர் ரஹ்மத் கான் 64,038 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.
சித்தராமையா தொகுதி: அதன்பிறகு மைசூர் மாவட்டம் வருணா தொகுதியை கூறலாம். இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா களமிறங்கி உள்ளார். முதல்வர் பதவி மீது கண்வைத்துள்ள சித்தராமையா கடந்த முறை பாதாமியில் வெற்றி பெற்ற நிலையில் இந்த தேர்தலில் சொந்த தொகுதியான வருணாவில் போட்டியிட்டுள்ளார். இதனால் சித்தராமையாவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பாஜகவின் வீட்டு வசதித்துறை அமைச்சர் சோமண்ணா போட்டியிடுகிறார். அதேபோல் சோமண்ணா இன்னொரு தொகுதியான சாம்ராஜ் நகரிலும் பாஜக சார்பில் களமிறங்கி இருந்தார். இதில் வருணாவில் சித்தராமையா வெற்றி பெற்றார். சித்தராமயைா 1 லட்சத்து 19 ஆயிரத்து 816 ஓட்டுகள் பெற்ற நிலையில் பாஜக வேட்பாளர் சோமண்ணா 73 ஆயிரத்து 653 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். அதேபோல் சாம்ராஜ்நகர் தொகுதியிலும் சோமண்ணா தோல்வியடைந்தார்.

டிகே சிவக்குமார் தொகுதி: அதேபோல் ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதியில் தான் காங்கிரஸ் மாநில தலைவர் டிகே சிவக்குமார் போட்டியிட்டார். 2008, 2013, 2018 தேர்தல்களில் இங்கு வெற்றி பெற்ற டிகே சிவக்குமார் 4வது முறையாக கனகபுராவில் இறங்கினார். இவரும் காங்கிரஸ் வென்றால் முதல்வர் பதவிக்கு குறிவைத்துள்ளார். இதனால் டிகே சிவக்குமாரை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக அவரை எதிர்த்து பாஜகவில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர் அசோக் நிறுத்தப்பட்டார். ஆனால் கனகபுரா தொகுதியில் டிகே சிவக்குமார் 1 லட்சத்து 43 ஆயிரத்து 23 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக ஜேடிஎஸ் கட்சிியன் நாகராஜூ 20,631 ஓட்டுகள் பெற்று 2வது இடம் பிடித்தார். பாஜகவின் ஆர் அசோக் 19,753 ஓட்டுகள் மட்டுமே பெற்று 3வது இடம் பிடித்தார். கனகபுரா தொகுதியோடு சேர்த்து ஆர் அசோக் பெங்களூர் பத்மநாபநகர் தொகுதியிலும் போட்டியிட்ட நிலையில் அங்கு அவர் வெற்றி பெற்றார்.
ஜேடிஎஸ் குமாரசாமி தொகுதி: ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டனா தொகுதியில் ஜேடிஎஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான எச்டி குமாரசாமி போட்டியிட்டார். இவர் 96,592 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து பாஜகவில் போட்டியிட்ட சிபி யோகேஷ்வர் 80,677 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். அதேபோல் குமாரசாமியின் மகன் நிகில் கவுடா, ராமநகர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட நிலையில் தோல்வியடைந்தார். இவர் 76,975 ஓட்டுகள் பெற்ற நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் இக்பால் உசேன் 87,690 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மண்டியாவில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிகில் கவுடாவுக்கு இந்த தேர்தல் முக்கியமானதாக பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் அவர் சரிவை சந்தித்துள்ளார்.
ஜெகதீஷ் ஷெட்டர் தொகுதி: உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் பாஜகவில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டதால் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் அங்கிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். காங்கிரஸ் சார்பில் அதே தொகுதியில் ஜெகதீஷ் ஷெட்டர் போட்டியிட்டார். இவரை வீழ்த்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எடியூரப்பா ஆகியோர் நேரடியாக களமிறங்கி பணி செய்தனர். இதனால் இந்த தொகுதியின் ரிசல்ட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் ஜெகதீஷ் ஷெட்டர் படுதோல்வியடைந்தார். ஜெகதீஷ் ஷெட்டர் 60775 ஓட்டுகள் பெற்ற நிலையில் பாஜக வேட்பாளர் மகேஷ் தென்கின்காய் 95,064 ஓட்டுகள் பெற்று வாகை சூடினார்.
எடியூரப்பாவின் மகன் போட்டி: கர்நாடகாவில் பாஜகவின் முகமாக இருக்கும் எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து விலகி உள்ளார். இவர் எம்எல்ஏவாக உள்ள சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தொகுதியில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா போட்டியிட்டார். இதனால் அந்த தொகுதியும் நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. இந்நிலையில் சிகாரிப்புராவில் விஜயேந்திரா வெற்றி பெற்றார். இவர் 81,810 ஓட்டுகள் பெற்ற நிலையில் சுயேச்சையாக களமிறங்கிய நாகராஜகவுடா 70,802 ஓட்டுகள் பெற்று டப் பைட் கொடுத்தார். இருப்பினும் கடைசியில் விஜயேந்திரா வெற்றி பெற்றார்.

சிடி ரவி: தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளராக உள்ள சிடி ரவி சிக்கமகளூர் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தார். 2004, 2008, 2013, 2018 ஆகிய தேர்தலில் சிக்கமகளூரில் வெற்றி பெற்ற சிடி ரவி மீண்டும் அங்கு போட்டியிட்டார். பாஜக வென்று ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு முதல்வர் வாய்ப்பு வழங்க நினைத்தால் அதில் சிடி ரவியின் பெயர் உள்ளதாக கூறப்பட்டது. இதனால் சிடி ரவியின் தொகுதியும் முக்கியத்துவம் பெற்றது. இந்நிலையில் தான் சிடி ரவி தோல்வியடைந்தார். சிடி ரவி 79,128 ஓட்டுகள் பெற்ற நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் தம்மையா 85,054 ஓட்டுகள் பெற்று வாகைசூடினார். சிடி ரவி தோற்றார்.
கார்கே மகன்: இதுதவிர கலபுரகி மாவட்டம் சித்தாபுரா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே போட்டியிட்டார். 2013, 2018 தேர்தலில் இந்த தொகுதியில் வெற்றி பெற்ற மல்லிகார்ஜூன கார்கே மீண்டும் களமிறங்கினார். இதில் 81,323 ஓட்டுகள் பெற்று பிரியங்க் கார்கே வெற்றி பெற்றார். இவரை எதிர்த்த பாஜகவின் மணிகண்ட ராதோடு 67,683 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார். அதேபோல் துமகூரு மாவட்டம் கொரட்டெகெரே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மாஜி துணை முதல்வர் பரமேஸ்வர் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியில் தலித் ஒருவரை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ள நிலையில் பரமேஸ்வரின் தொகுதியும் முக்கியத்துவம் பெற்றது. இறுதியில் பரமேஸ்வர் வெற்றி பெற்றார். பரமேஸ்வர் 79,099 ஓட்டுகள் பெற்று வாகை சூடினார். இவரை எதிர்த்த போட்டியில் ஜேடிஎஸ் வேட்பாளர் சுதாகர் லால் 64,752 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்!












Click it and Unblock the Notifications